லைஃப்ஸ்டைல்
மங்கையருக்கேற்ற பல விதமான தங்க மாலைகள்...

மங்கையருக்கேற்ற பல விதமான தங்க மாலைகள்...

Published On 2020-11-09 06:00 GMT   |   Update On 2020-11-09 06:00 GMT
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு காசுமாலையை தவிர பிற மாலைகளை பற்றி அவ்வளவாக தெரிவதில்லை. சரி, என்னென்ன மாலைகள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம் வாங்க...
நகைகளில், தங்கத்தினால் செய்த மாலைகளுக்கு எப்பொழுதுமே ஒரு தனி மதிப்பு உண்டு. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு காசுமாலையை தவிர பிற மாலைகளை பற்றி அவ்வளவாக தெரிவதில்லை. சரி, என்னென்ன மாலைகள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம் வாங்க...

மல்லிகை அரும்பு மாலை: தங்க செயினில் தங்க குண்டுகள் கோர்க்கப்பட்டு, ஒவ்வொரு குண்டிலிருந்தும் ஒரு மல்லிகை மொட்டானது நீட்டிக் கொண்டிருக்க, குண்டையும் மல்லிகை அரும்பையும் இணைக்கும் இடத்தில் பெரும்பாலும் சிறிய சிவப்பு கல்லானது பதிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடியும். இந்த கல்லின் நிறத்தால் மல்லிகை அரும்பானது மேலும் அழகாக இருக்கின்றது. சில மாலைகளில் நீண்ட பட்டை செயினிலிருந்து அரும்புகள் மெல்லியதாகவோ, ஊசி போன்றோ அல்லது குண்டாகவோ இருப்பதுபோல் வடிவமைத்திருப்பது கண்களுக்கு விருந்தாக இருக்கின்றது. இதுபோன்ற அரும்பு மாலைகளில் பெரிய டாலர்கள் வைத்தும் வருகின்றன. மல்லிகை அரும்பு மாலைகளானது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், தென்னிந்திய பெண்களால் குறிப்பாக கேரள பெண்களால் விரும்பி அணியப்படும் நகையாகும். சாதாரண கற்கள் பதிக்காத முல்லை மொட்டு மாலைகளும் அணிந்தால் ஒரு மிரட்சியான அழகை தருகின்றன.

மாங்கா மாலை: பாரம்பரிய நகை வகைகளில் மாங்கா மாலையும் இடம்பெறும். பிளெயின் மாங்கா மாலை, கற்கள் பதித்த மாங்கா மாலை, ஒவ்வொரு மாங்காயின் மேலும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இருப்பது, மாங்கா மாலையில் பெரிய பதக்கங்கள் வைத்தது போல் வருவது, சிவப்பு மற்றும் பச்சைக்கல் பதித்த மாங்கா மாலை, முழுவதும் சிவப்பு கல் பதித்த மாங்கா மாலை, முழுவதும் வெள்ளை கற்கள் பதித்து செய்த மாங்கா மாலை என்று மிக நீளமாக சொல்லிக்கொண்டே போகலாம்.

நீண்ட மாங்காய், தட்டை மாங்காய், சிறிய மாங்காய் என்று மாங்காய் மாலைகளில் செய்யப்பட்டிருக்கும் நுணுக்கமான வேலைப்பாடுகளை பார்க்கும் போது அதை செய்தவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. மாங்காய் மாலைகளின் முடிவில் இரண்டு மயில்கள் ஒன்றோடொன்று ஒட்டியிருப்பது போல் இருக்க அதன் நடுவிலிருந்து தொங்கும் அகலமான பென்டேன்டுகளின் கீழே தொங்கும் தங்க குண்டுகள் மாங்கா மாலைக்கு கூடுதல் அழகை தருகின்றன.

கற்கள் பதித்த பூவேலை பாட்டுடன் இருக்கும் பட்டை செயினில் பிளெயின் தங்கத்தினால் செய்யப்பட்ட மாங்காய்கள் இருப்பது போல் செய்யப்பட்டிருப்பவை வித்தியாசமாகவும், அதே சமயம் அழகாகவும் இருக்கின்றன. மாங்காய் மாலைகள் குட்டையாக இருப்பதும் பார்வைக்கு அழகாகவே இருக்கின்றன. ஆன்டிக் பினிஷில் செய்யப்படும் மாங்கா மாலைகள் அழகோ அழகு. மாங்காய்களின் மேல் பச்சைக்கற்கள் பதித்து வருவது அசலான மாங்காய்களை ஞாபகப்படுத்துகின்றன.

