அழகுக் குறிப்புகள்

உண்மையாகவே குங்குமப்பூ சருமத்தை அழகாக்குமா?

Published On 2024-01-09 15:32 IST   |   Update On 2024-01-09 15:32:00 IST
  • நரம்பியல் மண்டலத்தைத் தூண்டக்கூடிய சக்தி கொண்டது குங்குமப்பூ.
  • உடல் முழுமையாக கிரகித்துக்கொள்ள குங்குமப்பூ உதவும்.

குழந்தை அழகாக, சிவப்பாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக, கர்ப்ப காலத்தில் மட்டுமே நினைவில் வைத்துக் கொள்ளப்படுகிற குங்குமப்பூவுக்கு வேறு சில பலன்களும் உள்ளன.

 மிக முக்கியமாக நரம்பியல் மண்டலத்தைத் தூண்டக்கூடிய சக்தி கொண்டது குங்குமப்பூ. வலிப்புநோய் மாதிரியான தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு கூட இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சிறிதளவு குங்குமப்பூவை பாலில் சேர்த்துக் கொதிக்க வைத்து குடிக்கலாம். வெற்றிலை போடும் பழக்கமுள்ளவர்கள், வெற்றிலையோடு சிறிது குங்குமப்பூ, ஏலக்காய் சேர்த்துச் சாப்பிட்டால் பசி உணர்வு தூண்டப்படும். சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில மாத்திரைகளையும் வெற்றிலையோடு சேர்த்துச் சாப்பிடலாம்.

நுண்ணூட்டச்சத்துகளை உடல் முழுமையாக கிரகித்துக்கொள்ள குங்குமப்பூ உதவும். வளர்சிதை மாற்ற இயக்கத்தைச் சீராக வைக்கும். சுவாசப்பாதை கோளாறுகள் உள்ளவர்கள், வீசிங் பிரச்சினை உள்ளவர்கள் வெற்றிலையோடு குங்குமப்பூவும் மிளகும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். நீர்க்கோவை மாத்திரை போல குங்குமப்பூவை அரைத்து பற்றுப்போட தலைவலி குணமாகும்.

சிலர் எப்போதும் அதீத சிந்தனையில் இருப்பார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு சரியான தூக்கம் இருக்காது. ஸ்ட்ரெஸ்சும் இருக்கும். எந்த காரணத்துக்காக தூக்கம் இல்லாவிட்டாலும் குங்குமப்பூ உதவும் என அர்த்தமில்லை. நரம்பு தொடர்பான பிரச்சினைகளால் தூக்கமின்றி தவிப்போருக்கு, குங்குமப்பூ நல்ல ஆழ்ந்த உறக்கத்தையும் அமைதியையும் தரும்.

 சருமப் பளபளப்புக்கான தன்மைகள் கொண்டது குங்குமப்பூ. வைட்டமின் ஈ, குளுட்டோதயாமின் போன்ற சரும அழகுக்கான தன்மைகள் உள்ளதால், சருமத்தை மென்மை யாக்கும். சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் குங்குமாதி லேபம் என்பது மிகவும் பிரபலம்.

குங்குமப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் அந்த தைலத்தை வெளிப்பூச்சாக பூசிக்கொள்ளும்போது சருமம் பளபளப்பாக மாறும். கர்ப்பிணிகள் குங்குமப்பூவை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இரண்டு, மூன்று இதழ்களில் தொடங்கி, 15 இதழ்கள் வரை எடுத்துக்கொள்ளலாம்.

பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்கவும் ப்ளீடிங் அதிகரிக்காமல் இருக்கவும் குங்குமப்பூ உதவும். இத்தனை நல்ல தன்மைகள் இருந்தாலும் குங்குமப்பூவில் நிறைய கலப்படங்கள் வருகின்றன. தேங்காய்ப்பூவை சாயமேற்றி குங்குமப்பூ என்ற பெயரில் விற்கிறார்கள். தரமான குங்குமப்பூவை, அளவோடு உபயோகிக்கும்போது அது அருமருந்தாக வேலை செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

Tags:    

Similar News