லைஃப்ஸ்டைல்
பல்டி அடித்து வைரலான பரூல் அரோரா

டிரெண்ட் ஆகும் ‘புடவை சேலஞ்ச்’

Published On 2021-02-13 03:19 GMT   |   Update On 2021-02-13 03:19 GMT
புடவையில் அசத்தும் பெண்களின் வீடியோ ஒன்றும் புதிதில்லை. அந்தந்த காலத்தில், ஒவ்வொரு டிரெண்டிங்கிற்கு ஏற்ப, பல புடவை சாகச வீடியோக்கள் பிரபலமாகி இருக்கின்றன.
ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான பரூல் அரோராவிற்கு, கடந்த ஆகஸ்டு மாதம் வரை புடவை கட்டவே தெரியாது. உண்மையை சொல்லப்போனால், அவரது உடை அலமாரியில் புடவையே கிடையாதாம். தோழியின் புடவையை இரவல் வாங்கி, அணிந்து கொண்டார். புடவை கட்டியபடி, பரூல் அரோரா அடித்த ‘சம்மர்சாட்’ பல்டிகள், இணையத்தில் வைரலாகின. அதோடு, அவருக்கு ஜிம்னாஸ்டிக் உலகில் மாறுபட்ட அடையாளத்தை உண்டாக்கின.

‘‘சேலை அணிந்து பணிக்கு செல்வதும், இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிப்பதும் கடினம் என பெண்கள் நினைக்கிறார்கள். நானும் அப்படிதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் புடவை அணிந்து கொண்டு சுலபமாக பல்டி அடித்த பிறகே, என்னுடைய புரிதல் தவறு என உணர்ந்தேன். இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு, பல்டி அடிப்பதை விடவும், புடவையில் பல்டி அடிப்பது சுலபமாக இருந்தது’’ என்றார் அரோரா.

புடவையில் அசத்தும் பெண்களின் வீடியோ ஒன்றும் புதிதில்லை. அந்தந்த காலத்தில், ஒவ்வொரு டிரெண்டிங்கிற்கு ஏற்ப, பல புடவை சாகச வீடியோக்கள் பிரபலமாகி இருக்கின்றன. புடவையில் ஜாக்கிங் சென்றது, புடவை அணிந்து பாராசூட்டில் பறப்பது, பிரபலங்கள் புடவையில் தற்காப்பு கலை பயில்வது, வெளிநாடுகளில் புடவை அணிந்தபடியே மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பது... என ஒவ்வொரு சீசனிலும், புடவை சாகச வீடியோக்களும், அதன்மூலம் புடவை அணிந்த பெண்களும் பிரபலமாகி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த கருத்து என்ன தெரியுமா..? ‘புடவை கலாசாரத்தை இந்திய பெண்களிடம் மீட்டெடுப்பதும், உலக அளவில் புடவையை டிரெண்டிங் ஆக்குவதுதான்’

சில வருடங்களுக்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த ஜெயந்தி என்ற மென்பொறியாளர், ஏராளமான புடவைகளை வாங்கி குவித்து, இணையத்தில் வைரலானார். அதை தொடர்ந்து, 2017-ம் ஆண்டு புடவை அணிந்தபடி, மாரத்தானில் ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

‘‘ஐ.டி.துறை பெண்கள், புடவைகளை விரும்புவதில்லை. மாறாக நவீன உடைகளையே வாங்கி அணிந்து கொள்கிறார்கள். ஆனால் நான் அதிலிருந்து மாறுபட விரும்பினேன். அதனால்தான் புடவைகளை வாங்கி குவித்தேன். புடவையோடு மாரத்தானில் ஓடினேன். என்னை முன்மாதிரியாக கொண்டு, இன்று ஐ.டி.துறையில் நிறைய பெண்கள் புடவை அணிந்து அலுவலகம் செல்கிறார்கள். அந்தவகையில், என்னுடைய முயற்சி, வெற்றிப்பெற்றதாக உணர்கிறேன்’’ என மனம் மகிழும் ஜெயந்தியை தொடர்ந்து, கிராந்தி சல்வி என்ற பெண்ணும் பெர்லின் மாரத்தானில் புடவையில் ஓடி உலக கவனத்தை ஈர்த்தார். இவ்விரு சம்பவங்களுக்கு பிறகு பெங்களூரு நகரில், புடவையில் ஓடும் ஓட்டப்பந்தயங்கள் அதிகளவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் 30 பெண்களுடன் ஆரம்பித்த ‘புடவை மாரத்தான்’ போட்டியில் 2019-ம் ஆண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புடவை வீராங்கனைகள் கலந்து கொண்டு, ஓடினர்.

