லைஃப்ஸ்டைல்

டெங்குவை கட்டுப்படுத்தும் அம்மான் பச்சரிசி

Published On 2016-07-25 02:15 GMT   |   Update On 2016-07-25 02:15 GMT
அம்மான் பச்சரிசி செடியில் இலைதான் அதிக அளவில் உணவுக்கு பயன்படுகிறது. இதில் காய்க்கும் காய்களுக்கும் மருத்துவ குணம் உண்டு.
அம்மான் பச்சரிசி என்பது சிறு செடி வகையை சேர்ந்த தாவரம். இது அரிசி இனம் அல்ல. ஒரு வகை கீரை இனம். தரையில் படர்ந்து வளரும். நீர் நிலைகளிலும், ஈரமான இடங்களிலும் செழித்து வளர்ந்து நிற்கும். மழைக்காலத்தில் அதிகமாக வளரும். இதன் இலை, தண்டை ஒடித்தால் பால் வரும். இந்த செடிக்கு சித்திரபாலாடை என்ற பெயரும் உண்டு.

அம்மான் பச்சரிசி செடியில் இலைதான் அதிக அளவில் உணவுக்கு பயன்படுகிறது. இதில் காய்க்கும் காய்களுக்கும் மருத்துவ குணம் உண்டு. இலை, உடலுக்கு குளிர்ச்சியளிக்க கூடியது. மலச்சிக்கலை தீர்க்கும். புண்களையும் ஆற்றும்.

அம்மான் பச்சரிசி செடியின் இலையை 10 கிராம் அளவு எடுத்து அரைத்து, மோரில் கலந்து குடித்தால் உடல் சூட்டினால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் நீங்கும். அதன் காரணமாக உண்டாகும் உடல் எரிச்சல், நமைச்சல் போன்றவையும் தீர்ந்து உடல் வலுப்பெறும்.

இந்த தாவரத்திற்கு தாய்ப்பாலை அதிகரிக்கும் சக்தி உள்ளது. இலையை 10 கிராம் அளவு அரைத்து, பாலில் கலந்து தினமும் காலைவேளை மட்டும் ஒரு வாரம் தொடர்ந்து தாய்மார்கள் குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

இந்த இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வறட்சி, வாய்ப்புண் குணமாகும். வாய், நாக்கு, உதடுப்பகுதியில் உருவாகும் வெடிப்புகள் நீங்கும்.

அம்மான் பச்சரிசி இலைக்கு கிருமிகளை அழிக்கும் சக்தியுள்ளது. இலையை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து, பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும். மலம் கழிப்பதும் இலகுவாகும்.

சருமத்தில் கறுப்பு நிறத்தில் சிறு சிறு பருக்கள் சிலருக்கு தோன்றும். அம்மான் பச்சரிசி பாலை பருக்கள் மீது தொடர்ந்து தடவிவந்தால் பருக்கள் நீங்கும். மரு தொல்லையும் இருக்காது. முகப்பருவை நீக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. கால் ஆணி இருக்கும் இடத்தில் பாலை தடவினால், வலி குறையும்.

இலையை அரைத்து பத்து கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து, கற்கண்டும் சேர்த்து பருகினால் உடல் சக்தி அதிகரிக்கும். உடல் பலகீனமாக இருக்கும்போது இதை பருகிவரலாம். இந்த தாவரம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உதவுவதாக பிலிப்பைன்ஸ் நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் இலையில் 100 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 100 மி.லி. வீதம் பருகிவந்தால் டெங்கு காய்ச்சல் குறைவதாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் மற்றும் ரத்த அணுக்களை குறையவிடாமல் தடுத்து, டெங்கு வைரசை கட்டுப்படுத்துகிறது.

Similar News