பெண்கள் உலகம்

உடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்

Published On 2019-04-17 11:30 IST   |   Update On 2019-04-17 11:30:00 IST
நீச்சலில் இருந்து வித்தியாசப்படும் அகுவா ஏரோபிக்ஸ் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், எளிதில் அழகான உடல் வடிவத்தைப் பெறவும் நிச்சயம் உதவும்.
புதிய ஃபிட்னெஸ் பயிற்சி வீட்டின் களேபரங்களுக்கு இடையே டிரெட்மில்லில் மூச்சிரைக்க ஓடும் நேரம் எல்லாம் முடிந்து விட்டது, புதிய அகுவா ஏரோபிக்ஸை முயற்சித்து பார்க்கும் நேரம் இது. ஒருங்கிணைந்த கை, கால் அசைவுகளை மார்பளவு நீரில் நின்று கொண்டு செய்யும் தீவிரமான உடற்பயிற்சி முறை இது. உடலின் கொழுப்பைக் குறைக்கவும், அழகான உடலைப் பெறவும் அகுவா ஏரோபிக்ஸ் ஒரு தீவிரமான, ஆனால் குறைந்த பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு உடற்பயிற்சியாகும்.

நீச்சலில் இருந்து வித்தியாசப்படும் அகுவா ஏரோபிக்ஸ் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், எளிதில் அழகான உடல் வடிவத்தைப் பெறவும் நிச்சயம் உதவும். புத்துணர்வு அளிக்கும் அம்சம் தவிர, உடல், ஆரோக்கிய பலன்களுக்காகவும் இது புகழ்பெற்றது. நீரானது காற்றைவிட 800 மடங்கு அடர்த்தியாக இருப்பதால், நீங்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சிக்கு இயற்கையான ஒரு எதிர்ப்புசக்தி எப்போதும் இருக்கும். இதனால் நீச்சல் குளத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு அசைவுக்கும் கூடுதல் ஆற்றல் செலவாகும். எடுத்துக்காட்டாக, நீரில் நீங்கள் ஜாகிங் செய்தால், நிமிடத்துக்கு 11 முதல் 12 கலோரிகள் வரை செலவழிப்பீர்கள். ஆனால் ஜிம்மில் ஒரு நிமிடத்துக்கு 8 முதல் 9 கலோரிகள் மட்டுமே செலவாகும்.

கிடைக்கும் பலன்கள்

அகுவா ஏரோபிக்ஸ், இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை அதிகரித்து, உடலின் எல்லா முதன்மையான தசைப் பகுதிகளையும் வலுவாக்குகிறது.

1. அகுவா ஏரோபிக்ஸ் கார்டியோ வாஸ்குலர் ஃபிட்னெஸ் வலிமைக்கான பயிற்சிகளில் உதவுகிறது.
2. நடன அசைவுகளும், சீரான அசைவுகளும் இதில் இருப்பதால், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
3. செரிமானம், ரத்த ஓட்டம் போன்ற செயல்பாடுகளைத் தூண்டிவிடுவதுடன், மனஅழுத்தத்தையும் குறைக்கிறது.
4. நீரின் மிதக்கவைக்கும் தன்மை, உடல் எடையை பெருமளவு குறைப்பதால், மூட்டுகள் மற்றும் தசைகளில் சுமை குறையும்.

எல்லா வயதினரும் அகுவா ஏரோபிக்ஸை தாராளமாகச் செய்யலாம். ஆனால் கர்ப்பமடைந்த பெண்கள், மூட்டு பிரச்சினைகள் கொண்ட முதியவர்கள், மற்றவர்கள் பார்க்குமாறு ஜிம்மில் பயிற்சி செய்ய தயங்குபவர்கள் போன்றவர்களுக்கு இது ஏற்றது. ஆனாலும் ஒரு டாக்டரின் ஆலோசனையைப் பெற்ற பின் செய்வது நல்லது.
Tags:    

Similar News