அழகுக் குறிப்புகள்

எண்ணெய் பசை சருமத்தை அழகாக பராமரிக்க என்ன செய்யலாம்...

Published On 2022-06-20 07:25 GMT   |   Update On 2022-06-20 07:25 GMT
  • வளவளப்பான சருமத்தையும் சோர்வான தோற்றத்தைத் தருவதோடு முகப்பருவையும் ஏற்படுத்துகிறது.
  • சில பழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் எண்ணெய் பசை உள்ள சருமத்தை அழகாக பராமரிக்கலாம்.

எண்ணெய் பசை உள்ள சருமம் என்பது ஆண், பெண் இருவருக்குமே உள்ளது. அழகாய் இருக்க வேண்டும் என விரும்பாதவர் யார்? ஆனால், எண்ணெய்ப் பசை உள்ள சருமம் தன்னம்பிக்கையையே குலைப்பது. இது, வளவளப்பான சருமத்தையும் சோர்வான தோற்றத்தைத் தருவதோடு முகப்பருவையும் ஏற்படுத்துகிறது. முகத்தில் உள்ள சீபம் அதிகமாகச் சுரப்பதுதான் எண்ணெய்ப் பசை உள்ள சருமத்துக்கு காரணம். பாரம்பரியம் உள்ளிட்ட சில முக்கியக் காரணங்கள் இருந்தாலும் சில பழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தை அழகாகப் பராமரிக்கலாம்.

1. சோப்பு மற்றும் கிளென்ஸர்கள்

சிலவகை சோப்புகள் மற்றும் கிளென்சர்கள் காரத்தன்மை அதிகம் உள்ளவையாக, கடினமானவையாக இருக்கும். இவற்றைப் பயன்படுத்துவதால், சருமம் மிகவும் உலர்வாகி மீண்டும் சீபம் அதிகமாகச் சுரக்கும். எனவே, எண்ணெய்ப் பசை சருமத்துக்கான பிரத்யேகமான சோப்புகள் மற்றும் கிளென்ஸர்கள் எதுவென அறிந்து அவற்றைப்பயன்படுத்துங்கள்.

2. ஃபேஷியல் மாஸ்க்

தேன், எலுமிச்சை, ஆலிவ் ஆயில், முட்டையின் வெள்ளைக்கரு, ஆப்பிள் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஷியல் மாஸ்க்கை மாதம் இரண்டு முறை பயன்படுத்தலாம். இது, சருமத்தில் உள்ள நுண்ணிய துவாரங்களை சுத்தமாக்கி முகப்பரு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது.

3. இரண்டு முறைக்கு மேல் முகத்தைக் கழுவாதீர்

பொதுவாக, எண்ணெய்ப் பசை உள்ளவர்கள் அடிக்கடி முகத்தைக் கழுவுவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இது மிகவும் தவறு. இப்படி செய்வதால், சரும செல்கள் பாதிக்கப்படும். ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு மேல் முகத்தைக் கழுவாமல் இருப்பதே நல்லது. வேண்டுமானால், ஒரு சுத்தமான டிஸ்யூ பேப்பரைக் கொண்டு முகத்தைத் துடைத்துக்கொள்ளலாம்.

4. மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்

எண்ணெய்ப் பசை சருமம் என்று மாய்ஸ்சரைசர் கிரீம்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பவர்கள் அதிகம். முகத்தில் வழியும் சீபத்துக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எண்ணெய்பசை சருமத்துக்கான பிரத்யேக மாய்ஸ்சரைசர் கிரீம்களை பயன்படுத்தலாம்.

5. அடிக்கடி முகத்தைத் தொடாதீர்கள்

எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தினருக்கு முகப்பருவால் பாக்டீரியா இருக்கும். நம் கைகள் மோசமான பாக்டீரியா கடத்திகள். இதைக்கொண்டு அடிக்கடி முகத்தை தொடும்போது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு தொற்று பரவிக்கொண்யிருக்கும். எனவே, அடிக்கடி முகத்தைத் தொடாதீர்கள். ஒருமுறை முகத்தைத் தொட்டதும் கை கழுவுங்கள்.

Tags:    

Similar News