பெண்கள் உலகம்
ஸ்டோர் ரூமை பராமரிப்பது எப்படி

பெண்களே ஸ்டோர் ரூமை பராமரிப்பது எப்படி தெரியுமா?

Published On 2022-05-24 03:40 GMT   |   Update On 2022-05-24 03:40 GMT
எப்போதும் ஸ்டோர் ரூமில் வைக்கும் பொருட்களை, அதன் வகை மற்றும் பயனுக்கு ஏற்ப, தனித்தனி அட்டைப்பெட்டிகளில் அல்லது பைகளில் பிரித்து வைப்பது சிறந்தது.
வீட்டின் அனைத்து அறைகளையும் பராமரித்து, அவற்றில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை, ஸ்டோர் ரூமில் குவித்து வைத்து விடுவோம். அவசரத் தேவையின்போது, அந்த அறையில் நமக்குத் தேவையான ஒரு பொருளைத் தேடி எடுப்பதற்கு ஒரு நாள் ஆகிவிடும். ஸ்டோர் ரூமை எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்ப்போம்.

முதலில் ஸ்டோர் ரூமின் அளவை கவனிக்க வேண்டும். அதற்கு ஏற்றார்போல் பொருட்களை அடுக்கி வைக்க வேண்டும். இரண்டாவது அந்த அறையில் போதுமான அளவு வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லது அறையின் இரண்டு புறமும் மின்விளக்குகள் பொருத்துவது சிறந்தது.

எப்போதும் ஸ்டோர் ரூமில் வைக்கும் பொருட்களை, அதன் வகை மற்றும் பயனுக்கு ஏற்ப, தனித்தனி அட்டைப்பெட்டிகளில் அல்லது பைகளில் பிரித்து வைப்பது சிறந்தது. மேலும், அந்த பைகள் அல்லது அட்டைப்பெட்டியின் மீது உள்ளிருக்கும் பொருட்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை குறிப்பிடுவது நல்லது. இது அவசர நேரத்தில் நாம் தேடும் பொருளை எளிதாக எடுக்க உதவும்.

ஸ்டோர் ரூமில் பொருட்களை பக்கவாட்டில் அடுக்குவதை விட, நேர்கோடாக அடுக்குவது சிறந்தது. இது இட வசதியை ஏற்படுத்துவதுடன் பொருட்களை வகைப்படுத்தவும் எளிதாக இருக்கும். ஸ்டோர் ரூமில் ஜன்னல் அல்லது 'எக்சாஸ்ட் பேன்' கட்டாயம் இருக்க வேண்டும்.

அப்போதுதான் அறையினுள் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் நிலவும். இது அறையில் இருக்கும் தூசு வாசனை மற்றும் பழைய பொருட்களின் வாசனையை குறைக்கும். வாரம் ஒரு முறை ஸ்டோர் ரூமை சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் பூச்சிகள், ஒட்டடை மற்றும் தூசுகளிடம் இருந்து பொருளையும், அறையையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஸ்டோர் ரூமில் ஏர் பிரஷ்னர் அல்லது ரூம் பிரஷ்னரை தினமும் பயன்படுத்துவது நல்லது.

இதனால், தூசு, பழைய பொருள் வாசனையால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வித பாதிப்பும் வராது தடுக்க முடியும். மாதம் ஒரு முறை ஸ்டோர் ரூமில் உள்ள பொருட்களை எடுத்துப் பார்க்கவும். அப்போதுதான் நமக்குத் தேவையில்லாத பொருட்கள் இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடியும்.

மேலும், நாம் ஸ்டோர் ரூமில் என்னென்ன பொருட்கள் வைத்துள்ளோம் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவில் வைத்துக்கொள்ள உதவும். தனியாக ஸ்டோர் ரூம் இல்லாதவர்கள் வீட்டில் உள்ள பரண் அல்லது ஸ்லாப்களில் தேவையில்லாத பொருட்களை வைத்திருப்பார்கள். அவர்களும் இதே பராமரிப்பு முறையை பின்பற்றலாம்.
Tags:    

Similar News