லைஃப்ஸ்டைல்
ஆபத்தை ஏற்படுத்தும் சுய மருத்துவம்

ஆபத்தை ஏற்படுத்தும் சுய மருத்துவம்

Published On 2021-01-21 08:24 GMT   |   Update On 2021-01-21 08:24 GMT
சிலர் நேராக மருந்துகடைக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டுவிடுகிறார்கள். இந்த பழக்கம்தான் சுயமருத்துவம் எனப்படுகிறது. இது விலைகொடுத்து கூடுதலாக நோயை வாங்கிக்கொள்ளும் ஆபத்தான செயலாகும்.
உடல் நிலை சரியில்லாதபோது, காத்திருந்து டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவதுதான் பலரது வழக்கம். சிலர் நேராக மருந்துகடைக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டுவிடுகிறார்கள். இந்த பழக்கம்தான் சுயமருத்துவம் எனப்படுகிறது. இது விலைகொடுத்து கூடுதலாக நோயை வாங்கிக்கொள்ளும் ஆபத்தான செயலாகும்.

படிக்காதவர்களே இந்த சுயமருத்துவத்தை அதிகம் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று நினைத்தால் தவறு. படித்தவர்கள், என்னென்ன அறிகுறிகள் இருந்தால் அது என்ன பிரச்சினை என்பதை ‘கூகுள் சர்ச்’சில் தேடிவிட்டு, அதற்கு ஏற்றாற்போல் குறிப்பிடப்படும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு சுயமருத்துவர்களாகிக் கொள்கிறார்கள். இது ஆபத்து நிறைந்த செயலாகும்.

பெரும்பாலான மக்கள் சுயமருத்துவமுறையில் மருந்துகடைகளில் வலி நிவாரண மாத்திரைகளைதான் வாங்குகிறார்கள். டாக்டரின் பரிந்துரை இல்லாமல் குறிப்பிட்ட வகை வலி நிவாரண மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரக செயல்பாடு குறைதல், இதய பாதிப்புகள் ஏற்படுதல், அல்சர் போன்றவை ஏற்படும்.

வழக்கமாக ஏற்படும் ஜலதோஷம் என்றால், ஒரு வாரம் வரை தொந்தரவு தந்துவிட்டு அதுவாக குணமாகிவிடும். ஆனால் உடனடியாக அதில் இருந்து மீளவேண்டும் என்று நினைத்து பலர் மருந்து கடைகளுக்கு சென்று அறிகுறிகளை கூறி சுயமாக மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர்கள் பொருத்தமற்ற மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டால் அது உடலில் ‘ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்சை’ உருவாக்கிவிடும். இது நோய்க்கு அளிக்கப்படும் மருந்தை எதிர்க்கும் தன்மையை கிருமிகள் பெறுவதற்கு காரணமாகி, ஆரோக்கிய சீர்கேட்டிற்கு அச்சுறுத்தலாகிவிடும்.

ஒருவரது நோயின்தன்மை, அவரது வயது, அவரது எடை, நோய் கிருமிகளின் எண்ணிக்கை போன்றவைகளை கருத்தில்கொண்டு நோயாளிக்கு, டாக்டர் மருந்துகளை பரிந்துரைக்கிறார். அவரால்தான் அந்த நோயாளிக்கு எந்த மருந்து, எந்த அளவுக்கு, எத்தனை நாட்களுக்கு சாப்பிடவேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டாக்டர் ஐந்து நாட்களுக்கு மாத்திரைகள் எழுதிக்கொடுத்தால் சிலர் மூன்று நாட்களுக்கு மட்டுமே வாங்கிக்கொள்கிறார்கள். மூன்று நாட்கள் சாப்பிட்டதும் அவர்களுக்கு நோய் குணமானதுபோல் தோன்றும். முழு நிவாரணம் கிடைத்துவிட்டதாக நம்பிவிடுகிறார்கள். உண்மையில், அந்த நோய் கிருமிகள் முழுவதுமாக அழிய ஐந்து நாட்களும் குறிப்பிட்ட நேரங்களில் மாத்திரைகள் எடுத்தாகவேண்டும். மூன்று நாட்கள் மட்டுமே சாப்பிட்டால் அந்த நோய்கிருமிகள் அழியாமல் உடலுக்கு உள்ளேயே இருந்து, அந்த மருந்துக்கு எதிராக செயல்படும் நிலையை அடைந்துவிடும். அதனால் மீண்டும் அந்த நோய் வரும்போது, அதே மாத்திரைகளை சாப்பிட்டால் பலன்கிடைக்காது.

அதுபோல் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் போன்றவைகளுக்கு டாக்டர் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டை பயன்படுத்தி, மீண்டும் அதே நோய்கள் ஏற்படும்போது மருந்துகள் வாங்கிக்கொள்வதும் சரியானதல்ல. நோய்வாய்ப்படும் ஒவ்வொருமுறையும் டாக்டரின் ஆலோசனையை பெற்றுதான் மருந்துகள் வாங்கிசாப்பிடவேண்டும். அதுவே முழுமையான தீர்வுக்கு வழிகாட்டும்.
Tags:    

Similar News