லைஃப்ஸ்டைல்
கடுகு

மருத்துவ குணம் நிறைந்த கடுகு

Published On 2020-02-17 07:35 GMT   |   Update On 2020-02-17 07:35 GMT
ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் 3 மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அது போல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் 3 மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள். கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது.

கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணெய்ச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக் பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன. கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்சிதை மாற்றம் அடையும் நார்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.
போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோ பிளேவின், பைரிடாக்சின், பான்டோதெனிக் அமி லம் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும்.

நியாசிசன் (வைட்டமின் பி3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினி யம், துத்தநாகம் போன்ற தாது உப்புக் களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியில் பங்கெடுக்கின்றன. இருமலை கட்டுப்படுத்த கூடியதும் விஷத்தை முறிக்க வல்லது. ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியது கடுகு. சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாக விளங்குவது கடுகு.

கடுகு என்பது கடுகுத் தாவரங்களில் இருந்து பெறப்படும் ஒரு சிறிய, உருளை வடிவ விதையாகும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு வெண்கடுகு, நாய்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல் தோல் கறுப்பாக இருக்கும்; கடுகுக்கு தன் சுவை கிடையாது. குளிர்ந்த நீருடன் சேரும் போது, அதன் மேல் தோல் அப்புறப்படுத்தப்பட மைரோஸினேஸ் எனப்படும்.

நொதியம் வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணம். இந்திய சமையலில் சூடான எண்ணெயில் பொரித்து, அதன் மேல் தோலியை அகற்றுகிறார்கள். மேலை நாடுகளில் கடுகை பொடியாக அரைத்து அல்லது அரைத்த விழுதாகவோ முன்பாகவே தயார் செய்யப்பட்டதையே உணவில் பயன்படுத்துகிறார்கள்.

மருத்துவ குணங்கள்:-கடுகு எண்ணெயில் நாம் வழக்கமாக உபயோகிக்கும் நல்லெண்ணெய் போன்று ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதில் உள்ள சில உட்பொருள்கள் கேன்சர் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த கடுகு இந்திய மற்றும் அமெரிக்க உணவு வகைகளில் சேர்க்கப்படும் பிரபலமான உணவுப் பொருளாகும்.

இந்த சின்னஞ்சிறிய உருளையான கடுகு விதைகள் ஐரோப்பாவின் மித வெப்பமண்டல பகுதிகளில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. பிறகு மெதுமெதுவாக தென்னாப்பிரிக்கா, ஆகிய பகுதிகளில் புகழ்பெறத் தொடங்கியது. இப்போது ஒட்டு மொத்த உலகமும் அதன் நன்மைகளைப் பற்றி விழிப்புணர்வு பெற்றிருக்கிறது. வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் கடுகில் அதிக அளவில் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருப்பதால் பல நூற்றாண்டுகளாக மருத்துவ பயன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடுகு விதைகளில் குளுக்கோஸினோலேட்ஸ் மற்றும் மைரோசினேஸ் ஆகிய கலவைகள் நிறைந்துள்ளது. இது உடலில் கேன்சர் உருவாகக் காரணமான செல்களின் வளாச்சியைத் தடுக்கிறது. ஹீயுமன் அண்டு எக்ஸ் பிரிமெண்டல் டாக்ஸிகாலஜி என்கிற பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி இந்த சின்னஞ்சிறிய விதைகளில் புற்றுநோயைக் காரணிகளின் பாதிப்புகளுக்கு எதிராக பாதுகாக்கிறது என்று தெரிவிக்கிறது.

ஒற்றை தலைவலிக்கு: நீங்கள் தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும் போது கடுகு திறம்பட செயல்படுகிறது. இதில் நரம்பு மண்டலத்திற்கு ஆறுதலளிக்கும் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் வலிகள் மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு நிவாரணம் தரும் மக்னீசியம் கடுகில் நிறைந்துள்ளது. செரிமான நலத்திற்கு சிறந்தது: கடுகு செரிமான மண்டலத்திற்கு அற்புதமான நன்மைகளைச் செய்கிறது. செரிமானப் பிரச்சனையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து விடுபட கடுகு உங்களுக்கு உதவும். இந்த சிறிய விதைகளில் ஏராளமான நார்ச்சத்து அடங்கியுள்ளது. இது கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. மேலும் உடலின் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.

