லைஃப்ஸ்டைல்

மதுப்பழக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள்

Published On 2018-08-25 03:32 GMT   |   Update On 2018-08-25 03:32 GMT
அதிகம் மது அருந்தும் பெண்கள் அதற்கு அடிமையாவதும், ஆண்களை விட வெகு சீக்கிரம் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாவதும் நடக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் மிக மிகக் குறைவு. ஆனால் அந்தக் குறைந்த சதவீதத்தினரிலும் பெண்களே மதுப் பழக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு.

மேற்கத்திய நாடுகளிலும், மது அருந்துபவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்குக்கும் அதிகம். ஆனால் அங்கு பெண்கள் மது அருந்தும் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அதிலும், 1991 முதல் 2000 ஆண்டு வரை பிறந்த பெண்கள் ஆண்களுக்கு நிகராக மது அருந்துகின்றனர். இந்த நிலை நீடித்தால் மேலை நாடுகளில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் மது அருந்துபவர்களாகக் கூட மாறிவிடுவார்களாம்.

பொதுவாக மது அருந்துவதால் பெண்களே அதிக பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். அமெரிக்காவில் 2000-2015-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 45 முதல் 64 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் விகிதம் 57 சதவீதமாக இருந்தது.

இது ஆண்களில் 21 சதவீதமாக மட்டுமே இருந்தது. 25 முதல் 44 வயதுக்கு உட்பட்ட பெண்களில் சிரோசிஸ் இறப்பு விகிதம் 21 சதவீதமாக உயர்ந்திருந்த நிலையில், ஆண்களில் இது 10 சதவீதமாகக் குறைந்திருந்தது.

மது அதிகம் அருந்தி மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அளவுக்கு அதிகமாக, ஆபத்தான அளவுக்கு மது அருந்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இந்தப் போக்கு பெண்களிடையே அதிகம் உள்ளது. ஆனால் அதிகளவில் பெண்கள் மது அருந்துவது மட்டுமே இங்கு பிரச்சினை அல்ல. மதுவானது ஆண்களின் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை ஒப்பிடும்போது பெண்கள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு வேறுவிதமாக உள்ளது.

மது அருந்தும் பெண்களின் உடலில் குறைந்த அளவில் ஏடிஎச் என்ற நொதிப்பொருள் உற்பத்தி ஆகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் இத்திரவம், மதுவின் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. உடலிலுள்ள கொழுப்புச்சத்து, மதுவை தக்கவைத்துக் கொள்கையில் நீர் அதைக் கரைக்க முற்படுகிறது.



பெண்கள் உடலில் கொழுப்பின் அளவு இயற்கையாகவே அதிகமாகவும் நீரின் அளவு குறைவாகவும் இருப்பதால் இயல்பாகவே அவர்களின் உடலில் மதுவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

இந்த அம்சம்தான் ஆண்களைவிட பெண்களுக்கு மதுவால் அதிக பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார், டான் ஷுகர்மேன். இவர் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் உடலியக்கத் துறை பேராசிரியராக உள்ளார்.

அதிகம் மது அருந்தும் பெண்கள் அதற்கு அடிமையாவதும், ஆண்களை விட வெகு சீக்கிரம் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாவதும் நடக்கிறது. இந்த நிகழ்வு டெலஸ்கோப்பிங் எனப்படுகிறது.

ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு மதுப்பழக்கம் தாமதமாகவே ஏற்படுகிறது. அதேநேரம், ஆண்களை விட பெண்கள் விரைவாகவே மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். அவர்களுக்கு கல்லீரல் தொடர்பான கோளாறுகள் சீக்கிரமே ஏற்பட்டுவிடுகின்றன. இதயங்களும் நரம்புகளும் விரைந்து பழுதடைகின்றன.

ஆண்களின் உடலிலும் பெண்களின் உடலிலும் மது ஏற்படுத்தும் பல பாதிப்புகள் கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அறியப்படவில்லை.

அதிலும், மது தொடர்பான மருத்துவ ரீதியான சோதனைகள் அனைத்தும் 1990கள் வரை ஆண்களிடம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. மது என்பது ஆண்கள் தொடர்பான பிரச்சினை என நம்பப்பட்டதுதான் அதற்குக் காரணம்.

மருத்துவ சோதனைகள் ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆரோக்கியத்துக்கான அமெரிக்க தேசிய நிறுவனம் உத்தரவிட்டது. இதன் பின்பே நிலைமை மாறத் தொடங்கியது.

அதன் விளைவாகத்தான் தற்போதைய உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. 
Tags:    

Similar News