லைஃப்ஸ்டைல்

குழந்தைகளிடம் மறைந்து வரும் உறவுகளை மலரச் செய்வோம்

Published On 2018-06-25 03:44 GMT   |   Update On 2018-06-25 03:44 GMT
தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆதரவு அளிக்கவும், அறிவுரை கூறவும் சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு வரும்.
வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியின் பாதையில் பரபரப்பாய் நடைபோடும் மனிதன் தன் மூதாதையர்கள் வாழ்க்கையை நினைத்து பார்க்க சற்று நேரம் ஒதுக்க வேண்டும். அவர்கள் காலத்தில் குடும்பம் என்றால் அண்ணன், அக்காள், தங்கை, தம்பி என்று பெரிதாக இருந்தது. பெரும்பாலும் கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்தனர். அவர்கள் தங்கள் உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக பழகினர். இதனால் குடும்பத்தில் உறவுகள் என்னும் பாலம் கட்டுறுதி மிக்கதாக அமைந்திருந்தது.

விசேஷ நிகழ்ச்சியில் உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலைகளை செய்து தங்களுடைய சொந்தம், பந்தங்களை வரவேற்று உபசரிப்பதில் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் உறவுகள் வலுப்பெற்றன. துன்பங்கள் இன்பமாகின. உதவும் மனப்பான்மையை குழந்தைகள் கற்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் தற்போது வீடுகளில் ஒரு குழந்தை போதும் என்றும் தம்பதியினர் முடிவு செய்து, குடும்பம் என்னும் பெரிய வட்டத்தை சிறிதாக மாற்றி விட்டனர். காரணம் பொருளாதார நெருக்கடி, வேலைக்கு சென்று வருமானம் பெற்றால் தான் வாழ முடியும் என்ற நிலை. ஒற்றை குழந்தைக்கு சகோதர பாசம் எட்டாக்கனியாகிவிடுகிறது. பரபரப்பாக இருக்கும் பெற்றோரால், தந்தை-தாயின் பாசமும் குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட குழந்தைகள் காலப்போக்கில் தனிமையை விரும்பும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

பள்ளி விடுமுறை காலங்களில் கூட உறவினர் வீடுகளுக்கு செல்வதை பெற்றோர் தவிர்ப்பதால், எதிர்காலத்தில் சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை என்ற உறவு முறை தெரியாமலே குழந்தைகள் வாழ வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சம் தொற்றி இருக்கிறது.

இந்த நிலை மாற பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு, சொந்த பந்தங்களை யார் என்று எடுத்துக்கூற வேண்டும். அவ்வப்போது உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது தான் சகோதர உறவுகள் வளரும். தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆதரவு அளிக்கவும், அறிவுரை கூறவும் சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு வரும். எனவே, மறைந்து வரும் உறவுகளை மேம்படுத்தி மீண்டும் புத்துணர்ச்சியோடு மலரச் செய்வோம்.

-இளவளவன் 
Tags:    

Similar News