லைஃப்ஸ்டைல்

‘கிரெடிட் ஸ்கோர்’ பற்றி தெரியுமா?

Published On 2019-06-03 03:53 GMT   |   Update On 2019-06-03 03:53 GMT
வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் கேட்டு செல்லும் போதுதான், விண்ணப்பித்தவரின் ‘கிரெடிட் ஸ்கோர்’ எப்படி என்று பார்க்கப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வீடு, வாகனம், படிப்பு என எந்த கனவாக இருந்தாலும் கடன் வாங்கித்தான் நிறைவேற்ற முடியும் என்ற நிலையில் நடுத்தர மக்கள் உள்ளனர்.

வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் கேட்டு செல்லும் போதுதான், விண்ணப்பித்தவரின் ‘கிரெடிட் ஸ்கோர்’ எப்படி என்று பார்க்கப்படுகிறது. கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால், கடன் தர தாராளமாக முன்வருவார்கள். இல்லாவிட்டால் முடியவே முடியாது என்று விண்ணப்பத்தை ஒதுக்கி வைத்து விடுவார்கள். கடன் வாங்க விண்ணப்பிக்கும் வரை நிறைய பேருக்கு ‘கிரெடிட் ஸ்கோர்’ பற்றியே தெரிந்திருக்காது. இதற்கு முன்பு வாங்கி கடன்களை ஒழுங்காக செலுத்தியிருக்கிறார்களா, வில்லங்கம் பிடித்த ஆசாமியா என்பதை ‘கிரெடிட் ஸ்கோர்’ ஜாதகம் அப்பட்டமாக விளக்கிவிடும்.

ஆனால், சிலர் ஒழுங்காக கடனை திருப்பி செலுத்தியும்கூட ‘கிரெடிட் ஸ்கோர்’ குறைந்து விடுவது உண்டு. இதற்கு சில காரணங்களை சொல்கின்றனர், அனுபவம் வாய்ந்தவர்கள். அதாவது, வாங்கிய கடனை திருப்பி செலுத்தியிருந்தாலும், சில சமயம் கடன் கணக்கு மூடப்பட்டதாக இருக்காது. அல்லது மூடப்பட்டது என்பதற்கு பதிலாக, செட்டில் செய்யப்பட்டது என குறிப்பிடப்பட்டு இருக்கும்.



அப்படி இருந்தால், கடனை முழுமையாகவும் முறையாகவும் செலுத்தவில்லை என்று கடன் வழங்கும் வங்கிகள், நிறுவனங்கள் கருதி மீண்டும் கடன் அளிக்க மறுத்து விடுவார்கள். கிரெடிட் கார்டு தவணைகளை முறையாக திருப்பி செலுத்தியிருக்கலாம். சில சமயம், அப்போதைக்கு பணம் இல்லையே என குறைந்த பட்சம் செலுத்த வேண்டிய தொகையை மட்டும் செலுத்தி விட்டு பாக்கியை பின்பு கொடுத்திருக்கலாம். கிரெடிட் கார்டு நிலுவையை கட்ட தவறியது, குறைந்த பட்சம் செலுத்த வேண்டிய தொகை என எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய தகவல் தரும்.

பின்னர் அந்த நிறுவனம் தொகையை கட்டி முடித்த பின்பும் சரிவர பதிவு செய்யாமல் விட்டிருந்தாலும் கிரெடிட் ஸ்கோர் குறைந்து விட வாய்ப்பு உள்ளது. சில சமயம், ‘பான்’ எண் தவறாக குறிப்பிட்டு விடுவதும் உண்டு. அவ்வாறு தவறு நேர்ந்து விட்டால், கிரெடிட் ஸ்கோர் பார்க்கும்போது பான் எண், பெயர் இரண்டும் பொருந்தாது. இதனால் கிரெடிட் ஸ்கோர் குறைந்து விடும். அந்த பான் எண்ணுக்கு சொந்தமானவர் கடன்களை முறையாக கட்டாவிட்டாலும் ஆபத்துதான்.

எனவே, சிறு தவறுகள் கூட கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம் என்பதால் கவனமாக செயல்பட வேண்டும். எனவே கட்டி முடித்த கடன்களுக்கு முடிக்கப்பட்ட கணக்கு என்பதற்கான சான்று வாங்கி வைக்க வேண்டும் என்கின்றனர், வங்கித் துறையினர்.
Tags:    

Similar News