செய்திகள்

232 தொகுதிகளிலும் மறு தேர்தல்: திருமாவளவன் கோரிக்கை

Published On 2016-06-02 12:56 IST   |   Update On 2016-06-02 16:31:00 IST
கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதால் தமிழகத்தில் 232 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சிதம்பரத்தில் திருமாவளவன் கூறியுள்ளார்.

சிதம்பரம்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக சட்டசபை தேர்தலின் போது பல்லாயிர கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா நடைபெற்றதால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளில் 100 சதவீதம் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. ஆகவே தமிழகத்தில் 232 தொகுதிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்.

தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

கோவையில் தலித் மாணவி ஒருவர் கடத்தி கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து அரசு தரப்பில் எந்த ஆறுதலும் கூறவில்லை. இது தலித் மக்களுக்கு எதிரான அலட்சியப்போக்கை காட்டுகிறது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். நான் பாராட்டு தெரிவித்தேன். ஆனால் அந்த திட்டங்கள் பொதுமக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை.

டாஸ்மாக் நேரம் பகல் 12 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனென்றால் குடிகாரர்கள் மாலையில் அதிகமாக குடிப்பது வழக்கம். ஆகவே காலையில் 2 மணி நேரம் குறைத்ததை மாலையில் 6 மணியில் இருந்து 10 மணியாக குறைத்திருந்தால் நன்றாக இருக்கும்.

காட்டுமன்னார் கோவிலில் நான் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றேன். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கேட்டேன். மேலும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.

தாமதமாக மக்கள் நலக்கூட்டணி அமைந்ததால் பொதுமக்களிடம் எங்கள் கோரிக்கைகள் சென்று சேரவில்லை. தொடர்ந்து மக்கள் நல கூட்டணி நீடிக்கிறது. நாளை பிறந்த நாள் கொண்டாடும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News