பொது மருத்துவம்

'சைனஸ்' பிரச்சினையிலிருந்து விடுபட எத்தகைய சிகிச்சை தேவை?

Published On 2023-03-06 13:56 IST   |   Update On 2023-03-06 13:56:00 IST
  • சைனஸ் வெற்றிடங்களில் காற்று நிரம்பி இருக்கும்.
  • குளிர்ந்த உணவு வகைகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சைனஸ் என்பவை நாசிக் குழிகளில் அமைந்துள்ள வெற்றிடங்கள் ஆகும். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள குளிர்த்தன்மையை நீக்குதல், நாசிக்குழிகளில் உருவாகும் சளியை மூக்கின் வழியே வெளியேற்றுதல், நாம் பேசும் ஒலியின் தன்மையை அதிகரித்தல் போன்றவை சைனஸ்சின் செயல்பாடுகள் ஆகும்.

சைனசைட்டிஸ் காரணங்கள்: சாதாரணமாக, சைனஸ் வெற்றிடங்களில் காற்று நிரம்பி இருக்கும். தொற்றுகளின் போது அதில் நீர், சளி கோர்த்து இருமல், காய்ச்சலை ஏற்படுத்தும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை தொற்றுக்கள், மூக்கினுள் வளரும் சளிச்சவ்வு வளர்ச்சிகள் (பாலிப்கள்), தூசு, தட்பவெப்பம், உணவுப் பொருட்களினால் ஏற்படும் ஒவ்வாமை, இரண்டு மூக்குத் துளைகளையும் பிரிக்கும் குருத்தெலும்பு வளைந்து காணல், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பது, அதிக வெப்பமான நேரங்களில் குளிர்ந்த பொருட்களை குடித்தல், திடீர்மழையில் நனைதல் போன்றவை இதற்கான காரணங்கள் ஆகும்.

நோய்க்கான அறிகுறிகள்: மூக்கிலிருந்து தண்ணீர் போன்று அல்லது மஞ்சள், இலை பச்சை நிறத்தில் கட்டியாக சளி வெளிவருதல். மூக்கடைப்பு , மூச்சுவிட சிரமப்படுதல், தலைவலி, பல்வலி, காதடைப்பு, சுவை மற்றும் வாசனை தெரியாமல் இருத்தல், இருமல், உடல் சோர்வு, காய்ச்சல், மூச்சு விடும்போதும், பேசும்போதும் கெட்ட வாடை வீசுதல் (ஹாலிடோசிஸ்), கண்களில் அழுத்தம், வலி போன்றவை ஆகும். இந்த அறிகுறிகள் 12 வாரங்களுக்கு உட்பட்டிருந்தால், திடீர் சைனசைட்டிஸ் என்றும், 12 வாரங்களுக்கு மேலும் தொடர்ந்தால், நாட்பட்ட சைனசைட்டிஸ் என்றும் கூறப்படுகிறது.

இந்த நோய்-பிராண்டல், எத்மாய்டல், ஸ்பினாய்டல், மாக்சில்லரி என்று நான்கு வகைப்படும். 1) மாக்சில்லரி சைனஸ்: சைனஸ்களில் இதுதான் மிகப்பெரியது. இது கண்ணுக்குக் கீழாக மேல்தாடை எலும்பில் அமைந்துள்ளது, 2) பிராண்டல் சைனஸ்: இது கண்களுக்கு மேலாக நெற்றி எலும்பில் அமைந்துள்ளது, 3) எத்மாய்டல் சைனஸ்: இது மென்மையான எலும்புப் பகுதியான மேல்மூக்கில் இரு கண்களுக்கிடையே உள்ளது, 4) ஸ்பினாய்டல் சைனஸ்: இது இரண்டு பெரிய ஸ்பினாய்டு எலும்புகளில் கண்களின் ஓரத்தில் அமைந்துள்ளது.

இதில் எந்த வகை சைனஸ் உங்களை பாதித்துள்ளது என்பதை இந்த அறிகுறிகள் மூலம் அறியலாம். 1) பிராண்டல் சைனஸ்: நெற்றியில் வலி, தலைவலி. 2) மாக்சில்லரி சைனஸ்: கன்னங்களில் வலி, பல்வலி, முகம் வீங்கிக்காணுதல். 3) எத்மாய்டல் சைனஸ்: கண்களில் வலி, கண் சிவத்தல், கண்ணீர் வடிதல். 4) ஸ்பினாய்டல் சைனஸ்: கண்களைச் சுற்றி வலியால் துடிப்பது போன்ற உணர்வு.

சைனசைடிஸ் எனப்படும் நீர்க்கோவை குணமடைய பழக்க வழக்கங்கள் மற்றும் சித்த மருத்துவ தீர்வுகள்:

1) சுத்தமான உப்பு நீர்க்கரைசலை ஒரு மூக்குத்துளையில் விட்டு இன்னொரு மூக்குத் துளை வழியே வெளியேற்றலாம். 2) நன்றாகக் கொதிக்க வைத்த நீரில் மஞ்சள் தூள் போட்டு போர்வையால் நன்கு மூடி ஆவி பிடிக்க வேண்டும். அதுபோல, நொச்சி இலைகளை நன்றாகத் தண்ணீரில் கொதிக்கவைத்து ஆவிபிடிக்கலாம். 3) தும்பைப்பூ மலர்களை கசக்கி ஒரு சொட்டு வீதம் இரு மூக்குத்துளைகளிலும் விடலாம். 4) நீர்க்கோவை மாத்திரையை நீரில் உரசி நெற்றி, கன்னத்தில் பற்றிடலாம். 5) தாளிசாதி சூரணம் ஒரு கிராம் அல்லது திரிகடுகு சூரணம் ஒரு கிராம், இதனுடன் சிவனார் அமிர்தம் 100 மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி., கஸ்தூரி கருப்பு 100 மி.கி. இவற்றை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும். 6) சுக்குத்தைலம், அரக்குத்தைலம், பீனிசத் தைலம், நாசிரோக நாசத்தைலம் போன்ற மருந்துகளை வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளிக்கலாம்.

சைனசைட்டிஸ் தடுப்புமுறைகள்: கடும் வெயில் நேரங்களில் குளிர்ந்த உணவு வகைகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், உடல் வெப்பத்துடன் குளிர் சேரும்போது உடலில் நீர்க்கோவை (சைனசைட்டிஸ்) நிலையை ஏற்படுத்தும். தலை வியர்க்கும் போதும், தலைக்கு குளித்த உடனும் நன்கு ஈரம் காய தலையை துடைத்து, தலைவாரிக் கொள்ள வேண்டும்

இளவெதுவெதுப்பான வெந்நீர், மிளகு கலந்த பால், சுக்கு கலந்த பால் போன்றவற்றை குடிப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்திக்குரிய கீரைகள், பழங்கள், பால், முட்டை, பயறுவகைகள் போன்றவற்றை தினசரி உட்கொள்ள வேண்டும்.

சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

மின்னஞ்சல்: doctor@dt.co.in,

வாட்ஸ் அப்: 7824044499

Tags:    

Similar News