அழகுக் குறிப்புகள்

வீட்டில் இருக்கும் போது சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டுமா?

Published On 2023-05-25 03:31 GMT   |   Update On 2023-05-25 03:31 GMT
  • கோடை காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமானது.
  • சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

வெளி இடங்களுக்கு செல்லும்போது சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும். சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து செல்களை சேதம் அடையாமல் காக்கும். கோடை காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமானது. வெளியே செல்லும்போது தான் அதனை பயன்படுத்த வேண்டும் என்றில்லை. வீட்டிற்குள் இருக்கும்போதும் சன்ஸ்கிரீனை சருமத்திற்கு பூசி வரலாம். அதனை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

நீல ஒளியில் இருந்து காக்கும்:

ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், கணினிகள் மற்றும் டி.வி.கள் போன்ற எலெக்ட்ரிக் சாதனங்களின் டிஜிட்டல் திரைகள் நீல ஒளியை வெளியிடுகின்றன. அவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. நீல ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் ப்ரீ ரேடிக்கல்கள் வயதாகும் செயல்முறையை விரைவுபடுத்தும். மெலனின் உற்பத்தியையும் ஊக்குவித்து சரும புள்ளிகளை விரைவாக வயதான தோற்றத்திற்கு வித்திடும்.

நீல ஒளியின் வீரியம் சருமத்தை எளிதில் பாதிப்புக்குள்ளாக்குவதுதான் அதற்கு காரணம். அதனை தவிர்க்க தினமும் சன்ஸ்கிரீன் அணிவது நல்லது. குறிப்பாக டிஜிட்டல் திரை சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துபவர்கள் மறக்காமல் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

புற்றுநோயை தடுக்கும்:

வீட்டுக்குள் இருக்கும் சமயங்களில் சூரிய கதிர்வீச்சுக்களால் தீங்கு ஏற்படாது என்று பலர் நினைக்கிறார்கள். அதனால் சன்ஸ்கிரீன் உபயோகிக்க தேவையில்லை என்று கருதுகிறார்கள். ஆனால் சூரியனால் உமிழப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுகளின் வீரியம் எல்லா இடங்களிலும் பரவி இருக்கும்.

ஆரம்பத்தில் சருமத்திற்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தும். காலப்போக்கில் செல்கள் சேதமடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. புற ஊதாக்கதிர்களால் சருமம் பாதிப்புக்குள்ளாகுவதை கவனிக்காவிட்டால் சரும புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

சருமத்தை பாதுகாக்கும்:

சருமத்துக்கு ஈரப்பதமூட்டும் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் சன்ஸ்கிரீன் மூலக்கூறுகள் கொண்ட அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவது சிறப்பானது. நவீன சன்ஸ்கிரீன்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் கூறுகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தியும் சருமத்தை பாதுகாக்கலாம்.

வயது முதிர்ச்சியை தடுக்கும்:

சருமம் விரைவில் முதிர்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தவிர்ப்பதில் சன்ஸ்கிரீனுக்கு முக்கிய பங்கு உண்டு. சன்ஸ்கிரீனிலும் எஸ்.பி.எப். 30-க்கும் அதிகமாக இருக்கும் கிரீமை பயன்படுத்துவது சருமத்திற்கு இதமளிக்கும்.

சன்ஸ்கிரீனை அறவே தவிர்ப்பது, மற்ற சரும பொருட்களின் செயல்திறனைக் குறைப்பதுடன், சூரிய ஒளி அதிகம்படும் பகுதியில் செல்லும்போது சருமத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

Tags:    

Similar News