லைஃப்ஸ்டைல்
ஒன்றுகூடி உறவாடும் `மகிழ்ச்சி அறை'

ஒன்றுகூடி உறவாடும் மகிழ்ச்சி அறை

Published On 2021-04-05 03:23 GMT   |   Update On 2021-04-05 03:23 GMT
அலுவலக வேலை நெருக்கடிகளை மறந்தும், வெளிவட்டார பிரச்சினைகளில் இருந்து அகன்றும், அந்த நாளில் மீதமுள்ள நேரத்தை சந்தோஷமாக செலவிட மகிழ்ச்சி அறை தேவைப்படுகிறது.
வந்தவர்: `உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்?'

வீட்டுக்காரர்: `நான்கு பேர் இருக்கிறோம்'

வந்தவர்: `யாரையும் இங்கு காணோம்.. எங்கே இருக்கிறார்கள்?'

வீட்டுக்காரர்: `ஒவ்வொருவரும் தனித்தனி அறையில் அமர்ந்து வேறு யாருடனாவது செல்போனில் பேசிக்கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால் கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டிருப்பார்கள்'

விடுமுறை நாட்களில் பல வீடுகளில் உண்மையான நிலவரம் இதுதான். இப்படி ஆளுக்கொரு அறையில் அடைந்துகிடக்காமல், குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒன்றுகூடி உறவாட `மகிழ்ச்சி அறை' ஒன்று தேவை. அலுவலக வேலை நெருக்கடிகளை மறந்தும், வெளிவட்டார பிரச்சினைகளில் இருந்து அகன்றும், அந்த நாளில் மீதமுள்ள நேரத்தை சந்தோஷமாக செலவிட மகிழ்ச்சி அறை தேவைப்படுகிறது. அங்கு `பேம்லி டைம்' செலவிடப்படவேண்டும்.

மகிழ்ச்சி அறை என்று தனியாக ஒன்றை உருவாக்க முடியாதவர்களும், ஒதுக்க வாய்ப்பில்லாதவர்களும் அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. வீட்டின் ஏதாவது ஒரு பகுதியில் அதற்காக சிறிய இடத்தை ஒதுக்கினால்போதும். லிவிங் ரூமில் இருக்கும் பொது இடம்- டைனிங் ஏரியாவில் கிடைக்கும் செமி பிரைவேட் ஸ்பேஸ்- தனிப்பகுதியான பெட் ரூம் போன்ற மூன்று பகுதிகளோடு சேர்ந்து இந்த மகிழ்ச்சி அறை அமைவது சிறந்தது.

பார்மல் லிவிங் ரூம் தவிர வேறு எந்த இடத்திலும் இதை அமைத்துக்கொள்ளலாம். டைனிங் ஏரியாவின் ஒரு மூலை, பால்கனி, பேக்யார்டு ஸ்பேஸ் போன்றவைகளிலும் மகிழ்ச்சி அறை அமைத்துக்கொள்ளலாம். சமையல் அறையோடு சேர்ந்து அல்லது அதன் அருகில் இதனை அமைப்பது சிறந்தது. சமையல் அறை அருகில் என்றால் அம்மாவும் உடன் சேர்ந்துகொள்ள அதிக வாய்ப்பிருக்கும். அம்மாவுக்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் சமையல் பணிகளில் ஒத்துழைப்பு கொடுக்கும் சூழ்நிலையும் உருவாகும்.

மகிழ்ச்சி அறையை தரைத் தளத்திலோ, முதல் தளத்திலோ அமைக்கலாம். குடும்பத்தில் உள்ள அனைவரும் சிரமமின்றி வந்து கூடும் விதத்தில் அந்த பகுதி அமைவது அவசியம். தரைத்தளமாக இருந்தால் லிவிங் ரூமின் மிக அருகில் இது இருக்கவேண்டாம். குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து உற்சாகமாக சிரித்து பேசி ஜாலியாக அந்த இடத்தில் இருக்கவேண்டும். அந்த சூழல் லிவிங் ரூமில் இருப்பவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு தரும் விதத்தில் அமைந்துவிடக்கூடாது.

