லைஃப்ஸ்டைல்

மாதக்கடைசியில் பணம் இல்லாமல் அவதியா? இதோ ஐடியா

Published On 2016-07-27 02:15 GMT   |   Update On 2016-07-27 02:15 GMT
சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட் போடுவது மட்டுமின்றி, அப்படியே நடக்கவும் செய்ய வேண்டும்.
மாதச்சம்பளம் வாங்குபவர்கள் பலரும் மாதக்கடைசியில் பண நெருக்கடியை சந்திக்கிறார்கள். ஆனால், கொஞ்சம் திட்டமிட்டு செயல்பட்டால், மாதக் கடைசி அவதியில் இருந்து தப்பித்துவிடலாம்.

இதோ ஐடியாக்கள்,

சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட் போடுவது மட்டுமின்றி, அப்படியே நடக்கவும் செய்ய வேண்டும். மாத மாதம் வழக்கமாகச் செய்ய வேண்டிய வீட்டு வாடகை, மளிகை, பால் போன்றவற்றை சம்பளம் வாங்கியவுடனே முடித்துவிட்டால், வேலை முடிந்த நிம்மதியும் ஏற்பட்டு, ஒரு தெளிவு பிறக்கும்.

வழக்கமான கட்டாயச் செலவுகளைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போவதால் எந்தப் பலனுமில்லை என்பதை உணருங்கள். சம்பளம் கையில் கிடைத்ததுமே, அத்தியாவசியமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும்.

ஒன்றுக்கு ஒதுக்கிய தொகையை அதற்கே செலவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குழப்பம்தான் மிஞ்சும். கட்டாயச் செலவுகள் போக கையில் எவ்வளவு பணம் எஞ்சியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

தள்ளிப்போடக்கூடிய, அவசியமற்ற செலவுகளை தாராளமாகத் தள்ளிப்போடலாம். ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய அளவு பணத்தை எடுத்து தனியாக ஒதுக்கி வைக்க வேண்டும். இதை, எளிதில் எடுக்க முடியாதபடி வைத்திருப்பது நல்லது.

உதாரணமாக, வேறு ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தைப் போட்டுவிடலாம். இந்தப் பணத்தை மிகவும் அவசர தேவை எதுவும் ஏற்பட்டால் தவிர எடுக்கக் கூடாது. இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கியவுடன் குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டு வைப்பது எதிர்பாராத செலவுகளின்போது பெரிதும் கைகொடுக்கும்.

ஆனால், இப்படி ஒதுக்கி வைத்திருக்கும் பணம் இருக்கும் தைரியத்தில் செலவுகளை கூட்டிக்கொள்ளக்கூடாது. அவசரத்துக்கு மட்டுமே என ஒதுக்கிய அந்தப் பணம் ஒருவேளை பயன்படவில்லை எனில், மாதக் கடைசியில் எடுத்துச் செலவழித்துவிடக் கூடாது. மாறாக, உறுதியோடு பணத்தை தொடர்ந்து சேமித்து வந்தால், பின்னாளில் ஒரு பெருந்தொகை உங்களிடம் சேர்ந்திருக்கும்.

கடன் வாங்கிச் செலவு செய்வதை, அதிலும் ஆடம்பரச் செலவு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டுக் கடனுக்கு மட்டும்தான் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் என்பதையும், சொந்த வீட்டுக் கனவை நனவாக்க மட்டுமே கடன் பெறலாம், மற்ற கடன்கள் எல்லாம் தேவையில்லாதவை என்று மனதில் ஆழமாகப் பதித்துக்கொள்ளுங்கள்.

Similar News