பொது மருத்துவம்
null

தீபாவளி விருந்து சாப்பிடுவோர் கவனத்திற்கு...

Published On 2025-10-19 12:00 IST   |   Update On 2025-10-19 12:01:00 IST
  • வழக்கத்தைவிட பண்டிகை நாட்களில் பலரும் கொஞ்சம் எடை கூடுவதாக கண்டுபிடிப்பு.
  • இனிப்பு சாப்பிடும் முன்பு புரதம் அல்லது நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட்டுவிடுங்கள்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வழக்கத்தைவிட பண்டிகை நாட்களில் பலருக்கும் கொஞ்சம் எடை கூடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இனிப்புகள், எண்ணெய் பலகாரங்கள் மற்றும் அசைவ உணவுகள். நம் வீடுகளில் சாப்பிடுவது மட்டுமின்றி, உறவினர்கள் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் கொடுப்பதையும் தவிர்க்க இயலாது. தீபாவளி, கண்டிப்பாக இனிப்புகள் இல்லாமல் முழுமையடையாது. ஆனால் தீபாவளி திண்பண்டங்களால் எடைக்கூடாமல் இருக்கவேண்டுமானால், கீழே குறிப்பிட்டுள்ளவற்றை கவனத்தில்கொண்டு சாப்பிடுங்கள்.

இனிப்புக்கு முன் புரதம் அல்லது நார்ச்சத்து

இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன்பு புரதம் அல்லது நார்ச்சத்துள்ள பொருட்களை சாப்பிடுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிறு நிரம்பிய உணர்வை ஊக்குவிக்கும். இதனால் இனிப்புகளை அதிகம் எடுத்துக்கொள்ள மாட்டோம்.

நீரேற்றம்

விழாக்காலங்களில் நமது கவனம் முழுவதும் கொண்டாட்டத்தில்தான் இருக்கும். வேளைக்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும், தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதையே மறந்துவிடுவோம். அம்மா சுடும் வடை, வீட்டில் இருக்கும் இனிப்பை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொள்வோம். தண்ணீரும் போதுமான அளவு எடுத்துக்கொள்ளமாட்டோம். அதனால் எடை அதிகரிப்பை தவிர்க்க வேண்டும் என நினைத்தால் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். இதுவும் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால் மற்ற திண்பண்டங்களை அதிகம் எடுத்துக்கொள்ளமாட்டோம்.

சாப்பிட வேண்டுமா?

தீபாவளி என்பதால் உறவினர்கள் வீட்டிற்கு அதிகம் செல்லவேண்டியிருக்கும். அவர்களும் பாசத்தில் நிறைய உணவுகளை எடுத்துவந்து சாப்பிட கொடுப்பார்கள். அதை சாப்பிடுவதற்கு நம் வயிற்றில் இடமே இருக்காது. இருப்பினும் அவர்கள் மனது புண்படக்கூடாது என்பதற்காக எடுத்துக்கொள்வோம். அதை செய்யவேண்டாம். உண்மையில் உங்களுக்கு சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடலாம் என தோன்றினால் மட்டும் சாப்பிடுங்கள். அவர்கள் கொடுத்த அன்பிற்காக துளி அளவு மட்டும் எடுத்து சாப்பிட்டால் போதுமானது. வயிறு நிரம்பியிருக்கும்போது அடுத்தடுத்து உணவை உள்ளே செலுத்தாதீர்கள்.


அதிகளவு இனிப்பு பலகாரங்கள் உட்கொள்வதை தவிர்க்கவும்

திரையை தவிர்க்கவும்

சாப்பிடும்போது டிவி பார்த்துக்கொண்டு அல்லது ஃபோனில் பேசிக்கொண்டு சாப்பிடுவதை நிறுத்துங்கள். ஏனெனில் டிவி பார்க்கும்போதோ அல்லது ஃபோனில் பேசும்போதோ நமது கவனம் உணவில் இருக்காது. கவனச்சிதறல், உட்கொள்ளல் அளவை அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக, உங்கள் அன்புக்குரியவர்களுடன் அமர்ந்து அவர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுங்கள்.

உடற்பயிற்சியை தொடரவும்

விடுமுறை என்றாலே நமக்கு ஓய்வுதான். அதுவும் பண்டிகை என்றால் சொல்லவா வேண்டும். கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உணவுகள் அதிகரிக்கும்போது உடற்பயிற்சி தவிர்க்கப்படுகிறது. இது எடை அதிகரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எனவே, வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது கூடுதல் முயற்சிகள் இல்லாமல், அதே எடையை நிர்வகிக்க உதவும் ஒரு மிகப்பெரிய வழியாகும்.

ஆரோக்கியமாக இருப்பதும், குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் நினைவுகளை போற்றுவதற்கான மற்றொரு வழியாகும். எனவே, இந்த தீபாவளியில் ஒரு சில எளிய முயற்சிகளை எடுப்பது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நீண்ட தூரம் அழைத்துச்செல்லும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

Tags:    

Similar News