லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்வது எப்படி?

Published On 2021-11-25 06:19 GMT   |   Update On 2021-11-25 06:19 GMT
மலச்சிக்கலை சரிப்படுத்த நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு உணவு தருவதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதாது. சாப்பிட்ட உணவு சரியாக செரிமானமாகி, மலமாக வெளியேறுகிறதா எனக் கவனிப்பதும் முக்கியம். ஏனெனில் செரிக்கப்பட்ட உணவிலிருந்து சத்துகள் உறிஞ்சப்பட்ட பின் மீதமுள்ள கழிவானது உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இது சரியாக நடக்காவிட்டால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். மலம் வெளியேறாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கலைத் தவிர்க்கும் வழிகளை முறையாக பின்பற்றினாலே போதும். மலச்சிக்கல் பிரச்னை நீங்கிவிடும்; குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

பொதுவாகவே ஒரு வயதுக்கு கீழ் தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு மலம் கழிப்பதில் பெரிதாக சிக்கல் ஏற்படுவதில்லை. தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்காவிட்டால் அது குழந்தைக்கு சரியாகப் பால் கிடைக்காததன் அறிகுறியாக இருக்கலாம். பசும்பால், பாக்கெட் பால் மற்றும் இதர உணவுகளைக் குழந்தைச் சாப்பிட தொடங்கியவுடன்தான்  மலச்சிக்கல் ஆரம்பமாகிறது.

எப்படிக் கண்டுபிடிப்பது?

தொடர்ச்சியாக 2 அல்லது 3 நாள்கள் மலம் கழிக்காமல் இருத்தல்
மலம் கழிக்கும்போது, வலி ஏற்பட்டு அழுவது
மலம் கழிக்க மறுத்து, ஆத்திரமடைவது
மலம் கழிக்க வேண்டுமென்ற பயத்தில் சாப்பிட மறுப்பது
பசியின்மை
எடை குறைவு
மலம் கழிக்கும்போது முகத்தைச் சுருக்கி முக்குவது
மலம் கழிக்க முயற்சி செய்தும் மலம் வெளியேற முடியாமல் குழந்தை அழுவது
மலம் இறுகி வெளியேறும்போது அதில் காணப்படும் ரத்தக் கசிவு
அடிவயிற்றில் வலி
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அது மலச்சிக்கலாக இருக்கலாம்.

மலச்சிக்கலைத் தீர்க்க எளிய வழிகள்

உணவு மாற்றம் அவசியம்:

மலச்சிக்கலை சரிப்படுத்த நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

கேரட், முருங்கைக்காய், தினம் ஒரு கீரை வகைகளோடு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துள்ள காய்களான வெண்டைக்காய், அவரைக்காய், சுரைக்காய், முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மேற்சொன்ன காய்களை நன்கு மசித்துத் தரலாம். பற்கள் இருக்கும் குழந்தைகளுக்கு நன்கு மென்று சாப்பிட சொல்லி வலியுறுத்துங்கள்.

வாழைப்பழம் சிறந்த மலமிலக்கியாக செயல்படும். வாழைப்பழத்தை தனியாகச் சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு பாலுடன் சேர்த்து தரலாம். குழந்தைகளின் மலச்சிக்கலைத் தீர்க்க மலை வாழைப்பழம் பெஸ்ட்.

இரவு ஊறவைத்த 5-10 உலர்திராட்சைகளைக் காலை மற்றும் மாலையில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

பேரீச்சை – 2, அத்திப்பழம் – 1 ஆகியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து காலையில் நன்கு மசித்துக் கொடுக்கலாம்.

கேரட்டை அரைத்து சாறெடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து தரலாம்.

அரிசி உணவை மட்டுமே கொடுக்காமல் உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மைதாவால் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் துரித உணவுகளைக் கட்டாயமாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

மலச்சிக்கலைத் தடுக்கும் தண்ணீர்:

விளையாட்டு ஆர்வத்தில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க மறந்தாலும்கூட தேவையான தண்ணீரைக் குடிக்க பழக்க வேண்டியது அவசியம்.

தினமும் தூங்கி எழுந்த பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்க கொடுங்கள். இதனால் வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்கு பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் கொடுக்கலாம். இது குழந்தையின் செரிமானத்தைத்  தூண்டி மலச்சிக்கலைத் தடுக்கும்.
Tags:    

Similar News