லைஃப்ஸ்டைல்
மனை மற்றும் நிலங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

மனை மற்றும் நிலங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

Published On 2021-03-13 02:19 GMT   |   Update On 2021-03-13 02:19 GMT
எவ்வகை காரணங்களால் ஒருவரது மனை அல்லது இடம் மற்றவர்களால் சிக்கலுக்கு உள்ளாக்கப்படக்கூடும் என்று ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிடும் செய்திகளை இங்கே காணலாம்.
நிலம் சார்ந்த முதலீடு என்பது பலவகை முதலீடுகளை உள்ளடக்கிய விஷயம் ஆகும். சொந்தப் பயன்பாட்டுக்காகவோ அல்லது பிற்காலத்தில் விலையேறும்போது விற்பதற்காகவோ வீட்டுமனைகள் வாங்கப்படுகின்றன. வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடுவதற்காக, அலுவலகங்கள் அல்லது கடைகளைக் கட்டி வாடகைக்கு விடுவதற்காக அல்லது விற்பதற்காக மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களை அமைக்க நிலம் வாங்கப்படுகிறது. தங்கும் விடுதிகள், உணவகங்கள், சேமிப்புக் கிடங்குகள் போன்றவற்றைக் கட்டுவதற்கும், வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கவும், தற்காலத்தில் முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள் கட்டுவதற்கும் நிலம் வாங்கப்படுகிறது. இவ்வாறாக, மனை வணிகம் என்பது பல்வேறு தேவைகளை உள்ளடக்கிய மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்புகளை கொண்டிருக்கிறது.

நிலத்தில் முதலீடு செய்வோர் மூன்று பிரிவுகளில் உள்ளனர். அவற்றில்,

முதல் பிரிவான ஊக வணிகம் முறையில் நிலத்தில் முதலீடு செய்வதன் நோக்கம் விரைவில் அதனை விற்று லாபம் ஈட்ட வேண்டும் என்பதாகும்.

இரண்டாவது பிரிவு என்பது தனது சொந்த உபயோகத்துக்கான வீடுகள், கடைகள் அல்லது அலுவலகங்கள் கட்டுவதற்காக நிலத்தை வாங்குவது ஆகும்.

மூன்றாவது பிரிவினர், நிலத்தை வாங்கி வைத்திருந்து, பல ஆண்டுகள் கழித்து, நல்ல விலையேற்றம் பெறும்போது அதனை விற்று லாபம் பெறும் நோக்கில் வாங்குபவர்கள் ஆவார்கள்.

புற நகர் பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் முதலீட்டு நோக்கில் வீட்டுமனை அல்லது நிலம் ஆகியவற்றை வாங்குபவர்கள், அவற்றிற்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும். இடம் சிறியதோ, பெரியதோ அதற்கான நான்கு பக்க எல்லை, கம்பி வேலி அல்லது கார்னர் பகுதிகளில் ‘ட’ போன்ற செங்கல் கட்டுமானம் ஆகியவற்றை அமைப்பது அவசியம்.

பல ஆண்டுகளாக நிலத்தை வாங்கிய நிலையிலேயே விட்டு வைத்திருந்தால் பின்னர் பல சிக்கல்களுக்கு அது வழி வகுத்து விடக்கூடும். பக்கத்து மனை உரிமையாளரின் கட்டுமானம் மனைக்குள் அமைந்து விடலாம் அல்லது மற்றவர்களின் பயன்பாட்டுக்கு இடம் பயன்படுத்தப்படலாம். எவ்வகை காரணங்களால் ஒருவரது மனை அல்லது இடம் மற்றவர்களால் சிக்கலுக்கு உள்ளாக்கப்படக்கூடும் என்று ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிடும் செய்திகளை இங்கே காணலாம்.

* வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் வசிப்பவர்கள் மனை அல்லது நிலத்தை வாங்கிவிட்டு, தக்க பாதுகாப்பு செய்யாமல் விடுவது.

* மனை அல்லது நிலத்தின் ஆவணங்களை முறையாக பாதுகாக்காமல் உறவினர்களை நம்பி கொடுத்திருப்பது மற்றும் மனையை நீண்ட காலமாக சென்று பார்க்காமல் இருப்பது.

* நிலத்திற்கான பத்திரம் காணாமல் போயிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தாமல் விடுவது.

* குறிப்பிட்ட மனைக்கு டபுள் டாகுமெண்டு பிரச்சினை இருப்பது.

* வீட்டு மனையை பராமரிப்பு செய்ய தவறான நபர்களுக்கு அனுமதி அளித்திருப்பது.

* மனை அல்லது இடம் பொருத்தமற்ற நபர்களுக்கு வாடகைக்கு விடப்படுவது.

* மனையின் நான்கு பக்க எல்லைகளை சரியாக அளந்து எல்லை கற்களை நடாமல் விடப்படுவது.

* கூட்டு பட்டா நிலம் அல்லது மனையாக இருக்கும் நிலையில் அவற்றின் நீள, அகலங்கள் கச்சிதமாக குறிப்பிடப்படாமல் உள்ள கிரய பத்திரங்கள்.

* புதிய ஊர் அல்லது அறிமுகம் இல்லாத பகுதிகளில் மனை அல்லது நிலம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க இயலாத நிலையில் அவ்வாறு செய்ய வேண்டி வந்தால், வேலி அல்லது சுற்றுச்சுவர் அமைத்து அதில் மனைக்குரிய பட்டா எண், பத்திர பதிவு எண், சம்பந்தப்பட்ட உரிமையாளர் பெயர் ஆகியவை தகவலாக வைக்கப்பட வேண்டும்.
Tags:    

Similar News