லைஃப்ஸ்டைல்

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஆசனங்கள்

Published On 2019-03-14 05:53 GMT   |   Update On 2019-03-14 05:53 GMT
சில யோகாசனங்களை தொடர்ச்சியாக செய்து வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். அந்த ஆசனங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
உடலில் ரத்தத்தின் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். ரத்தத்தில் காணப்படும் ஹீமோகுளோபின் என்றழைக்கப்படும் சிவப்பணுக்களில்தான் 70 சதவீத இரும்புச்சத்து இருக்கிறது. நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் வேலையை இந்த ஹீமோகுளோபின்கள்தான் செய்கின்றன.

ஒருவருக்கு ஹீமோகுளோபின் அளவு குறையும்போது தலைசுற்றல், தலைவலி, சோர்வு மற்றும் அசதி ஏற்படும். இதனால் எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். சில யோகாசனங்களை தொடர்ச்சியாக செய்து வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கான ஆசனங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

உத்தன்பாதாசனம்

விரிப்பில் படுத்து கைகள் இரண்டையும் பக்க வாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி கால்கள் இரண்டையும் சற்றே உயரமாக 45 டிகிரி கோணத்தில் தூக்க வேண்டும். இதேநிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதேபோன்று 3-லிருந்து 5 முறை செய்யலாம்.

சர்வாங்காசனம்

‘சர்வ’ என்றால் முழுமை, உடல் முழுவதையும் பயன்படுத்தி செய்யும் ஆசனம் என்பதே பொருள். முதுகை தரையில் படுத்த நிலையில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறே இரண்டு கால்களையும் மேலே தூக்க வேண்டும்.

கைகள் இரண்டும் இடுப்பைத் தாங்கியவாறு இடுப்போடு, கால்களையும் உயர்த்தவும். கால்கள் இடுப்பு, தோள் நேராக நேர்கோட்டில் இருக்க வேண்டும். தோளுக்கு கீழ் தலையணை முட்டு கொடுக்கலாம். இந்த நிலையில் 2 நிமிடம் முதல் 10 நிமிடங்கள் வரை இருக்கலாம். மெதுவாக மூச்சை வெளிவிட்டவாறு பழைய நிலைக்கு திரும்பவும்.

விபரீதகரணி

விபரீதகரணி `விபரீத’ என்றால் தலைகீழ் என்று பொருள். கரணி என்றால் செயல்பாடு என்று பொருள். நமது உடலை தலைகீழாக புவிஈர்ப்பு சக்தியை நோக்கி வைப்பதால் உடல் உறுப்புகள் வலிமை பெறுகின்றன. விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொண்டு, மூச்சை உள்ளே இழுக்கவும். கால்களை ஒன்றாக நீட்டியபடியே அப்படியே மேலே தூக்க வேண்டும்.

தூக்கும்போது இரண்டு கைகளாலும் இடுப்புக்கு முட்டுக் கொடுக்க வேண்டும். இரு கைகளாலும் இடுப்பைத் தாங்கிய வண்ணம் கால்கள் மட்டும் செங்குத்தாகத் தூக்க வேண்டும். உடல் பாரம் முழுதும் பின் கழுத்து, நெஞ்சின் பின்புறப் பகுதி ஆகியவற்றால் தாங்க வேண்டும்.  இப்போது மூச்சை மெதுவாக வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.

பலன்கள்

அதிகப்படியான ரத்த ஓட்டம் கிடைப்பதால் முதுகுத் தண்டுவடம் உறுதிப்படுத்துகிறது. ரத்த அணு உற்பத்திக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது.  பின்பக்க ரத்த உற்பத்திக்கு உதவுவதால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்டுகிறது. மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் ரத்தசோகையை போக்குகிறது

Tags:    

Similar News