பொது மருத்துவம்

இருதய நோய்க்கு மருந்தாகும் நிலக்கடலை

Published On 2023-03-26 14:53 IST   |   Update On 2023-03-26 14:53:00 IST
  • வேகவைத்த கடலை மிகவும் நல்லது.
  • நிலக்கடலையில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.

இந்தியாவில் அதிகமாக பயிரிடப்படும் எண்ணெய் வித்து பயிர் நிலக்கடலை ஆகும். நிலக்கடலையில் ¼ சதவீதம் புரதமும், ½ சதவீதம் எண்ணெயும் இருக்கிறது. இதில் வைட்டமின் 'பி' சத்துக்களான தயாமின் மற்றும் நயாசின் உள்ளது.

சமையல் எண்ணெய்

கடலையை பச்சையாகவும் வறுத்தும், வேகவைத்தும், சுட்டும் சாப்பிடலாம். உப்பு, காரம் சேர்த்தும் தயார் பண்ணலாம். இனிப்பாகவும் சாப்பிடலாம். கடலையை அதிகமாக வறுக்கக் கூடாது. அப்படி செய்வதால் அதிலுள்ள புரதசத்து பாதிக்கப்பட்டு நமக்கு முழுவதும் கிடைக்காமல் போய்விடும். அதோடு சுவையும் கெட்டுவிடும்.

வேகவைத்த கடலை மிகவும் நல்லது. கடலையில் இருந்து எடுக்கும் எண்ணெய் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சிறுகுழந்தைகளுக்கு சத்துணவு தயாரிக்கும் போது தானியம், பருப்பு இவற்றுடன் ஒரு பங்கு நிலக்கடலையை மாவாக்கி சேர்த்தால் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். வறுத்த கடலையைச் சிறிது வெல்லத்தோடு சேர்த்து சாப்பிடுவதால் புரதமும், சக்தியும் கிடைக்கும். நிலக்கடலையை பயன்படுத்தி பலவிதமான உணவுப்பொருட்கள் தயாரிக்கலாம். அதாவது நிலக்கடலை பால், நிலக்கடலை வெண்ணெய், நிலக்கடலைபொடி புண்ணாக்கு, எண்ணெய் முதலியனவாகும்.

மருத்துவ குணங்கள்

நிலக்கடலையில் அதிகளவு நார்ச்சத்து, அன்சேச்சுரேடட் கொழுப்பு உள்ளது. இதனால் நிலக்கடலையை உண்பதால் இருதயநோய் மற்றும் சர்க்கரைநோய் குறைவதோடு ரத்தஅழுத்தமும் குறைகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் நிலக்கடலையில் இருந்து கீழ்கண்ட பொருட்களை தயாரித்து தொழில் முனைவோராகவும் மாறலாம்.

தொழில் முனைவோர்

இதேபோல் நிலக்கடலை முறுக்கு, நிலக்கடலை சட்னி, நிலக்கடலை அல்வா, நிலக்கடலை பொடி, நிலக்கடலை பால், நிலக்கடலை சூப், நிலக்கடலை பக்கோடா என நிலக்கடலையில் விதவிதமாக தயாரித்து படித்த இளைஞர்களும், பட்டதாரிகளும், இளம்பெண்களும் தொழில் முனைவோராக மாறலாம். இதுதொடர்பாக விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பொதுமக்களுக்கு அவ்வப்போது செயல்விளக்க பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவலை உணவியல் துறை வேளாண் விஞ்ஞானி முனைவர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News