காசு மாலை: பழைய கால நகையாக மட்டுமல்லாமல் இன்றும் அனைவராலும் விரும்பி அணியப்படும் நகை என்றால் அது காசுமாலையாகத்தான் இருக்கும். பிளெயின் காசு மாலைக்கு கற்கள் பதித்த தாமரை பென்டன்ட், காசு மாலையின் இடையில் கற்கள் பதித்த முகப்பு, பிளெயின் தங்க காசுமாலை, ஒவ்வொரு காசிற்கும் இடையே தனியாக வண்ண ஒற்றை மணிகள் (பீட்ஸ்) இருப்பது போன்ற மாலை, கற்கள் பதித்த வரிசையை அடுத்து தங்க குண்டுகள் வரிசை, அதை தொடர்ந்து காசு மாலை வரிசை, அதற்கு பெரிய லட்சுமி டாலரின் கீழே தங்க சலங்கைகள் தொங்குவது, தங்க காசுகளின் கீழே முல்லை மொட்டுகள் நீட்டி கொண்டிருப்பது, காசுகளில் சாமி உருவம் இல்லாமல் பூ டிசைனுடன் இருப்பது, நான்கைந்து காசுகள் ஒன்றன் கீழ் ஒன்றாக இணைந்திருக்க அதிலிருந்து தங்க குண்டுகளுடன் சரங்கள் தொங்குவது போன்ற மாலைகள் அனைத்துமே தனித்துவமான பாணிகளில் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

நீண்ட பெரிய காசு மாலையின் மேலே மற்றொரு வரிசையாக சிறிய காசுகள் இணைக்கப்பட்டு இருப்பது பார்ப்பதற்கு பெரிய இரண்டு காசுகளின் மேலே ஒரு சிறிய காசு என்று அழகாக வரிசைப்படுத்தப்பட்டு அதற்கு கற்கள் பதித்து செய்யப்பட்ட ஒரு பெரிய டாலரானது மிரட்டும் அழகுடன் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.

காசு மாலைகள் குறைந்த பவுனிலும் மிகவும் பார்வையாக கிடைக்கின்றன. ராமர், லட்சுமணர் மற்றும் சீதையுடன் இருப்பது போன்ற காசுகளால் செய்யப்பட்ட மாலையானது சந்திர வடிவ டாலர்கள் வைத்தும், டாலர்கள் இல்லாமலும் கிடைக்கின்றன. ஒவ்வொரு காசிற்கும் இடையில் ஏதாவது வண்ண மணிகள் கோர்க்கப்பட்டு அதற்கு கெம்ப் கற்கள் பதித்த பதக்கங்கள் சற்றே கற்பனை செய்து பாருங்கள். ஒரே காசுமாலையில் இருபுறமும் முகப்புகள் வைத்து வருபவை நவீனமாகவும் அழகாகவும் உள்ளன.

கருகமணி மாலை: கருப்பு நிற மணிகளுடன் தங்க குண்டுகள் கோர்த்து செய்யப்படும் இந்த மணி மாலைகளை பெரும்பாலும் திருமணம் முடித்த பெண்களே அணிகிறார்கள்.

இவை மட்டுமல்லாது புலி நக மாலைகள், நாகப்பட மாலை, பாலைக்கா மாலை, தங்க குண்டு மாலை, கொடி மாலை, முத்து மாலைகள், பவள மாலைகள் என மாலைகளில் பல வகைகளும் டிசைன்களும் உள்ளன. அடுக்கடுக்காக கோர்க்கப்பட்டு வரும் மகிழம்பூ மாலையானாது மிகவும் அழகாகவும், நுணுக்கமான வேலைப்பாடுடனும் செய்யப்பட்டு இருக்கின்றன. நாகப்பட மாலை என்பது நாகம் படமெடுப்பது போல் கற்களின் வடிவமானது இருக்க அவற்றை தங்கத்தில் பதித்து செய்யப்பட்டிருப்பதாகும். பாலைக்கா மாலை என்பது சதுரவடிவிலிருக்கும் பச்சை கற்களை தங்கத்தில் பதித்து செய்யப்படுவதாகும்.
Tags:    

Similar News