ஒவ்வொரு இந்திய வீடுகளில் கடுகு எண்ணெய் பொதுவாக பயன்படுத்தப்பட்டு இது இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முற்றிலும் நன்மை செய்கிறது.
இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்க உதவுவதோடு ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இவை இரண்டும் இதய ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானதாகும்.

எலும்புகள், பற்களை வலிமையாக்க: கடுகில் செலினியம் என்கிற மினரல் நிறைந்திருப்பதால் உங்கள் எலும்புகளுக்கு இது மிகவும் நல்லது. இது உங்கள் எலும்புகளை உறுதியாக்குகிறது, மேலும் கடுகு உங்கள் நகங்கள், தலைமுடி மற்றும் பற்களுக்கு வலிமை சேர்க்க உதவுகிறது. கடுகில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஆன்டி இன்ப்ளாமேட்டரி மூலக்கூறுகள் அடங்கியுள்ளது. இது ஈறுகள் எலும்புகள் மற்றும் பற்களில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது.

சருமத்திற்கு: ஒவ்வொரு பருவ நிலையிலும் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இதற்கு கடுகு அதிக அளவில் உதவுகிறது. கடுகு விதைகள் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பருக்களில் இருந்து பாதுகாக்கிறது. இந்த சிறிய கடுகு விதைகளில் அடங்கியுள்ள ஆன்டி இன்ப்ளாமேட்டரி மூலக் கூறுகள் உடலில் வீக்கத்தை குறைக்கிறது.

வயது முதிர்வை, தோற்றத்தை தடுக்கிறது: வயதாவதை தவிர்க்க முடியாத ஒன்றாகும். வயதாவதை உங்களால் தடுக்க முடியாது. ஆனால் உங்கள் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வதன் மூலம் முதுமையைத் தாமதப்படுத்தலாம். கடுகு விதைகளில் வைட்டமின் ஏ, கே மற்றும் சி நிறைந்து காணப்படுவதால் இது வயதாகும் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

விஷத்தை கட்டுப்படுத்தும்: தற்கொலை எண்ணத்தோடு விஷம், பூச்சிமருந்து அருந்தியவர்களுக்கு இரண்டு கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும். இதனால் விஷத்தின் தாக்கம் கட்டுப்படும்.

ஆஸ்துமா: தேனில் கடுகை அரைத்து கொடுக்க ஆஸ்துமா, கபம் குணமடையும். கடுகு, மஞ்சள் சமஅளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிக்கட்டிக் காதில் சில சொட்டுக்கள் விட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். வெந்நீரில் கடுகை ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும். ரத்த அழுத்தம் கட்டுப்படும்: கடுகில் உள்ள பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின் போலேட்ஸ், நியாசின், தையாமின், ரிபோப்ளோவின், வைட்டமின் பி-6 போன்றவை அதிகம் காணப்படுகின்றன. கடுகில் உள்ள ப்ளேவனாய்டுகள் உடலுக்கு அதிக நன்மை தருகிறது.

கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. காரம்-சுவை, தன்மை வெப்பம், பிரிவு-கார்ப்பு, கடுகு- வாந்தியுண்டாக்கி, வெப்பமுண்டாக்கி, துடிப்புண்டாக்கி, கொப்புள மெழுப்பி, செரிப்புண்டாக்கி, சிறுநீர்ப்பெருக்கி.
குணம்: இது தலையிடிப்பைத் தரக்கூடிய இருமல், மூக்கு நீர் வடிதல், கோழை, வெறி, காணாவிடக்கடி, குடைச்சல், முடம், மந்தம், குழம்பிய உமிழ்நீர் கழிச்சல், வயிற்றுவலி, முப்பிணி விலகும். மேலும் சீதக்கடுப்பு, கீல் வாயு, செரியாமை, தலை சுற்றல், விக்கல் இவைகளையும் போக்கும்.

ஒவ்வொரு நாள் விடியற்காலையிலும் கடுகு, மிளகு, உப்பு இம்மூன்றும் ஒரு நிறையில் சேர்த்துச் சாப்பிட்டு உடனே வெந்நீர் குடிக்க, வளி, தீ, ஐயம், இவைகளால் உண்டான துன்பங்கள் யாவும் நீங்கும். கடுகு சேர்ந்த பச்சடி முதலிய கறிகள் புசித்து வந்தாலும், உடம்பிலுள்ள மேற்படி நோய்கள் போகும். நீரைப்பெருக்கம் வாந்தியை உண்டுபண்ணும்.

