லைஃப்ஸ்டைல்
காலை உணவில் பழம்

காலை உணவில் பழம்

Published On 2021-01-19 08:19 GMT   |   Update On 2021-01-19 08:19 GMT
காலை உணவுடன் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்’’ என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
காலை உணவை நிறைய பேர் கடமைக்காக சாப்பிடுகிறார்கள். இரவு நேர தூக்கத்திற்கு பிறகு உடலுக்கும், மூளைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் காலை உணவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

காலை உணவில் போதுமான கார்போஹைட்ரேட் கொண்ட சமச்சீரான உணவுவகைகளை சாப்பிடுவது ரத்தத்தில் குளுக்கோஸ் சீராக இருப்பதை உறுதி செய்ய உதவும். காலை உணவு ஊட்டச்சத்து கொண்டதாக இல்லாவிட்டால் அதன் தாக்கம் குளுக்கோஸ் அளவில் வெளிப்பட்டு சோர்வையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். தெளிவில்லாத மன நிலையும் உண்டாகும்.

‘‘கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துகள், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையாக காலை உணவு அமைந்திருக்க வேண்டும். காலை உணவுடன் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்’’ என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

பிரதான உணவாக கோதுமை, அரிசி, ஓட்ஸ், பார்லி போன்ற ஏதாவது ஒரு தானியத்தில் தயாரானதை எடுத்துக்கொள்ளலாம். அதோடு பழங்கள் அல்லது காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைவாக இருக்கின்றன. அந்தந்த பருவகாலத்தில் விளையும் பழங்களையும் சாப்பிடலாம். காலையில் சாப்பிட்டு முடித்ததும் சிறிது நேரம் கழித்து பால் பொருட்களை சாப்பிடலாம். அதில் இருக்கும் கால்சியம் மற்றும் புரதம் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். காலை உணவை தேர்ந்தெடுப்பதற்கு மெனக்கெடவேண்டியதில்லை.

நிறைய பேர் இட்லியைதான் விரும்பி சாப்பிடுவார்கள். அதனுடன் பருவ காலத்தில் கிடைக்கும் பழங்களையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுபவர்கள், பேரீச்சம் பழம், பாதாம் பருப்பு ஆகியவற்றையும் சிறிதளவு உண்ணலாம். கோதுமை உணவு வகைகளை சாப்பிடுபவர்கள் ஒரு டம்ளர் பால் பருகுவது நல்லது. அதனுடன் ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் போன்றவற்றையும் உட்கொள்ளலாம். காலை உணவாக பிரெட் சாப்பிடுபவர்கள் அதனுடன் வெள்ளரிக்காய், தக்காளி, பீட்ரூட், கேரட், கீரை போன்றவைகளை சேர்த்துக்கொள்ளலாம். ஒரு டம்ளர் மோரும் பருகலாம்.

இதுபோன்ற ஊட்டச்சத்து கொண்ட காலை உணவை சாப்பிடும் 20 முதல் 30 வயது கொண்ட இளைஞர்கள் இரவில் நன்றாக தூங்குவதும், காலையில் சோர்வின்றி உற்சாகமாக எழுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News