லைஃப்ஸ்டைல்
சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் சருமத்தில் ஏற்படும் அதிசயங்கள்

சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் சருமத்தில் ஏற்படும் அதிசயங்கள்

Published On 2021-02-10 07:31 GMT   |   Update On 2021-02-10 07:31 GMT
சுரைக்காயை சமையலுக்கு பயன்படுத்துவதோடு ஜூஸாகவும் தயாரித்து பருகலாம். அதன் மூலம் சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை பெற முடியும்.
பழ வகைகள் இனிப்பு சுவையும், ருசியும் கொண்டிருப்பதால் அதனை ஜூஸ் தயாரித்து பருக நிறைய பேர் விரும்புவர். காய்கறிகளில் இனிப்பு சுவை இல்லாததால் அதனை ஜூஸாக பருகுவதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் காய்கறிகளிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. சுரைக்காயை சமையலுக்கு பயன்படுத்துவதோடு ஜூஸாகவும் தயாரித்து பருகலாம். அதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.

* சரும செல்களுக்கு வயதாகும்போது, சுருக்கங்கள் தோன்றும். சுரைக்காயில் இருக்கும் வைட்டமின் சி யும், துத்தநாகமும் முன்கூட்டியே முதுமை வருவதை தாமதப்படுத்தும் தன்மை கொண்டவை. சரும செல்கள் முதுமை அடைவதையும் தடுத்து நிறுத்தும். முகத்தில் சுருக்கங்கள் இருந்தால் அதனையும் போக்கும். தொடர்ந்து சுரைக்காய் ஜூஸ் பருகி வந்தால் முன்கூட்டியே வயதான தோற்றம் உண்டாவதை தவிர்க்கலாம்.

* சுரைக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் இருப்பதால் இயற்கையாகவே முகத்தில் பளபளப்பு தன்மையை ஏற்படுத்தும். சுரைக்காய் ஜூஸை தினமும் குடித்துவந்தால் உடல் இயக்க செயல்பாடுகள் சீராவதோடு, சருமத்திற்கு புத்துணர்வும் கிடைக்கும்.

* காலையில் எழும்போது கண்களில் வீக்கம் இருந்தால் சுரைக்காய் ஜூஸ் பருகலாம். சுரைக்காய் சருமத்தை குளிரூட்டும் தன்மை கொண்டது. வீங்கிய கண்கள் மீது சுரைக்காய் துண்டுகளை கால் மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவி வரலாம்.

* கூந்தல் பராமரிப்புக்கும் சுரைக்காய் ஜூஸை பயன்படுத்தலாம். இது முடி நரைப்பதை தடுக்கும். உச்சந்தலையில் சுரைக்காய் ஜூஸை தடவி மசாஜ் செய்து வரலாம். முடி நிறம் மாறுவதை கட்டுப்படுத்து வதோடு முடி உதிர்வதை குறைக்கும்.

* சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள், நச்சுகள், தூசுகளை அப்புறப்படுத்தும் சுத்திகரிப்பானாகவும் சுரைக்காய் விளங்குகிறது. முகப்பரு பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சுரைக்காய் ஜூஸ் ருசிக்கலாம்.

* இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை சுரைக்காய்க்கு இருக்கிறது. சருமம் மிருதுவாக மாறவும் இது வழி வகுக்கும். உடலின் உள் உறுப்புகளை சுத்திகரிக்க துணைபுரிவதால் ஏராளமான உடல்நல பிரச்சினைகளை தவிர்க்கலாம். சுரைக்காய் ஜூஸ் பருக விருப்பம் இல்லாவிட்டால் சிறிதளவு கடலைமாவு, தயிருடன் சுரைக்காய் ஜூஸ் கலந்து பசைபோல் குழப்பி வாரம் இருமுறை முகத்தில் பூசி வரலாம்.
Tags:    

Similar News