பெண்கள் உலகம்

ஆபாச தளம்...பிரவுசர் லாக் மோசடி...

Published On 2022-08-22 04:16 GMT   |   Update On 2022-08-22 04:16 GMT
  • ஆபாசப் படங்களை பார்க்கும்போது ‘பாப்-அப்’ ‘வார்னிங்’ வந்தால், இதை செய்து மோசடியில் இருந்து தப்பிக்கலாம்.
  • மோசடியில் சிக்காமல் இருப்பதற்கு, ஆபாசப்படங்கள் பார்ப்பதை தவிர்ப்பதுதான் மிகச் சிறந்த வழி.

இணைய பயன்பாடு இல்லாமல் இனி மனித வாழ்க்கையே சாத்தியமில்லை என்ற சூழல் உருவாகி வருகிறது. அதற்கேற்ப 'ஆன்லைன்' மோசடிகளும் புதுப்புது அவதாரம் எடுத்து வருகின்றன. அந்தவகையில், ஆபாச இணையதளங்களை பார்ப்பவர்களிடம் பணம் பறிக்கும் 'பிரவுசர் லாக்' என்ற புதிய மோசடி பற்றி எச்சரிக்க விரும்புகிறேன்.

டெல்லியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் விஷ்வா, ஆபாச 'வெப் சீரிஸ்' ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தபோது, "ஆபாச படத்தை பார்ப்பது சட்டவிரோதமானது" என்ற 'திடீர்' எச்சரிக்கை அவரது கம்ப்யூட்டர் திரையில் வந்தது. அவர் குற்ற உணர்ச்சியில் திகைத்து நின்ற அடுத்த நொடியில், "நீங்கள் உடனடியாக ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தவேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டும்" என்று எச்சரிக்கை வந்தது. 'அபராதம்' செலுத்துவதற்கான 'யூ.பி.ஐ.' 'பேமெண்ட்' மற்றும் 'கியூ.ஆர்.' குறியீடு விவரங்களும் அதில் இருந்தன. இந்திய சட்ட அமைச்சகத்தின் அறிவிப்பு போன்ற தோற்றத்தில் இந்த அறிவிப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.

விஷ்வாவுக்கு லேசாக சந்தேகம் ஏற்படவே அந்த இணைய முகவரியை சரிபார்த்து, அது போலி என்பதை கண்டுபிடித்தார். இதேபோன்ற அனுபவம் அவரது நண்பர்களுக்கும் ஏற்பட்டதால், அவர்கள் கூட்டாக சேர்ந்து 'சைபர்' கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இந்த புகாரை விசாரித்த போலீசார், கம்போடியாவை தலைமையகமாகக்கொண்டு செயல்படும் ஒரு 'சைபர்' கிரிமினல் கும்பலின் வேலை இது என்பதை கண்டறிந்தனர். கடந்த 6 மாதங்களில் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து ஏராளமான பணத்தை இந்த கும்பல் கொள்ளையடித்திருந்ததை கண்டறிந்தனர். இந்த கும்பல், தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் பணத்தை பெற்றதை கண்டறிந்த போலீசார், இங்கு வந்து விசாரணை செய்து உள்ளூர் மூளையாக செயல்பட்டவனையும் உடன் இருந்த 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த வகை நூதன மோசடி குறித்த 'ஸ்க்ரீன் ஷாட்'டை பகிர்ந்துள்ள 'சைபர்' பாதுகாப்பு நிபுணர் ராஜசேகர் ராஜஹரியா இதுதொடர்பான விரிவான எச்சரிக்கையை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். ஆபாச தளங்களை பார்த்துக்கொண்டிருப்பவர்களின் திரையை மறைத்தது போல திடீரென போலியான 'பாப்-அப்' ஒன்று தோன்றும். இந்திய சட்டத்தால் தடைசெய்யப்பட்ட ஆபாச படங்களை 'ஆன்லைனில்' பார்த்ததால், உங்களது 'பிரவுசர் ' முடக்கப்பட்டுள்ளதாக பயனரை எச்சரிக்கும். அந்த 'பாப்-அப்', பார்ப்பதற்கு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில், இந்திய தண்டனைப்பிரிவு 173-279 ஆகியவற்றின் கீழ் உங்களது கணினி செயல்பாடு முடக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கும்.

