பொது மருத்துவம்

மணத்தக்காளி கீரையின் மகத்துவம்

Published On 2024-03-31 10:24 GMT   |   Update On 2024-03-31 10:24 GMT
  • ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்த கீரைகளுள் மணத்தக்காளியும் ஒன்று.
  • வறண்ட பகுதிகளில் அதிகம் விளையக்கூடியது.

உடல் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்த கீரைகளுள் மணத்தக்காளியும் ஒன்று. குளிர்ச்சியான தன்மை கொண்ட மணத்தக்காளி கீரை, வறண்ட பகுதிகளில் அதிகம் விளையக்கூடியது. வீட்டிலும் விளைவிக்கலாம். எல்லா காலங்களிலும் ஓரளவு கிடைக்கக் கூடியது இது.

மணத்தக்காளி கீரையின் காய், பச்சை மணியைப் போல இருப்பதால், மணித்தக்காளி என்றும் அழைப்பார்கள். இதன் பழம் மிளகு போல உள்ளதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார்கள். வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும்.

மணத்தக்காளி கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படும். கொஞ்சம் கசப்புத்தன்மை கொண்டதாகும் இக்கீரை. மணத்தக்காளி கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவைதான். இதில் அதிகளவு புரதம், மாவுச்சத்து, தாது உப்புகள் நிறைந்துள்ளன. இந்தக் கீரையுடன் பருப்பு சேர்த்து கூட்டு, பொரியல், குழம்பு வைக்கலாம்.

மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் வருமாறு:-

வாய்ப்புண்: மணத்தக்காளி கீரையை சாறு எடுத்து வாயிலிட்டு சிறிதுநேரம், தொண்டையில் வைத்து கொப்புளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். கூடவே வாய் துர்நாற்றமும் நீங்கும்.

வயிற்றுப்புண்: தீராத வயிற்றுப் புண்ணை மணத்தக்காளி ஆற்றும். மணத்தக்காளி கீரையின் சாறை எடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் அளவுக்கு பருகிவந்தால் வயிற்றுப்புண் சீக்கிரம் ஆறிவிடும். குறைந்தது பத்து நாட்களாவது இவ்வாறு பருக வேண்டும்.

இதய பலவீனம்: இதய பலவீனம் உடையவர்கள் வாரம் மூன்று முறை மணத்தக்காளி கீரையுடன் இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு கலந்து சமையல் செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாகும். பொதுவாக மணத்தக்காளி கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், உடல் நலம் பெறும். ரத்தம் சுத்தமாகி முகம் வசீகரமாகும். சிறந்த மருத்துவ உணவாக பயன்படும் மணத் தக்காளி கீரையை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக்கொள்வது நலம்.

Tags:    

Similar News