பொது மருத்துவம்

ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி... மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டா?

Published On 2025-06-13 12:32 IST   |   Update On 2025-06-13 12:32:00 IST
  • தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், அட்ரினலின் திரவம் சுரப்பு போன்றவை அதிகமாகலாம்.
  • கடின, மிகக்கடின உடற்பயிற்சிகளை மெதுமெதுவாக ஆரம்பித்து, பயிற்சி செய்யும் நேரத்தை படிப்படியாக அதிகரிப்பது நல்லது.

கடின மற்றும் மிகக்கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்பட கண்டிப்பாக வாய்ப்புண்டு. ஆனால் இது மிகமிக அரிதாகத்தான் நடக்கும். இதய நோய், சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், அதிக உடல் எடை, சீரற்ற இதய துடிப்பு உள்ளவர்கள், இதயத் தசைகள் வலுவிழந்தவர்கள் மிகக் கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், அட்ரினலின் திரவம் சுரப்பு போன்றவை அதிகமாகலாம். இதனால் இதயத்திலுள்ள ரத்தக் குழாய்களின் உள்சுவரில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புக் கலவையான காறை வெடித்து, ரத்தக்குழாய்களை முழுமையாக அடைத்து மாரடைப்பை உண்டு பண்ணலாம். அல்லது இதயத்தில் இயற்கையாக ஏற்படும் மின்னோட்டத்தில் தொந்தரவு ஏற்பட்டு திடீர் மாரடைப்பு வரலாம்.

மிகக்கடின உடற்பயிற்சிகளை செய்யும்போது பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்ற தாது உப்புகள் மற்றும் கனிமங்கள் சேர்ந்த எலெக்ட்ரோலைட் பொருட்கள் குறையவோ, கூடவோ வாய்ப்புண்டு. இதனால், இதயம் உடனே பாதிக்கப்பட்டு மாரடைப்பு வரலாம்.

கடின, மிகக்கடின உடற்பயிற்சிகளை மெதுமெதுவாக ஆரம்பித்து, பயிற்சி செய்யும் நேரத்தை படிப்படியாக அதிகரிப்பது நல்லது. கடினமான உடற்பயிற்சி செய்வதற்கு முன், 'வார்ம் அப்' எனப்படும் உடலை தயார்படுத்தும் பயிற்சிகளை செய்வது நல்லது. அப்படி இல்லாமல் திடீரென்று கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டால் இதயத்துக்கு வேலைப்பளு அதிகமாகி மாரடைப்பு வரலாம்.

பொதுவாக உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து, உடலில் எப்பொழுதும் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

கடின உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக, நெஞ்சு மிகவும் இறுக்கமாக கனமாக இருக்கிறமாதிரி தென்பட்டாலோ, மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டாலோ, அதிகமாக வியர்த்துக் கொட்டினாலோ, தோள்பட்டை, இடதுகை, கழுத்து, தாடை, முதுகுப் பகுதி முதலியவைகளில் வலி ஏற்பட்டாலோ, உடனே உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கோ அல்லது அருகிலுள்ள இதயநோய் சிகிச்சை நிபுணரிடமோ சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது.

Tags:    

Similar News