லைஃப்ஸ்டைல்

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?

Published On 2019-06-20 02:51 GMT   |   Update On 2019-06-20 02:51 GMT
மக்களின் அன்றாட தேவைக்கான தண்ணீருக்கே காலி குடங்களுடன் நீண்ட தொலைவுக்கு அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர் வேகமாக குறைந்து வருவதாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மக்களின் அன்றாட தேவைக்கான தண்ணீருக்கே காலி குடங்களுடன் நீண்ட தொலைவுக்கு அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது. லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீருக்கும் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலைதான் சென்னைவாசிகளை அச்சுறுத்தி வருகிறது.

குடிநீருக்கே இந்த நிலைமை என்றால் பிற தொழில்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பது குதிரைக்கொம்பாக மாறியுள்ளது. இதனால் பல தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன.

தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில் அதனை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து நிபுணர்கள் கூறியதாவது:-

* பாத்திரங்களை கழுவும் போது குழாயை திறந்துவிட்டு பயன்படுத்தாமல் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி கழுவலாம்.

* பல் துலக்கும்போதும், முகம் கழுவும் போதும் குழாயை திறந்துவிட்டு பயன்படுத்தாமல், ஒரு வாளியில் நீரை நிரப்பி சிறுக சிறுக பயன்படுத்த வேண்டும்.

* குளிக்கும்போது ‘‌‌ஷவர்’ பயன்படுத்தாமல் வாளியில் நீரை நிரப்பி குளிக்கலாம். முடிந்த அளவுக்கு ஒரு வாளி தண்ணீரில் குளிக்கவேண்டும்.

* துணி துவைக்கும் எந்திரங்களில் (வா‌ஷிங் மெ‌ஷின்) அன்றாடம் துணிகளை துவைக்கும்போது கூடுதல் நீர் செலவாகும். அதனால், ஒரே முறையாக எல்லா துணிகளையும் துவைத்து நீரை சிக்கனப்படுத்த வேண்டும். துணி துவைத்த பிறகு மீதம் இருக்கும் நீரை வீணாக்காமல் கழிப்பறையில் ஊற்றலாம்.

* மேற்கத்திய கழிவறையை (வெஸ்டர்ன் டாய்லட்) பயன்படுத்தாமல் நம்முடைய முறை கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்.

* தண்ணீர் குழாய்களை நன்றாக மூட வேண்டும். வீட்டில் எந்த இடத்திலும் குழாய்களில் நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். நீர் கசிவு இருந்தால் உடனே பழுது நீக்க வேண்டும்.

* சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் தண்ணீர் குழாயை பயன்படுத்தாமல் பாத்திரத்தில் நீரை நிரப்பி கைகளை கழுவலாம்.

* வாகனங்களை தண்ணீர் குழாய் மூலம் கழுவாமல் ஈரத்துணியை வைத்து துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

Tags:    

Similar News