மகிழ்ச்சிக்கான இடத்தை உருவாக்க வீட்டிற்குள் எங்கேயும் இடமில்லை என்றால், வீட்டின் பின்பகுதியில் அதற்கான இடத்தை தேர்வு செய்யலாம். பேக்யார்டின் ஒரு பகுதியில் இருக்கைகளை போட்டு அமரலாம். வீட்டின் அருகில் இடமிருந்தால் தடுப்புகள் மூலம் சிறிய அறை போன்றும் உருவாக்கலாம்.

அந்த இடம் நெருக்கடி நிறைந்ததாக இருக்கக்கூடாது. எல்லோரும் ஒன்றாக அமர்ந்து அரட்டையடிக்கவும், செஸ் விளையாடவும், ஓய்வாக கை கால்களை மடக்கி அமரவும் தேவையான இடவசதி இருக்கவேண்டும். திறந்த வெளியாக இருந்தால் சின்னசின்ன பார்ட்டிகளை அங்கே அமைத்துக்கொள்ளலாம். விருந்து, விழாக் காலங்களில் அங்கே தேவையான டெக்கரேஷன்களையும் உருவாக்கலாம்.

`இதற்கெல்லாம் எங்கள் வீட்டில் இடமே இல்லை' என்று கூறுகிறவர்கள், பெரிய பெட்ஷீட் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உட்கார்வதற்கு எந்த இடம் சவுகரியம் என்று நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் அதை விரியுங்கள். அந்த இடத்தில் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழ்ந்து, அதனை மகிழ்ச்சிக்கான இடமாக அங்கீகரித்துவிடுங்கள்.



குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக ஒரு இடத்தை அமைக்கும்போது அங்கே குடும்பத்தினர் அனைவரும் அமர்வதற்கான இட வசதி இருக்கவேண்டும் என்பதுபோல், அவர்கள் அனைவரின் மகிழ்ச்சிக்கு தேவையான பொருட்களும் அங்கே இடம்பிடித்திருக்கவேண்டும். ஆனால் அங்கிருந்துகொண்டு தனிப்பட்ட முறையிலான செயல்களை செய்துகொண்டிருக்கக்கூடாது. எல்லோரும் ஒருங்கிணைந்து மகிழ்ச்சியாக இருந்து அந்த பொழுதைக்கழிக்கவேண்டும் என்பது மிக முக்கியம்.

பார்மல் லிவிங் ரூமுக்கும், இந்த மகிழ்ச்சிப் பகுதிக்கும் வித்தியாசம் உண்டு. லிவிங் ரூமில் ஒவ்வொரு பொருளும் அது அதற்குரிய இடத்தில் கச்சிதமாக உட்கார்ந்திருக்கும். அங்கே எடுப்பதை எடுத்த இடத்தில்வைக்கவேண்டும் என்ற நிர்பந்தமும் உண்டு. ஆனால் மகிழ்ச்சிப் பகுதி அப்படி அல்ல. அங்கு ஓரளவு பொருட்கள் அங்கும் இங்குமாக சிதறிக்கிடக்கலாம். வரைமுறை அவசியமில்லை. ஆனாலும் ஒரு ஒழுங்குமுறையை அனைவரும் பின்பற்றவேண்டும். எல்லோரும் சுதந்திரமாக புழங்குவதற்கு அங்கே வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.

