லைஃப்ஸ்டைல்
சில்வர் நிற ஜரிகைகளுடன் கவர்ந்திழுக்கும் பட்டுச் சேலைகள்...

சில்வர் நிற ஜரிகைகளுடன் கவர்ந்திழுக்கும் பட்டுச் சேலைகள்...

Published On 2020-11-18 06:12 GMT   |   Update On 2020-11-18 06:12 GMT
இப்பொழுது பெண்களிடையே பெரிதும் பிரபலமாகி வருவது சில்வர் நிற ஜரிகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் பட்டுச்சேலைகளாகும். இதுபோன்று சில்வர் நிறத்தில் வரும் ஜரிகைகள் சேலைக்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன.
பட்டுச் சேலைகளில் எப்பொழுதும் தங்கநிற ஜரிகைகளில் அருமையான பார்டர்களும், அட்டகாசமான பல்லுவும் இருப்பதைப் பார்க்க முடியும். இப்பொழுது பெண்களிடையே பெரிதும் பிரபலமாகி வருவது சில்வர் நிற ஜரிகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் பட்டுச்சேலைகளாகும். இதுபோன்று சில்வர் நிறத்தில் வரும் ஜரிகைகள் சேலைக்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன.

* பிளையின் நிற மருதாணிப் பச்சையில் சில்வர் நிற ஜரிகையுடன் ஒருபுறம் மட்டும் பார்டர் இருக்க, பல்லு முழுவதும் சில்வர் நிற ஜரிகையால் நெய்யப்பட்டிருப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. சில்வர் நிற ஜரிகைகளுக்கு ஏற்றார் போல் உடல் நிறத்தை சேலையில் தேர்ந்தெடுத்து நெய்கிறார்கள் என்றே சொல்லலாம். இதுபோல் உடல் பிளையின் வண்ணத்தில் இருக்க பார்டரும், பல்லுவும் சில்வர் ஜரிகையுடன் இருப்பது மிடுக்கான தோற்றத்தைத் தருகின்றது.

* உடல் முழுவதும் ருத்திராட்ச டிசைனானது சில்வர் ஜரிகையால் நெய்யப்பட்டு, பல்லுவும் உடல் வண்ணத்திலேயே சில்வர் ஜரிகையால் நெய்யப்பட்டிருக்கும். இந்தச் சேலைகளுக்கு உதாரணமாக உடல் வண்ணம் பச்சை நிறத்தில் இருந்தால் அதற்கு மாறுபட்ட வண்ணமான மஜந்தா நிறத்தில் பைப்பிங் பார்டருடன் இருப்பது அணிந்து கொள்பவருக்கு நேர்த்தியான தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும். பிளவுசானது பைப்பிங் பார்டர் நிறத்திலேயே புடவையுடன் இணைக்கப் பட்டிருக்கின்றது.

* பிங்கிஷ் ஆரஞ்சு நிறச் சேலைக்கு பீச் சில்வர் டிஷ்யுவுடன் மீனாகாரி வேலைப்பாடு செய்யப்பட்டு வரும் சேலையின் அழகை என்னவென்று வர்ணிப்பது. இது போன்ற சேலைகள் அணிவதற்கு இலகுவாகவும், நிற பேதமில்லாமல் உடுத்துவதற்கு ஏற்றதாகவும் இருக்கின்றது.

* சேலையின் மேற்புறம் சில்வர் ஜரிகையுடன் பெரிய பார்டரும், கீழ்புறம் தங்கநிற ஜரிகை பார்டர். அதன் கீழே மேல்புறம் இருப்பதைப் போன்ற பெரிய சில்வர் ஜரிகை பார்டருடன் உடல் முழுவதும் குறுக்குவாட்டில் கோடுகள் சில்வர் ஜரிகையால் டிசைன் செய்யப்பட்ட சேலைகள் வித்தியாசமாகவும், புது வரவாகவும் உள்ளன. எளிமையான விழா மட்டுமல்லாமல் எந்த விழாவிற்கு நீங்கள் இந்தச் சேலையைக் கட்டிக்கொண்டு சென்றாலும் சபையின் நாயகியாக நீங்கள் இருப்பீர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

* தங்கநிற ஜரிகையில் வைர ஊசியுடன் பட்டுச்சேலைகளைப் பார்த்திருக்கிறோம். அதேபோல் சில்வர் நிற ஜரிகையில் வைரஊசியுடன் நெய்யப்படும் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். சாம்பல் நிற உடல் பகுதியில் சில்வர் ஜரிகை வைரஊசி டிசைன் அதற்கு காண்ட்ராஸ்டாக வாடாமல்லி, மஜந்தா, அடர்த்தியான இலைப்பச்சை அல்லது அடர்த்தியான நீலநிற கையகல பிளையின் பார்டர் கற்பனை செய்து பாருங்கள். பல்லுவும் பார்டர் நிறத்தில் டெம்பிள் பார்டராக இருந்தால் அதன் அழகைப்பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம்.

* அடர்த்தியான நீலம், பச்சை, மஜந்தா போன்ற உடல் பகுதி இருக்கும் சேலைகளின் நடுவில் ஆங்காங்கே சில்வர்நிற ஜரிகையில் மாங்காய் மற்றும் புட்டாக்களை டிசைன் செய்திருக்கிறார்கள். அதன் பார்டர் மற்றும் பல்லுவிற்கு வெளிர் சந்தன நிறத்தில் சில்வர் ஜரிகை கோடுகளுடன் மெல்லிய பைப்பிங் பார்டர்களுடன் வரும் சேலைகள் அனைத்துவித விழாக்களுக்கும் உடுத்திக் கொள்ள ஏற்றதாக உள்ளது.

* சில்வர் ஜரிகைகளுடன் பார்டரே இல்லாமல் வரும் பட்டுப்புடகைகளும் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் அணிந்தாலும் மிக அழகிய தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும். இளமஞ்சள், இளஞ்சிவப்பு, இளம்பச்சை போன்ற வண்ணங்களில் சில்வர் ஜரிகையில் மீனாகாரி பூ வேலைப்பாடுகளுடன் இடையில் சில்வர்ஜரி புட்டாக்களும் வந்திருப்பது அட்டகாசமாக உள்ளது. பல்லவின் காண்ட்ராஸ்ட் நிறமானது பூக்களின் நடுவில் வருவதுபோல் வடிவமைத்திருப்பது சேலைக்கு மேலும் அழகைக் கூட்டுகின்றது என்றே சொல்லலாம்.

* உடல்பகுதி, பல்லு என அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்க சிறிய கான்ட்ராஸ்ட் பைப்பிங் பார்டரானது சேலையின் அழகை மேலும் கூட்டுகின்றது எனலாம். பைப்பிங் பார்டரின் மேலே சேலையின் கீழ்ப்புறம் மட்டும் யானை, குதிரை, மான், அன்னப்பறவை மற்றும் மயில் போன்றவை சில்வர் ஜரிகையில் நெய்திருப்பது பாரம்பரிய டிசைனை சேலையில் எதிர்பார்ப்பவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். பல்லுவிலும் பாரம்பரிய டிசைன்களையோ அல்லது புட்டாக்களையோ சில்வர் ஜரிகையில் டிசைன் செய்திருப்பது மிகவும் அசத்தலாக உள்ளது. கான்ட்ராஸ்ட் பைப்பிங் பார்டர் நிறத்திலேயே பிளையின் பிளவுஸ்கள் இந்தச் சேலைகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
Tags:    

Similar News