லைஃப்ஸ்டைல்

ஓட்டலுக்கு சாப்பிட செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

Published On 2018-07-23 02:46 GMT   |   Update On 2018-07-23 02:46 GMT
உணவகங்களில் ஆர்டர் செய்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகிவிட்டது. விதவிதமான உணவுகளை ருசிக்க விரும்புகிறவர்கள், கீழ்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
இன்று, உணவகங்களில் வித விதமாக ஆர்டர் செய்து ருசித்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகிவிட்டது. எவ்வளவுதான் பிடித்தமான உணவுகளை வீட்டில் சமைத்து சுவைத்தாலும், ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடுவது தனிக் கொண்டாட்டம் தான்.

விதவிதமான உணவுகளை ருசிக்க விரும்புகிறவர்கள், கீழ்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்:

* தரமான உணவகங்கள் பற்றி தெரிந்துவைத்துக்கொண்டு, அதை தேடிச் செல்லுங்கள்.

* ஷாப்பிங் முடிந்த கையோடு அருகில் உள்ள ஏதாவது ஒரு ஓட்டலுக்கு சென்று அவசரமாக சாப்பிட்டுவிடலாம் என்று நினைக்காதீர்கள். உணவின் தரம் முக்கியம்.

* பெரிய ஓட்டல்களில் உணவருந்த ஆசைப்பட்டால் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் மூலம் வெகுநேரம் காத்திருப்பதை தவிர்க்கலாம். எரிச்சல் இன்றி சந்தோஷமாக சாப்பிடவும் வழி ஏற்படும்.

* முன்பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்களால் அந்த உணவகத்தை அடைய முடியாவிட்டால், உங்கள் இடம் வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டுவிடும். அதனால் கூச்சல் போடாதீர்கள். ஏன்என்றால் சாப்பிடும் முன்பு மனதை சாந்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கோபத்தோடும், எரிச்சலோடும் சாப்பிடும் உணவு சரியாக செரிப்பதில்லை. பொது இடங்களில் நாகரிகமாகவும் நடந்துகொள்ள தெரிந்துகொள்ளவேண்டும்.

* முன்பதிவு செய்ததைவிட அதிகமான நபர்களை அழைத்துச்செல்லவேண்டாம். வேறு வழியில்லாமல் அழைத்துச் சென்றுவிட்டால், அதை முன்கூட்டியே உணவகத்திற்கு தெரியப் படுத்திவிடுங்கள்.



* உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் நட்போடு பழகுங்கள். அவர்களும் உங்களைப் போன்றவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மரியாதையும், மதிப்பும் அவர்களுக்கு கொடுங்கள்.

* நிதானமாக, யோசித்து ஆர்டர் கொடுங்கள். ஆர்டர் செய்துவிட்டு, பின்பு மாற்றாதீர்கள்.

* மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் எப்படி சாப்பிடுவது என்று, உங்களோடு வரும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். எந்தெந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள். தானே சாப்பிட பழக்குங்கள். குழந்தைகளின் அறிவு வளர்ச்சியடைந்து விட்டது என்பதை குறிக்கும் செயல் தானே எடுத்து சிந்தாமல் சாப்பிடுவது. மனவளர்ச்சி குன்றியவர்களால் அப்படி சரியாக சாப்பிட முடியாததை கவனித்திருப்பீர்கள்.

* பரிமாறும் சர்வருக்கு ‘டிப்ஸ்’ கொடுப்பது இப்போது அங்கீ கரிக்கப்பட்ட விஷயம்போல் ஆகிவிட்டதை கவனத்தில் கொள்ளுங்கள்.

* ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டால் அதை மென்மையாக எடுத்துக் கூறுங்கள். நாம் பணம் கொடுக்கிறோம் என்ற கர்வத்தில் வார்த்தைகளை சிந்திவிடாதீர்கள்.

* பலரோடு உணவகத்திற்கு செல்லும் போது அவரவருக்கு விருப்பமானதை ஆர்டர் செய்யும்படி கூறுங்கள். உங்கள் இஷ்டத்திற்கு ஆர்டர் கொடுக்க வேண்டாம். அது அவர்களை உபசரிப்பதாகாது.

* சாப்பிடுவதற்கு பொறுமையும், நிதானமும் அவசியம். போதுமான நேரம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சாப்பிட்டு முடித்துவிட்டு வெகு நேரம் அமர்ந்து அரட்டையடிப்பது சரியான பழக்கம் அல்ல. சத்தமில்லாமல் சாப்பிடுவது நல்லது. உணவை வீணாக்காமல் ருசிப்பது மிக நல்லது. 
Tags:    

Similar News