லைஃப்ஸ்டைல்
வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு கூடுதல் சலுகைகள்

வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு கூடுதல் சலுகைகள்

Published On 2021-03-20 03:22 GMT   |   Update On 2021-03-20 03:22 GMT
வீட்டுக் கடன் என்பது நிலையான பிணையம் என்ற ஆதாரத்தை கொண்டுள்ளதால் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் அதற்கு முன்னுரிமை அளிக்கின்றன.
கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு தற்போது மெதுவாக ஏற்பட்டு வரும் பொருளாதார மீட்சி என்பது ரியல் எஸ்டேட் துறையில் அதிகமாக பிரதிபலிக்கும் என்று நிதி வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதற்கு ஏற்ற வகையில் தேசிய வங்கிகள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்து அறிவித்து இருக்கின்றன. மேலும், வீட்டுக் கடன்களுக்கு வசூலிக்கப்படும் செயலாக்க கட்டணத்தை (Processing Fees) முற்றிலும் தள்ளுபடி செய்வது பற்றியும் பல்வேறு வங்கிகளும், வீட்டுக் கடன் நிதி வசதி நிறுவனங்களும் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன.

பொதுத்துறை வங்கிகள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் ஆகியவை தற்போது வீட்டுக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் பக்கம் திரும்பியுள்ளன. வீட்டுக் கடன் என்பது நிலையான பிணையம் என்ற ஆதாரத்தை கொண்டுள்ளதால் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் அதற்கு முன்னுரிமை அளிக்கின்றன. மேலும் மாதாந்திர சம்பளதாரர்கள் மற்றும் சுயதொழில் செய்வோர் ஆகியோருக்கு வீட்டுக் கடன் பெறுவதில் பெரிய சிக்கல்கள் இருப்பதில்லை. சில வங்கிகள் வட்டி விகிதங்களை நடப்பு காலாண்டில் குறைத்து அறிவித்து இருப்பதுடன், வீட்டுக் கடன் விண்ணப்பம் செய்தவர்களுடைய கிரெடிட் புள்ளிகள் மற்றும் லோன் டூ வேல்யூ (Loan to Value) ஆகியவற்றை குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களை இணைத்து கணக்கிடுகின்றன.

வீட்டுக் கடன் பெறுவதற்கான நடைமுறைகள் தற்போது எளிமையாக மாற்றப்பட்டு இருப்பதால் வீடு மற்றும் மனை வாங்குவோர் தங்களுடைய கனவை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடன் பெற விரும்புபவர்கள் வங்கிகள் அளிக்கக்கூடிய சலுகைகளை பெற வேண்டும் என்றால் அவர்களுடைய சிபில் ரேட் என்ற கணக்கீட்டை சரியான அளவில் இருக்கும்படி கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது முன்னதாக வாங்கிய கடனுக்கான மாதாந்திர தவணைகளை சரியான காலகட்டத்தில் திருப்பி செலுத்தி இருக்க வேண்டும். மேலும் அவர்களுடைய கடன் திருப்பிச் செலுத்தக்கூடிய தகுதிக்கு உட்பட்ட அளவிலேயே கடன்களை பெற்றிருக்க வேண்டும்.

வங்கிக் கடன் பெற்று சொந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் கடனுக்கான மொத்த பட்ஜெட், கையில் உள்ள பணம் மற்றும் தங்களுடைய மாதத் தவணை செலுத்தக்கூடிய திறம் ஆகியவற்றை கச்சிதமாக கணக்கிட்டு சொந்த வீடு, மனை என்ற இலக்கை அடையலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளனர்.

பெண்கள் வீட்டுக் கடன் பெறும் பொழுது வங்கிகள் அவர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அளிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பெண்களை இணை கடன்தாரராக கொண்டு பெறக்கூடிய வீட்டுக் கடன்களுக்கும் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு முன்னணி வங்கி பெண்களுக்கான வட்டி விகிதத்தில் சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கிறது. சொந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ள பெண்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கக் கூடும்.
Tags:    

Similar News