மும்பையை சேர்ந்த அதா சர்மா என்ற நடிகை, சில ஆண்டுகளுக்கு முன்பு புடவையில் தற்காப்பு கலை பயின்று, வைரலானார். இவரை தொடர்ந்து, புனேவை சேர்ந்த ஷிதல் மஹாஜன் என்ற சாகச பெண், புடவை அணிந்து கொண்டு பாராசூட் மூலம் பறந்து அசத்தினார். அதுபற்றி ஷிதல் மஹாஜன் பகிர்ந்து கொள்கிறார்... ‘‘நான் புடவைக்கு பதிலாக நவ்வாரி எனப்படும் உடையை அணிந்து கொண்டேன். இதுவும் புடவை ரகம்தான். ஆனால் கால் சட்டை அணிவதுபோல, புடவையை காலில் சுற்றிக்கொள்ளவேண்டும். நிறைய இடங்களில் ஊக்குகள் குத்தி, நவ்வாரி புடவையை கட்டிக்கொள்வோம். வானில் பறக்கும்போது ஏற்படும் உடை அசவுகரியத்தை போக்கவே, நவ்வாரியை தேர்த்தெடுத்தேன். புடவையில் பல புதுமைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் புடவை கட்டி, விண்ணில் பறந்த முதல் பெண் நான் என்பதில், பெருமிதம் கொள்கிறேன்’’ என்று அசத்தலாக பேசும் ஷிதல், இனி மேற்கொள்ள இருக்கும் எல்லா வான்வெளி சாகசங்களையும், புடவை அணிந்தே நிகழ்த்த இருக்கிறாராம்.

இதுமட்டுமா..? நடனமாடுவது, அலுவலக மீட்டிங் நடத்துவது, சர்க்கஸ் செய்வது என எல்லா செயல்களிலும் புடவையை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதற்கு ‘#புடவை சேலஞ்ச்’ என்ற பெயரையும் வைத்துவிட்டனர். புடவையில் செய்யும் சாகசங்களை எல்லாம், ‘#புடவை சேலஞ்ச்’ என்ற ஹாஷ்டாக் வழியாக பகிர்வதுடன், மற்ற பெண்களையும் புடவையில் சாகசம் செய்ய அழைப்பு விடுக்கின்றனர்.

ஆனால் மும்பையை சேர்ந்த இரட்டையர்கள் ரம்யா ராவ் மற்றும் காவ்யா இதுதொடர்பாக மாற்று கருத்தை முன்வைக்கிறார்கள்.

‘‘நானும், என் சகோதரி காவியாவும், சிறு வயதில் இருந்தே புடவை அணிகிறோம். எங்களுக்கு புடவை புதிதாக தோன்றவில்லை. ஏனெனில் என் அம்மா அணிகிறார். பாட்டி அணிகிறார். நாங்களும் சிறுவயதில் இருந்தே அணிகிறோம். புடவை அணிந்துதான் சைக்கிள் ஓட்டினோம். மலை ஏறினோம். ஏரிகளில் நீச்சல் அடித்தோம். ஆனால் இன்றைய பெண்கள், இதை டிரெண்ட் ஆக்குகிறார்கள். புடவை கலாசாரத்தை அழிப்பதும் நாம்தான். அதை கொண்டாடுவதும் நாம்தான். வருந்துவதா..?, மகிழ்வதா..? என்ற குழப்பத்தை இந்த புடவை சேலஞ்ச் ஏற்படுத்துகிறது’’ என்ற கருத்துடன் விடைகொடுத்தனர்.
Tags:    

Similar News