அங்கு பர்னிச்சர் குறைவாக இருந்தாலும், குஷன் தரை விரிப்புகளை நிறைய பயன்படுத்திக்கொள்ளலாம். இருக்கவும், படுக்கவும் உதவும் விதத்தில் அவை இருக்கவேண்டும். மகிழ்ச்சி அறையை இன்டீரியர் செய்யும்போது அதிக கவனம் தேவை. எளிதில் அழுக்கடையாத சாப்ட் பர்னிஷிங், எளிதாக சுத்தப்படுத்தும் விதத்திலான ப்ளோரிங் அவசியம். அந்த அறை சுத்தமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மனமகிழ்ச்சி குறைந்துபோய் விடும்.

அந்த அறை முழுக்க மகிழ்ச்சி ததும்பவேண்டும். அதனால் அந்த இடம் உங்களுக்கு ஸ்பெஷலானதாக இருக்கவேண்டியது அவசியம். அதற்காக சில விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்தவேண்டும். உங்கள் குடும்பத்தினருக்கு ஓவியம் வரைவதிலோ, கைவினைப் பொருட்கள் தயாரிப்பதிலோ ஆர்வம் இருந்தால், அதனை அவரவரே தயார்செய்து அங்கு வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் அந்த அறைக்கு `பெர்சனல் டச்' கொடுத்ததுபோல் இருக்கும். புதிய படைப்புகளை உருவாக்கும்போது பழையவற்றை எடுத்து மாற்றிவிடவேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான தருணங்கள் இருந்திருக்கும். அதனை போட்டோவாக படம்பிடித்து வைத்திருப்பீர்கள். அதில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் போட்டோக்களை மட்டும் தேர்ந்தெடுத்து பிரேம்செய்து அந்த அறைக்குள் மாட்டுங்கள். அது வழக்கமான பிரேம் ஆக இருக்கவேண்டியதில்லை. வித்தியாசமான வடிவங்களில் கோணல்மானலாககூட காட்சியளிக்கலாம். அந்த போட்டோக்களுக்கு அடிக்குறிப்பு வாசகங்கள் கொடுத்து, ஒரு கதைபோன்றுகூட உருவாக்கிவைக்கலாம்.

நீங்கள் அடிக்கடி வெளியூர் சுற்றுலா செல்லும் குடும்பமாக இருந்தால், மகிழ்ச்சி அறையின் சுவரில் பெரிய `மேப்' ஒன்றை ஒட்டிவையுங்கள். அதில் நீங்கள் இதுவரை சென்ற இடங்களை வட்டமிட்டுவைத்திடுங்கள். அதை பார்க்கும்போதெல்லாம் அங்கு சுற்றுலா சென்ற அந்த மகிழ்ச்சியான மனநிலைக்கு உங்களால் செல்ல முடியும். அந்த மேப்பை பார்க்கும்போது, அடுத்து எந்த இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும் என்பதை பற்றி விவாதித்து முடிவெடுக்கவும் வசதியாக இருக்கும்.

மகிழ்ச்சி அறையில் ஒரு ரைட்டிங் போர்டும் வைத்திருங்கள். அதில் மகிழ்ச்சியான- முக்கியமான விஷயங்களை எழுதிவையுங்கள். நீங்கள் மேற்கொள்ளவேண்டிய வழிபாடு- பிரார்த்தனைகளை பற்றிய குறிப்பும் அதில் இடம்பெறலாம். உங்கள் அடுத்த தலைமுறை பின்பற்ற வேண்டிய கொள்கை அடிப்படையான விஷயங்கள் அதில் இடம்பெறலாம். நீங்கள் எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதை அதன் மூலம் உங்களது புதிய தலைமுறையும் புரிந்துகொள்ளும்.

விரைவாக உங்கள் வீட்டில் ஒரு மகிழ்ச்சி அறையை உருவாக்குங்கள். எல்லோரும் ஒன்றுகூடுங்கள். ஜாலியாக பொழுதைக் கழியுங்கள். அங்கு நடைபெறும் முதல் மகிழ்ச்சியான தருணத்தை படம்பிடித்து, போட்டோவாக்கி சுவரில் பதியுங்கள்.
Tags:    

Similar News