பொது மருத்துவம்

'இருமல்' நமது உண்மையான நண்பன்- குழந்தைகள் நல டாக்டர்

Published On 2025-10-08 08:08 IST   |   Update On 2025-10-08 08:08:00 IST
  • நுரையீரலுக்கு மட்டும் வெளிப்புற சூழலுக்கு நேரடி தொடர்பு உள்ளது.
  • இருமல் மருந்துகளை பொறுத்தமட்டில் பல்வேறு வகைகள் உள்ளன.

மத்திய பிரதேசத்தில் 'கோல்ட்ரிப்' எனும் இருமல் மருந்து குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பெரும் பேசு பொருளாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்திலும், இதே இருமல் மருந்து குடித்ததால் 6 வயது சிறுவன் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

மத்தியபிரதேச அரசு இந்த மருந்தை பயன்படுத்த அம்மாநில மக்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க வேண்டாம் என மத்திய அரசும் அறிவுறுத்தி உள்ளது.

கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகள் மட்டுமின்றி எந்த வயதினரும் பயன்படுத்த வேண்டாம் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். இருமல் மருந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதா? இருமல் மருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? வேண்டாமா? இருமல் மருந்தால் மட்டுமே இருமலை குணப்படுத்த முடியுமா? என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் எஸ்.தங்கவேலு கூறியதாவது:-

'இருமல்' நமது உண்மையான நண்பன் என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். முதலில் இருமல் நல்லதா? கெட்டதா? என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதயம், மூளை, கல்லீரல் போன்ற உடலின் முக்கிய உறுப்புகளுக்கும், வெளிப்புற சூழலுக்கும் எந்தவித நேரடி தொடர்பும் கிடையாது.

நுரையீரலுக்கு மட்டும் வெளிப்புற சூழலுக்கு நேரடி தொடர்பு உள்ளது. அதாவது, நாம் சுவாசிக்கும் காற்று நுரையீரலுக்கு செல்கிறது. அவ்வாறு நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மெல்லிய தூசு போன்ற ஏதேனும் ஒரு பொருள் நுரையீரலில் படியும்போது இருமல் உருவாகிறது. பெரும்பாலானோருக்கு ஏற்படும் இருமலுக்கு இதுதான் முக்கிய காரணம்.

நுரையீரலில் ஒட்டிய அந்த பொருளை வெளியேற்றும்படி, நமக்கு ஒரு அனிச்சை செயல் மூலம் அறிவுறுத்துவதுதான் இருமல். இதன்படி பார்த்தால் இருமல் வருவது நல்லதே.

பொதுவாகவே, இதுபோன்ற இருமல் 2 வாரங்களுக்கு இருக்கும். அதன்பின்பு தானாகவே சரியாகி விடும். அதற்கு மேல் நீடித்தால் அதற்கான பிற காரணங்களை கண்டறிந்து உரிய மருத்துவம் பெற வேண்டும். இருமலை பொறுத்தமட்டில் அது ஒரு உயிருக்கு ஆபத்தான பிரச்சினை கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

'குழந்தைகளுக்கு இருமல் மருந்து வேண்டாம்' என்பது எனது திடமான கருத்து. வெளிநாடுகளில் 10 வயது வரை குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப்படுவது இல்லை. குறைந்தபட்சம் 6 வயது வரையிலாவது இருமல் மருந்தை பரிந்துரைக்காமல் இருப்பது நல்லது.

'குழந்தைகளுக்கு, இருமல் உடனடியாக சரியாகி விட வேண்டும்' என்ற பெற்றோரின் மனநிலையை கருத்தில் கொண்டு தான் பெரும்பாலான டாக்டர்கள் இருமல் மருந்தை பரிந்துரைக்கின்றனர்.

இருமல் மருந்துகளை பொறுத்தமட்டில் பல்வேறு வகைகள் உள்ளன. இந்த இருமல் மருந்துகள் பல்வேறு வேதிப்பொருட்களின் கலவையாகவே உள்ளன. பொதுவாக மருந்தை பயன்படுத்துவோருக்கு முக்கியமான ஒரு விஷயத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.

ஒருமுறை பயன்படுத்திய மருந்தை, ஓரிரு வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து பயன்படுத்துவது என்பது கூடவே கூடாது. சிரப் போன்ற மருந்துகளை பொறுத்தமட்டில் ஒருமுறை அவற்றை திறந்து பயன்படுத்திய பின்பு அப்படியே வைத்து விட்டால் அதன் தன்மை மாற தொடங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

எனவே, ஒருமுறை பயன்படுத்திய மருந்தை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அதுமட்டுமல்லாமல் டாக்டர்கள் அறிவுறுத்திய அளவை தவிர கூடுதல் அளவில் தாங்களாகவே மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சரி... இருமலுக்கு மருந்தே எடுத்துக்கொள்ளாமல் தானாகவே சரியாகி விடுமா? என்று கேட்டால், ஆம்... கண்டிப்பாக இரு வாரங்களுக்கும் சரியாகி விடும் என்பதுதான் எனது பதில். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவை.

இன்னும் சொல்லப்போனால் இருமல் இருக்கும்போது வெதுவெதுப்பான தண்ணீரை அருந்துவது, தேனில் எலுமிச்சை கலந்த நீரை எடுத்துக்கொள்வது போன்றவற்றின் மூலம் குறுகிய காலத்துக்குள் இருமலை சரி செய்து விடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News