லைஃப்ஸ்டைல்

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண்கள்

Published On 2018-10-24 03:14 GMT   |   Update On 2018-10-24 03:14 GMT
தமிழ்நாட்டில் மட்டும் கடத்தப்படும் பெண்களில் 53.22 சதவீதம் பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று காவல்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடத்தப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்கிறது, ஒரு புள்ளிவிவரம்.

தமிழ்நாட்டில் மட்டும் இப்படி கடத்தப்படும் பெண்களில் 53.22 சதவீதம் பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று காவல்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பெண்ணை கடத்திச் செல்பவர்கள் ஒரு இருட்டறையினுள் 10 முதல் 15 நாட்கள் வரை அடைத்துவைத்து அடித்து காயப்படுத்துகிறார்கள்.

கடுமையாக தாக்கப்பட்டு, பலவீனமாகி, தன்னம்பிக்கை இழந்த பின், கட்டாயப்படுத்தி போதைப்பொருளை உடலினுள் செலுத்துகிறார்கள். அதன் பிறகு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். தப்பிக்க வழி இல்லாமல் மாட்டிக்கொண்ட அந்தப் பெண்ணை விற்றுவிடுகிறார்கள்.

உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில், தற்போது இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை வைத்து கடத்தல் குறைந்திருப்பதாகச் சொல்லிவிட முடியாது.



பல சம்பவங்கள் வெளிவராததற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை. கடத்தப்படும் பெரும்பான்மையான பெண்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களே.

கடத்தப்பட்ட பெண்கள் காப்பாற்றப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும், குறைந்தது 3 மாத காலம் வரை மனநல ஆலோசகரின் உதவி கட்டாயம் தேவை. ஒருமுறை பாதுகாப்பின்மையை உணர்ந்துவிட்ட அந்தப் பெண்ணுக்கு, அதில் இருந்து மீண்டு வர நீண்ட காலம் தேவைப்படும்.

கடத்தப்பட்டதை நினைவுபடுத்தும் ஒரு வார்த்தை, ஏதேனும் ஒரு அடையாளம்கூட மீண்டும் பாதுகாப்பின்மையை உணரவைக்கும்.

காப்பாற்றப்பட்டவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் அவசியம் தேவை. இதை அந்த பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் புரிந்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சுமத்தும் போக்கு நம் சமூகத்தில் நிலவுகிறது. அது மாற வேண்டும்.
Tags:    

Similar News