உடற்பயிற்சி செய்தாலும் குறையாத தொப்பை... எப்படித்தான் குறைப்பது?
- ஆரோக்கியமற்ற உணவுகளை அறவே தவிர்த்துவிடுங்கள்.
- ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உணவில் எவ்வளவு கலோரிகள் இருக்கும் என்பதை ஓரளவு உங்களால் கணிக்க முடியும். அதிலிருந்து 250 முதல் 500 கலோரிகள் வரை குறைத்துச் சாப்பிடுவதை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் வித்தியாசத்தை உணர்வீர்கள். மைதா, சர்க்கரை, வனஸ்பதி போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை அறவே தவிர்த்துவிடுங்கள்.
தயிர், நீர்மோர், பழையசாதம், இட்லி, ஆப்பம் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றில் உள்ள புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா, உங்கள் குடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். இது கொழுப்புள்ள மீன்களில் அதிகமிருக்கும். மீன் சாப்பிடுவோர் என்றால் வாரத்துக்கு நான்கு நாள்களுக்குச் சாப்பிடலாம். மீன் சாப்பிட முடியாதவர்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலத் தேவைக்காக ஆளிவிதை, பாதாம், வால்நட்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். இது எதுவுமே சாத்தியமில்லை என்றால் மருத்துவர் ஆலோசனையோடு சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம்.
என்னதான் வொர்க் அவுட் செய்தும் தொப்பை குறையவில்லை என்றால் உங்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எனவே முழுமையான ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து என்ன பிரச்சினை என்று கண்டுபிடிக்க வேண்டும்.
குளுட்டன் அல்லது லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை இருக்கிறதா என்று கவனியுங்கள். இந்த இரண்டும் இருக்கும்பட்சத்தில் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் வயிற்றுப் பகுதியில் உள்ள தசை குறையாது.
தர்பூசணி, மாதுளை, கமலா ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, பேரிக்காய் போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்தின் மூலம்தான் தேவையற்ற கொழுப்பை வெளியேற்ற முடியும்.
இந்த டிப்சை தொடர்ச்சியாகப் பின்பற்றுங்கள். சில நாள்கள் செய்துவிட்டு, பலனில்லை என விட்டுவிடாதீர்கள். கூடவே உடற்பயிற்சிகளையும் மிஸ் பண்ணாதீர்கள். நிச்சயம் மாற்றத்தை உணர்வீர்கள்.