காயங்களை கட்டி மூடி வைப்பது சரியா? அப்படியே திறந்துவிடுவது நல்லதா?
- தோல் மூன்று அடுக்காக நமக்கு இருக்கிறது.
- பேண்டேஜ் போடுவதால் புதுத்தோல், புது செல்கள் உயிரோடு இருக்க உதவும்.
உடலில் ஏற்பட்ட ஒரு காயத்தை, ஒரு புண்ணை திறந்து விட்டு மருந்து போட்டுக் கொண்டிருப்பது சரியா அல்லது மருந்து தடவி கட்டு கட்டி மூடி வைத்திருப்பது சரியா?
காயம் ,சாதாரண புண், அடிபட்டு தையல் போட்ட இடத்தில் ரணம் இவை எல்லாமே நமது உடலின் ஏதாவதொரு இடத்திலுள்ள தோலில் தான் ஏற்பட்டிருக்கும். தோல் நமது மொத்த உடலையும் மூடியிருக்கும் ஒரு மிகப்பெரிய உறுப்பு ஆகும். தோல் மூன்று அடுக்காக நமக்கு இருக்கிறது. மேல்தோல், நடுத்தோல் மற்றும் அடித்தோல் ஆகும்.
மேலோட்டமான காயம் அதாவது வெறும் மேல்தோலில் மட்டும் தோல் கிழிந்து காயம் ஆகியிருக்கிறது, உதாரணத்திற்கு- சுடுதண்ணீர் உடம்பில் கொட்டி அதனால் ஏற்பட்ட காயம் என்றால் அதை திறந்து விடுவது தான் நல்லது. அதே நேரம் ஒரு ஆழமான காயம் என்றால் மருந்து வைத்து கட்டுகட்டி மூடி வைப்பதுதான் நல்லது.
சில புண்களிலிருந்து சீழ், ரத்தம், நீர் போன்றவை வடிவதுண்டு. இம்மாதிரி ரணங்களை மூடி வைப்பதுதான் சிறந்தது. சிறிய காயங்கள், கீறல்கள், சிராய்ப்புகள் போன்றவற்றுக்கு தினமும் மருந்து தடவி மூடாமல் விட்டுவிட்டால் சீக்கிரம் ஆறிவிடும்.
ஆனால் அந்த காயம் அழுக்கு, தூசி படாமல், துணி உரசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விபத்தினால் ஏற்பட்ட மேலோட்டமான காயங்கள், செல்லப்பிராணிகள், காட்டு விலங்குகள் கடித்ததினால் ஏற்பட்ட காயங்களை திறந்து வைத்து சிகிச்சை அளித்தால் சீக்கிரம் ஆறிவிடும்.
கடுமையான தீப்புண் முதலியவைகளை கிருமிகள் சுத்தமாக நீக்கப்பட்ட பேண்டேஜ் கொண்டு மூடிவைப்பது நல்லது. ஆழமான காயங்களை கிருமிநாசினி சேர்க்கப்பட்ட வெதுவெதுப்பான நீரில் நன்கு பலமுறை கழுவி பின் பாக்டீரியா எதிர்ப்பு ஆயின்ட்மென்டை தடவி சுத்தமான பேண்டேஜ் வைத்து கட்டு கட்டி விடுவதுதான் மிகவும் நல்லது.
மருந்து தடவி பேண்டேஜ் போடுவதால் புதுத்தோல், புது செல்கள் உயிரோடு இருக்க உதவும். தூசி அழுக்கு படாது. கிருமிகள் உள்ளே நுழையாது.
காயம் மேல்தோல், நடுத்தோல், அடித்தோல் தாண்டி மிக ஆழமாக தசைகளுக்கு போய்விட்டிருந்தால் கட்டு கட்டி மூடி வைப்பதுதான் சிறந்தது.