லைஃப்ஸ்டைல்
பெண்களின் தவறுகளுக்கு விவாகரத்து மட்டுமே தீ்ர்வா?

பெண்களின் தவறுகளுக்கு விவாகரத்து மட்டுமே தீ்ர்வா?

Published On 2021-02-24 09:17 GMT   |   Update On 2021-02-24 09:17 GMT
அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற கோணத்தில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விவாகரத்து என்பது பிரச்சினைக்கு தீர்வு அல்ல, அடுத்த பிரச்சினைகளின் தொடக்கம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
‘பிடிக்கலேன்னா உன்ன விவாகரத்து பண்ணிடுவேன் அவ்வளவுதான்’ என்று ஆணும், பெண்ணும் இயல்பாக பேசும் சூழல் இப்போது உருவாகியிருக்கிறது. குழந்தைகள்கூட சிரித்துக்கொண்டே, ‘இந்த அம்மா சரியில்லேப்பா.. பேசமா விவாகரத்து பண்ணிடுங்க’ என்று சொல்லும் நிலையும் தோன்றியிருக்கிறது. விளையாட்டாக இருந்தாலும், வினையாக இருந்தாலும் ‘விவாகரத்து’ என்ற வார்த்தை இப்போது அதிகமாக புழக்கத்தில் வந்திருக்கிறது. அதே நேரத்தில் விவாகரத்தின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற கோணத்தில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குமாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல்களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநிலையில் இல்லை என்பதைதான் இது காட்டுகிறது.

ஆண், பெண் இருவரும் சரிசமம் என்று சொல்லிக் கொண்டு அசுர வேக வளர்ச்சியை காட்டும் இன்றைய தலைமுறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்து என்பது எளிதாக கிடைத்து விடும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் விவாகரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி யாரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோபாவத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை என்பதை உணரும்போது, அவர்கள் மனம்நொந்து போகிறார்கள்.

தவறுகளே செய்யாத மனிதர்கள் இல்லை. அதை திருத்திக் கொள்ளும் முயற்சி தான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன் செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன்-மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன்னொருவர் வந்துவிடுகிறார்.

திருமணத்துக்கு முன்பு- திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு- பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பிந்தைய காலம் அனேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது.

விவாகரத்துக்கு பிறகு ஆண்களும் அதிக மனநெருக்கடிக்கு உள்ளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது. ‘தன்னைப் பற்றி தனக்கு பின்னால் என்ன பேசிக்கொள்வார்களோ!’ என்ற எண்ணம் அவர்களுடைய நட்பு வட்டாரத்தை குறைக்கிறது அல்லது சிதைக்கிறது. அப்போது, தான் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட, பெரிய வடிவத்தில் தன் கண்முன்னே வந்து நிற்கும். அந்த நேரத்தில் தன்மீதே தனக்கு கோபமும், டென்ஷனும் ஏற்பட்டு மன அழுத்தம் எல்லைமீறும். அப்போது அவர்கள் முரண்பாடான நடத்தை கொண்டவர்களாகிவிடுகிறார்கள். அப்போது அவரது மாண்பும், மரியாதையும் அவருடைய வாழ்க்கையில் இருந்து விடைபெற்று சென்றுகொண்டே இருக்கும். அதை பணத்தாலோ, பதவியாலோ ஈடுசெய்ய முடியாது.

பெண்கள் விவாகரத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். என்னதான் மனதளவில் அவள் தைரியமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய சமூக அந்தஸ்து குறைந்து விடும். அதற்கு தக்கபடி அவள் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்து போவாள். அப்போது தனக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தனக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வாள்.

உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும். அது, ‘நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?’ என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்விக்குறியும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ்க்கையும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும். அப்போது தேவையற்ற டென்ஷனும், கோபமுமே மிஞ்சும். மனதில் பரவியிருக்கும் சூன்யம் வார்த்தைகளில் வெறுப்பாக வெளிவரும். அது சில நேரங்களில் நெருக்கமான குடும்பத்தினரையும் புண்படுத்திவிடும்.

அதனால் முடிந்த அளவு விவாகரத்துக்களை தள்ளிப்போட முயற்சி செய்யுங்கள். பிரச்சினையை பேசித்தீர்க்க முன்வாருங்கள். கணவன்- மனைவி இருவரும் தங்கள் மூர்க்கத்தனத்தை தள்ளிவைத்துவிட்டு உறவை சீர்செய்வது பற்றி பேசுங்கள். ஏன்என்றால் உறவு சீர்கெட்டு, விவாகரத்து வரை சென்றுவிட்டால் பாதிப்பு இருவருக்குமே ஏற்படும். குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள். விவாகரத்து என்பது பிரச்சினைக்கு தீர்வு அல்ல, அடுத்த பிரச்சினைகளின் தொடக்கம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இன்று சுற்றி நின்றுகொண்டு, ‘விவாகரத்து செய்துவிடலாம்’ என்று ஆலோசனை சொல்பவர்கள்கூட நாளை, ‘உன் வாழ்க்கையை நீயே முடித்துக்கொண்டாய். நாங்கள் என்ன செய்வது?’ என்று கேட்டபடி விலகிச்சென்றுவிடுவார்கள் என்பதையும் உணர்ந்து நடந்துகொள்ளுங்கள்!
Tags:    

Similar News