லைஃப்ஸ்டைல்

வயிற்றுவலி, மலச்சிக்கலை குணமாக்கும் பாதாங்குஷ்டாசனம்

Published On 2018-08-02 02:58 GMT   |   Update On 2018-08-02 02:58 GMT
பாதாங்குஷ்டாசனம் வயிற்றுவலி, அஜீரணம், மலச்சிக்கல், தலைவலி, பசியின்மை பிரச்சனையை நீங்கும். இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பாத என்றால் ‘பாதம்’. அங்குஷ்ட என்றால் கட்டை விரல். பாதத்தை தரையில் வைத்து கால் கட்டை விரல்களை பிடித்து செய்யும் ஆசனம் என்பதால் பாதாங்குஷ்டாசனம் என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை:- முதலில் தரை விரிப்பின் மேல் நேராக நிமிர்ந்து நின்று கால்களை அரை அடி அளவு அகற்றி வைக்கவும். கைகள் இரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி மூச்சை உள்ளுக்கு முடிந்த அளவு இழுக்கவும். மூச்சை வெளியே விட்டுக் கொண்டு முன்பக்கமாக குனிந்து கால் கட்டை விரல்களை கைக்கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல்களால் கெட்டியாகப் பிடித்து தலையை மேலே தூக்கவும்.

இந்த நிலையில் 2-3 முறை மூச்சை இழுத்து விடவும். பிறகு மூச்சை வெளியே விட்டு முழங்கால்களின் இடைவெளியில் முகத்தை வைக்கவும். முழங்கால்கள் விறைப்பாக இருக்கட்டும். கால் கட்டை விரல்களைத் தவிர மற்ற விரல்கள் தரைவிரிப்பின் மேல் அழுத்தமாக இருக்கட்டும். முழங்கால்களை மடக்கக் கூடாது.
இந்த ஆசனத்தில் சாதாரண மூச்சுடன் 30-60 வினாடி நிலைத்திருக்க வேண்டும். பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து முழங்கால்களில் விறைப்பை தளர்த்தி, கை விரல்களை விடுத்து நேராக நிமிர்ந்து நிற்கவும். இந்த ஆசனத்தை மேல்கண்ட முறைப்படி 3-5 முறை பயிற்சி செய்யலாம்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்:- முதுகுத் தசை, முழங்கால் பகுதி அல்லது மூச்சின் மீதும் சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சிக் குறிப்பு:- இந்த ஆசனப் பயிற்சியின் போது முழங்காலை மடக்கக் கூடாது. முன் வளைந்து கால் விரல்களை தொட இயலவில்லை என்றால் சுவற்றில் ஒட்டியவாறு நின்று கணுக்கால் பகுதியை இரு கை விரல்களாலும் பிடித்து சில நாட்கள் இந்த ஆசனத்தை பழகலாம்.

தடைகுறிப்பு:- இடுப்பு சந்து வாதம், இடுப்பு வலி, இருதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், குடல் இறக்கம் மற்றும் முதுகில் மிக அதிக அளவு தொந்தரவு உள்ளவர்களும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

பயன்கள்:- தலை, மார்பு, இருதயம், வயிறு, இடுப்பு, தொடைகள், முதுகு, முழங்கால்கள் ஆகிய உறுப்புகள் இந்த ஆசனத்தில் நன்மை அடைகின்றன. வயிற்றுவலி, அஜீரணம், மலச்சிக்கல், தலைவலி, பசியின்மை நீங்கும். மூளை, பிட்யூட்டரி மற்றும் தைராய்டு, சுரப்பிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்தும் ஆற்றல் அதிகரிக்கும், நீரிழிவுக்கு பயனுள்ளது. சுவாச கோளாறு நோய்க்கு பயனுள்ளது. 
Tags:    

Similar News