லைஃப்ஸ்டைல்
குடும்ப வாழ்க்கையில் அமைதியை கெடுக்கும் ‘ஈகோ’

குடும்ப வாழ்க்கையில் அமைதியை கெடுக்கும் ‘ஈகோ’

Published On 2021-01-30 03:26 GMT   |   Update On 2021-01-30 03:26 GMT
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால் வாழ்க்கையில் அமைதி நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த வாழ்க்கையில் நாம் அறிந்திராத ஏதேதோ இருக்கின்றன. தேடுதலும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. அனைத்திலும் முதன்மையாக இருப்பது ‘அன்பு’ மட்டுமே. இந்த நவீன அவசர உலகத்தில் அந்த அன்பை வெளிப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோகூட நேரமில்லாமல் போகிறது.

சில உறவுகள் நாம் விரும்பி ஏற்பது, சில உறவுகள் நாம் பிறக்கும்போதே தானாக அமைவது. பல நேரங்களில் உடன் பிறந்தவர்கள், பெற்றவர்கள் என்று தானாக அமைந்த உறவுகளின் மன வேறுபாடுகளைக்கூட அனுசரித்துப்போகும் நமக்கு, நாமாக விரும்பி ஏற்றுக்கொள்ளும் உறவுகள், நட்புகளின் சிறு தவறுகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

அன்று வங்கியில் எனக்குத் தெரிந்த பெண் ஒருவரைப் பார்த்தேன். பெற்றோருடன் இரண்டு வருடம் போராடி காதலித்தவரையே மணந்து கொண்டவள். இருவரும் கணினித் துறையில் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அருகில் சென்று நலம் விசாரித்தபோது ‘ஏதோ இருக்கிறேன்’ என்பது போல சலிப்பாக பதில் வந்தது.

கணவர், குடும்பத்தாரின் நலம் குறித்து விசாரித்தபோதும் ஒற்றை வரியில் பதில் வந்தது. எப்பொழுதும் கலகலவென பேசிக்கொண்டிருப்பவள் இப்படி பட்டும், படாமல் பேசுவது ஆச்சரியமாக இருந்தது. இருவருக்கும் அடுத்தடுத்த டோக்கன் என்பதால் ஒன்றும் பேசாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். மரத்தடியில் நிறுத்தியிருந்த தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுக்கப் போனவளை, இவர்கள் திருமணத்திற்கு உதவியவள் என்ற உரிமையுடன் நெருங்கி, எடுத்த எடுப்பில் ‘கணவரிடம் ஏதும் பிரச்சினையா’ என்றேன் மனம் கேட்காமல். இதை சற்றும் எதிர்பாராதவள், என் கண்களை உற்று நோக்கியவாறு ஒரு நிமிடம் யோசித்து வண்டியை நிறுத்திவிட்டு மீண்டும் மரத்தடிக்கே வந்தவள்,

‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் வீட்டில் நிம்மதி இல்லாததால் அலுவலகத்தில் சரியாக வேலை பார்க்க முடியவில்லை’ என்றாள்.

‘அப்படி என்ன பிரச் சினைன்னு தெரிந்து கொள்ளலாமா’ என்றேன்.

சற்று தயங்கியவள், “அவர் கொஞ்சமும் அனுசரித்துப் போகமாட்டேங்கிறார். என்னமோ அவர் மட்டும் வேலைக்குப் போவதுபோலவும், நான் வீட்டில் நிம்மதியாக இருப்பது போலவும், எதற்கெடுத்தாலும் என்னையே அதிகாரம் செய்கிறார். ஏதோ நான் அவரோட அம்மா மாதிரியும், இவருடைய தேவைகள் அனைத்தையும் நானே கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். என்னைப் பற்றி துளியும் கவலைப்படுவதில்லை, வீட்டு வேலைகளை பங்கிட்டுச் செய்யத் தயங்குகிறார். நான் அவமானப்படுத்தப்படுவது போல உணருவதாலேயே அலுவலகப் பணியில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை” என்றாள்.

‘அப்படியானால் உன்னை சரிவர கவனித்துக் கொள்வதில்லையா அவர்?’ என்றேன் நிதானமாக.

உடனே சட்டென்று, ‘அப்படியெல்லாம் இல்லை. என்மேல் உயிரையே வைத்திருக் கிறார். நான் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் தவித்துப் போய்விடுவார்’ என்றாள்.

நானும், ‘நீ முன்னால் சொன்ன அனைத்தையும் அப்படியே அவர் கோணத்தில் இருந்து, அவர் சொல்வதாக நினைத்துப் பாரேன், அவரிடம் மனம் விட்டுப் பேசினாயா?’ என்றேன்.

சற்று நேரம் அமைதியாக யோசித்தவள், ‘ஆமாம் அவரும் என்னை இப்படி நினைக்கலாமே. ஆனால் ஒரு நாளும் இப்படியெல்லாம் அவர் என்னை திட்டுவதற்கு நினைத்துக்கூடப் பார்த்ததில்லை’ என்றவள் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள். சட்டென கண்ணில் நீர் கலங்க ‘நான்தான் தவறு செய்துவிட்டேனோ. அவருடைய சுபாவம் அதுதான் என்பதைப் புரிந்து என் ஈகோவை கொஞ்சம் விட்டுக்கொடுத்து, என் நிலையை மெல்ல மெல்லப் புரிய வைத்திருக்க வேண்டும். என் மேல் இத்தனை அன்பு வைத்திருப்பவர் என் சிரமத்தையும் புரிந்துகொள்வார். நான் எப்படி யோசிக்காமல் போனேன்’ என்று கூறியவாறு கண்களை துடைத்துக் கொண்டவளின் முகத்தில் தெளிவைக் காண முடிந்தது.

விட்டுக்கொடுக்கும் அந்த மனோபாவம் வந்த மறு நொடியே அவள் மனதிலிருந்த குழப்பம் நீங்கி, நிம்மதி பிறந்தது தெரிந்தது. கட்டாயம் இனி அவளுடைய மனநிலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுகிற மாற்றம் அவர்களுடைய வாழ்க்கையை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.
Tags:    

Similar News