லைஃப்ஸ்டைல்

பெண்களின் மனநலனை பாதிக்கும் பிரச்சனைகள்

Published On 2019-06-27 02:53 GMT   |   Update On 2019-06-27 02:53 GMT
உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, பெண்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்சினைகளில் மிகவும் பொதுவான ஒன்றாக இருப்பது மன இறுக்கமாகும்.
நாம் சாதாரண விஷயம் என நினைக்கும் பல விஷயங்கள் மனநல பிரச்சினைகளாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் பெண்களுக்கு இது அதிகம். ஹார்மோன்களும் அவர்கள் எளிதில் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு உட்பட வழிவகுக்கின்றன.

உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, பெண்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்சினைகளில் மிகவும் பொதுவான ஒன்றாக இருப்பது மன இறுக்கமாகும். அதே சமயம் ஆவணப்படுத்தப்படாத நிகழ்வுகள் ஏராளமாக இருக்கலாம். இதற்கு காரணம், பெரும்பாலான சமயங்களில் அவை வெறும் திடீர் மனநிலை மாற்றங்களாக வந்து சென்றுவிடுகின்றன. ஏதோ சில நாட்கள் நீடிக்கும் மன இறுக்கமாக கருதப்படுகின்றன. எனவே அவை தானாக சரியாகிவிடும் என்று கண்டுகொள்ளப்படுவது இல்லை.

உண்மையில், மனதை வருத்தும் சோகமும், நம்பிக்கையின்மையும் இருக்கும் நிலையே மன இறுக்கமாகும். தினசரி செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது, மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக தூங்குவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது, நம்பிக்கை இழந்த உணர்வோடு காணப்படுவது, தன்னை பற்றிய மதிப்பின்றி இருப்பது, சோர்வாக இருப்பது போன்றவை மன இறுக்கத்தின் பிற அறிகுறிகளாகும். மேலே குறிப்பிட்ட அறிகுறிகளும், திடீர் மனநிலை மாற்றங்களும், எரிச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஆகியவையும் மன இறுக்கம் உள்ளது என எச்சரிக்கும் அறிகுறிகளாகும்.

ஒரு பெண்ணின் உடல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த சமூகத்தின் அபிப்ராயம், அவர்கள் சாப்பிடுவது குறித்த கோளாறுகள் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. ஆண்களை விட, பெண்களுக்கே சாப்பிடுவது தொடர்பான கோளாறுகள் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பசியின்மை பிரச்சினை உள்ளவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள், எடை குறைவாக இருக்கும், உடல் எடை கூடிவிடும் என்று அதிகம் பயப்படுவார்கள். புலிமியா என்பது பெண்களுக்கு வரும் மற்றொரு பிரச்சினையாகும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள், பிறகு உடல் எடை கூடுவதை தடுப்பதற்காக வாந்தி எடுத்து உணவை வெளியேற்றுவார்கள். இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சினைகளில் ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் நாள்பட்ட பிரச்சினை பசியின்மை ஆகும். எனினும், மெலிதாக இருப்பவர்கள் எல்லோருக்கும் பசியின்மை பிரச்சினை உள்ளது என்று கருத முடியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கோ, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ எப்போதும் உடல் எடை கூடிவிடும் என்ற பயம், உடல் எடை பற்றிய கவலை இருந்தால், ஓரிரு வாய் சாப்பிட்டுவிட்டு அத்தோடு போதும் என்று சொல்லும் பழக்கம் இருந்தால், அவர்கள் உளவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
Tags:    

Similar News