பொது மருத்துவம்

இன்று உலக ரேபிஸ் விழிப்புணர்வு தினம்

Published On 2023-09-28 12:19 IST   |   Update On 2023-09-28 12:19:00 IST
  • எல்லா இடங்களிலும் நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
  • நாய்களை கொல்ல சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

நாய்களின் தொல்லை கட்டுப்படுத்த முடியாத பிரச்சினையாக, நாடு முழுவதும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நகரின் ஒவ்வொரு தெருவிலும், சாலையிலும் நாய்கள் கூட்டம், கூட்டமாக திரிந்து கொண்டிருக்கின்றன.

இந்த நாய்களால் மனிதர்கள் கடி வாங்குவது ஒரு பிரச்சினையாக இருந்தாலும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது குறுக்கே பாய்ந்து, மக்களை விபத்துக்குள்ளாக்குவதும் மற்றொரு பிரச்சினையாக இருக்கிறது. நாய்களை கொல்ல சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

இதனால் கருத்தடை செய்து கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டாலும், அதற்கு பலன் இல்லை. இந்த நிலையில் உலகம் முழுவதும் ரேபிஸ் விழிப்புணர்வு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

ஹைட்ரோ போபியா

விலங்குகளிடம் இருந்து ரேபிஸ் என்னும் வைரஸ்கள் ஏற்படுத்தும் இந்த நோயை தடுப்பதற்கு தடுப்பூசி உள்ளதே தவிர முழுமையாக குணப்படுத்துவது இன்னும் பெரும் சவாலாகவே உள்ளது. உலகில் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுகிறார். இந்த நோய் நாய் கடித்தால் தான் பரவும் என்ற தவறான கண்ணோட்டம் மக்களிடையே இருந்து வருகிறது. பாலூட்டி வகை விலங்குகள் மூலமும் பரவுகிறது.

இந்தியாவில் பெரும்பாலும் தெருவோர நாய்களின் மூலமாகத்தான் இந்த நோய் பரவுகிறது. பாலூட்டி வகை உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும் போது அதன் உமிழ்நீர் ரத்தத்தில் கலந்து அல்லது திறந்த காயங்களில் கலந்து இந்த நோயை ஏற்படுத்துகின்றது.

வெறிநாய்கடியின் பாதிப்பு ஒருவருக்கு அதிகமாகி உள்ளது என்பதை சம்பந்தப்பட்ட நபர் தனக்கு மேலாக சுழலும் மின்விசிறியைக் கண்டு அச்சப்படுவதில் இருந்தும், தண்ணீரை குடிக்க கொடுத்தால் அதை பார்த்து அலறுவதில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம். இதை தான் ஹைட்ரோ போபியா என்று கூறுகிறோம். குணப்படுத்தவே முடியாது என்று ஒரு நோய் உண்டெனில் அதுதான் இந்த வெறிநாய்கடி நோய்தான். ஆனால் முறையான விழிப்புணர்வு மூலம் அதனை தடுக்கலாம்.

மரணம் நிச்சயம்

உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 70 ஆயிரம் பேர் இந்நோய்க்கு பலியாகின்றனர். இந்தியாவில் 14 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள்.பெரும்பாலும் இந்தநோய் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் மேலோங்கி காணப்படுகிறது. 5 முதல் ௧௫ வயது வரை உள்ள சிறுவர்களே பெரும்பாலும் பலியாகிறார்கள். இந்தநோய் பாதிப்பு அதிகமானால் மரணம் நிச்சயம். ஆனால் முறையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டால் முற்றிலும் நாம் நம்மை இதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

உயிரை பறிக்கும் இந்தநோய் எதிர்பாராத நேரத்தில் நம்மை தாக்கக்கூடும். எனவே இதற்கு 100 சதவீத சிகிச்சை தடுப்பூசி மட்டுமே. முறையாக நாய் கடித்த உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். நாய்கடித்த ஒருவருக்கு உடனே முதலுதவி செய்ய வேண்டும். அவருக்கு காயம்பட்ட இடத்தை 15 நிமிடம் சோப்புத்தண்ணீரில் கழுவ வேண்டும். ஏதேனும் ஆண்டிசெப்டிக் மருந்தினை தடவலாம்.

காயம் பெரியதாக இருந்தால் ரேபீஸ் தடுப்பு புரதத்தை காயத்தை சுற்றிலும் போட வேண்டும். தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனைப்படி வெறிநாய்க்கடி தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். ஒருபோதும் நாய் கடித்த இடத்தை கட்டுதல் கூடாது.

நாய்கடி பட்டவர் 5 தவணை தடுப்பூசியை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். நாய் கடித்த நாள் முதல் தவணையும், 3-ம் நாள் இரண்டாம் தவணையும், 7-ம் நாள் மூன்றாம் தவணையும், 14-ம் நாள் நான்காம் தவணையும், 28-ம் நாள் 5-ம் தவணையும் தடுப்பூசி தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது.

நம் நாட்டைப் பொறுத்தவரை தெருவோர நாய்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தி, முறையாக தடுப்பூசி செலுத்தினால் வெகுவாக இந்தநோயின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம், அதன்மூலம் பல உயிரிழப்புகளையும் தடுக்கலாம்.

Tags:    

Similar News