லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளை கற்றுக்கொடுப்பது எப்படி?

Published On 2019-03-12 06:14 GMT   |   Update On 2019-03-12 06:14 GMT
குழந்தைகளின் வேலையை அவர்களே செய்யப்பழக்குவதன் நன்மைகள் மற்றும் பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய அடிப்படைத் தகவல்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளின் வேலையை அவர்களே செய்யப்பழக்குவதன் நன்மைகள் மற்றும் பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய அடிப்படைத் தகவல்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

"பெண்ணோ, பையனோ... நீங்க நல்லாப் படிச்சா மட்டும் போதும். வீட்டு வேலையெல்லாம் நான் பார்த்துகிறேன் என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் பேச்சாக இருக்கும். ஆனால், குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்த வேண்டும். அனைத்தையும் அறியும் வயது இது. சிறு வயதுக் குழந்தைகளாக இருந்தால் 'உனக்குத் தெரியாது, நீ கீழே கொட்டிடுவே, போட்டு உடைச்சிடுவே, உனக்கு எட்டாது, கைல குத்திப்பே... அத தொடாதனு சொல்லியிருக்கேன்ல, கிச்சன் உள்ள வராத' என்று ஏகப்பட்ட கட்டளைகளை நாமே பிறப்பிக்கிறோம். அதில் ஓரளவு நியாயம் உண்டு.

வேலை செய்ய கற்றுக்கொள்ளும் போது பெரியவர்கள் போல் நேர்த்தியாகக் குழந்தைகள் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்ய வேலையை மீண்டும் பெற்றோர் செய்ய வேண்டியதிருக்கும். இதை நேர வீணடிப்பாக நினைக்க வேண்டாம். பொறுமையுடன் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வேலையைக் கற்றுத்தர வேண்டும்.  

வீட்டில் சாப்பாட்டு நேரத்தின் போது தட்டுகளை எடுத்து வருவது, தண்ணீர் பிடித்து வருவது ஸ்பூன் எடுத்து வருவது போன்றனவும், சாப்பிட்ட பிறகு தட்டை எடுத்துக்கொண்டு போய், சிங்கில் போடுவது என வேலைகளை அவர்களுக்கென நிர்ணயம் செய்யுங்கள். துவைத்த துணிகளை மடித்து வைக்க அவர்களுக்குப் பழக்கப்படுத்துங்கள். துவைத்த துணிகளிலிருந்து `உன் துணியை மட்டும் தனியா அம்மாவுக்கு எடுத்துக்கொடு பார்ப்போம்' என்று பிரித்துக்கொடுக்க பழக்குங்கள். அப்படியே அப்பா துணி, அம்மா துணி என்று பிரித்து எடுத்துத் தந்தால் உங்களுக்கு மடித்து வைக்க எளிதாக இருக்கும்.



3 வயதுக் குழந்தையெனில் காய்கறி கடைக்குப் போகும்போது அவர்களுக்குப் பிடித்த காய்கறியை எடுத்துக் கொடுக்கச் சொல்லுங்கள். வாங்கி வந்த காய்கறியை எந்த இடத்தில் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.

பள்ளிக்குப் போக ஆரம்பித்தவுடன், வீட்டுப் பாடங்களை எழுதி முடித்த பிறகு புத்தகங்களை அடுக்கி வைக்கப் பழக்கப்படுத்தலாம். உறங்கச் செல்லும் முன் பென்சில் பாக்ஸில் எல்லாம் இருக்கிறதா, நாளைக்குத் தேவையான நோட்டுப் புத்தகம் பையில் இருக்கிறதா என்பதையும் செக் செய்யச் சொல்லுங்கள்.

8 வயதுக்குப் பிறகு, பள்ளி முடித்து வந்ததும் டிபன் பாக்ஸை கழுவி வைக்கச் சொல்லுவது, சாப்பிட்ட தட்டு, டம்ளரைக் கழுவி வைக்கச் சொல்லலாம். துவைக்க வேண்டிய அவர்களின் ஆடைகளை வாஷிங் மெஷினில் எடுத்துப் போடச் சொல்லலாம்.
Tags:    

Similar News