கடுகை அரைத்துக் கெண்டைச் சதைகளில் துணியிற்றடவிப் போட சுரவேகத்தினாலுண்டாம் மயக்க தோடங்கள் நீங்கும். கால் கைகளிற்றடவிச் சீலையைச் சுற்றிவைக்க அவைகளில் தங்கிய சீதகுணம் நீங்கி வெப்பமுண்டாகும். தொண்டை, மார்பு முதலிய இடங்களில் தடவ, அவ்விடங்களிலுண்டாகும் நோய்களை தணிக்கும். மார்புக்குழியில் சீலையில் தடவிப்போட விக்கல் தணியும். கீல் வாயு, குருதிக்கட்டிக்கொண்ட இடம் இவைகளுக்கு மேலுக்குப் பற்றிடலாம்.
தேனில் அரைத்துக் கொடுத்தால் இரைப்பு, இருமல் இவை தீரும். அடுத்தடுத்துக் கொடுத்தால் சிறுநீரைப் பெருக்கும்.

கடுகு உக்களி: கடுகுத்தூள், அரிசிமா இவைகளை ஓரெடையெடுத்துப் போதுமான நீரிலிட்டுக் களிபோற் கிளறித் துணியிற்றடவி, வயிற்றுவலி, குடைச்சல் இவைகட்கு அந்தந்த நோயுள்ள இடங்களிலும் இருமல் இரைப்பு இவைகட்கு மார்பின் மீதும், வாந்திபேதியிற் காணும் கெண்டைச் சதைப்பிறழ்ச்சி இவைகட்குக் கால் கெண்டைச் சதையின் மேலும் போடக் குணமுண்டாகும்.

கடுகுத்தைலம்: இது சற்று மஞ்சள் நிறமும், நொடியும், விறுவிறுப்பும் உடையது. சுவைக்கில் எரிச்சலைத் தருதலும், உடலில் படக் கொப்புளித்தலும் செய்யும்.
கழலைகளுக்கும்-பூசலாம்: கடுகை இடித்து, சிறிது கற்கண்டு சேர்த்து வெந்நீர் கூட்டி நெருக்கிப்பிழிந்தாவது, நீரிற் சேர்த்துக் காய்ச்சி நீரின் மீது எண்ணெய் படிந்து வரும் போதாவது, இதிலிருந்து எண்ணெய் எடுப்பது நாட்டு வழக்கம். கடுகுத்தூள் 8 கிராம், வெந்நீர் - 130மிலி அதில் கடுகை ஊறவைத்து வடித்துக்கொடுக்க, விக்கல் நீங்கும். இது விக்கலைப் போக்குவதிற் சிறந்தது.

முடி வளர்ச்சிக்கு உதவுகிறது: இதில் வைட்டமின் ஏ இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. வலுவிழந்த முடி உடைந்து காணப்படுபவர்களுக்கு இது சிறந்தது. புரதம், சுண்ணாம்பு சத்து, வைட்டமின் ‘ஏ’, ‘இ’ ஒமேகா-3 மற்றும் ஒமேகா6 போன்றவைகள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. வலுவான கூந்தலுக்கு இது உதவும். வைட்டமின் இ ஆன்டிஆக்ஸிடன்ட் திறன் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவும். முடி உதிர்வை தடுக்கும். பளபளப்பு தன்மையை தருகிறது.
எப்படி பதப்படுத்துவது: காற்று புகாத பாத்திரத்தில் வைத்து நன்றாக மூடி வைக்கவும்.

ஈரப்பதம் இல்லாத பாத்திரமாக இருப்பது நல்லது. 1 வருடம் வரை வைத்துக் கொள்ளலாம், பொடியாக்கி வைத்துக்கொண்டால் 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். எப்படி பயன்படுத்துவது:-உணவிற்கு சுவை கூட்டுவது கடுகு

மாமிச உணவுகளில் சுவை சேர்ப்பது - கடுகு
ஊறுகாய்க்கு சுவை கூட்டுவது - கடுகு

கடுகு சாதம்:- வேக வைத்த அரிசியில் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது கடுகு போட்டு நன்கு வெடித்த பின்பு சிறிது சீரகம் போட்டு அதில் வேகவைத்த அரிசியை போட்டு நன்றாக கிளரி கொடுத்து சூடாக பரிமாற சுவையாக இருக்கும்.

Tags:    

Similar News