மேற்கண்ட தகவல்களை பார்த்து அதிர்ச்சியடையும் பயனர்கள் செய்வதறியாது திகைத்து நிற்பார்கள். இந்த அதிர்ச்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் அந்த 'சைபர்' கிரிமினல் கும்பல், முடக்கப்பட்ட கணினியை 'ஆன்லாக்' செய்வதற்கு உடனடியாக ரூ.29 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என அந்த 'பாப்-அப்' மூலமாகவே தெரிவிப்பார்கள். என்ன செய்யலாம் என்று குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் பயனர்களை தங்களது வழிக்கு கொண்டு வரும் வகையில், "நீங்கள் 6 மணி நேரத்துக்குள் அபராத தொகையை செலுத்தத் தவறினால், உங்கள் கணினி பயன்பாடு குறித்த விவரங்கள் இந்தியாவின் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உங்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிப்பார்கள்.

தொடர்ந்து, அதில் அபராத தொகையை செலுத்துவதற்கான விவரங்களையும் கொடுப்பார்கள். 'விசா' அல்லது 'மாஸ்டர்' கார்டுகளை பயன்படுத்தி பயனர்கள் கட்டணம் செலுத்தலாம் என்ற தகவல் அதில் இடம்பெறும். தனிமையில் ஆபாசப் படம் பார்க்கும் பயனர்களின் பதற்றத்தை சாதகமாக பயன்படுத்தி பணம் பறிக்கும் இந்த புதுவகை 'சைபர்' கிரிமினல் கும்பல்களிடம் ஏமாறவேண்டாம் என்று ராஜசேகர் ராஜஹரியா குறிப்பிட்டுள்ளார்.

ஆபாசப் படங்களை பார்க்கும்போது இதுபோன்ற 'பாப்-அப்' 'வார்னிங்' வந்தால், அதனை உடனடியாக 'க்ளோஸ்' செய்து இந்த மோசடியில் இருந்து தப்பிக்கலாம். ஒருவேளை அந்த 'பாப்-அப்' பிரவுசரை 'க்ளோஸ்' செய்ய முடியவில்லை என்றால், 'ctrl+alt+delete' செய்து அந்த பிரவுசரின் செயல்பாட்டை நிறுத்திவிடலாம். இந்த முறைகள் எதுவும் உங்களுக்கு உதவாத பட்சத்தில், கணினியை 'ஷட் டவுன்' செய்து, இந்த மோசடியில் இருந்து தப்பிவிடலாம். இதுபோன்ற மோசடியில் நீங்கள் ஒருபோதும் சிக்காமல் இருப்பதற்கு, ஆபாசப்படங்கள் பார்ப்பதை தவிர்ப்பதுதான் மிகச் சிறந்த வழி.

ஆபாசப் படங்களை பார்க்கும்போது 'பாப்-அப்' 'வார்னிங்' வந்தால், அதனை 'க்ளோஸ்' செய்யலாம். அது முடியவில்லை என்றால்,

'ctrl+alt+delete' செய்து அந்த பிரவுசரின் செயல்பாட்டை நிறுத்திவிடலாம். இந்த முறைகள் உதவாத பட்சத்தில், கணினியை 'ஷட் டவுன்' செய்து, மோசடியில் இருந்து தப்பிவிடலாம். இதுபோன்ற மோசடியில் சிக்காமல் இருப்பதற்கு, ஆபாசப்படங்கள் பார்ப்பதை தவிர்ப்பதுதான் மிகச் சிறந்த வழி.

முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி

Tags:    

Similar News