லைஃப்ஸ்டைல்

மதிப்பெண் பெறும் இயந்திரமல்ல மழலைகள்

Published On 2017-06-19 08:19 GMT   |   Update On 2017-06-19 08:20 GMT
எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதனை பற்றி விவாதித்து, அதன் நிறை குறைகளை பட்டியலிடும் வழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
வீட்டு விஷயங்கள், நாட்டு நடப்புகள்பற்றி குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். நிறை குறைகளை பற்றி விவாதியுங்கள். எல்லா விஷயங்களையும் அவர்களுடைய கண்ணோட்டத்தில் சிந்திக்க செய்யுங்கள்.

எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதனை பற்றி விவாதித்து, அதன் நிறை குறைகளை பட்டியலிடும் வழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் தெளிவான கண்ணோட்டத்துடன் எதையும் அணுகி நன்மை, தீமைகளை எளிதில் அறிந்து கொள்ளும் பக்குவம் ஏற்படும். எல்லாவற்றையும் விவாதித்து, உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்ட தொடங்கிவிடுவார்கள்.

பெரியவர்களுக்கு தோன்றாத சந்தேகங்கள் கூட குழந்தைகளிடம் எழலாம். அவர்கள் மத்தியில் எழும் சந்தேகங்களை நோட்டில் எழுத சொல்லுங்கள். அந்த கேள்விகளுக்கான பதிலை யோசித்து அவர்களையே கண்டுபிடிக்க சொல்லுங்கள். அப்படி பயிற்சி கொடுப்பது அவர்களுடைய சிந்தனை ஆற்றலை மேம்படுத்தும். அதன் மூலம் எதையுமே நன்கு சிந்தித்து அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடும்.



ஏராளமான நூல்களை படித்தவர்கள் கூட தனித்திறன்கள் இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் புத்தகங்களை ஆழ்ந்து படிக்காதவர்களும், கல்வி அறிவு அதிகம் இல்லாதவர்களும் கூட சாதனையாளர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். எவ்வளவு படித்தோம் என்பதை விட எப்படி படித்தோம் என்பதுதான் முக்கியம். படித்த விஷயங்களை சிந்தித்து பார்த்து அதன்படி நடக்க வேண்டும்.

படித்த விஷயங்களை பற்றி சிந்திக்கும்போது நிறைய புதிய விஷயங்கள் மனதில் உருவாகும். சிந்தித்து செயல்படும் குழந்தைகளிடம் வெறுமனே மனப்பாடம் செய்து படிக்கும் எண்ணம் தோன்றாது. ஆழ்ந்து கற்று அதில் இருக்கும் தகவல்களை அறிந்து கொள்வார்கள். அது அவர்களுடைய அறிவை கூர்தீட்டும். மதிப்பெண் பெறும் எந்திரமாக அல்லாமல் கற்றறிந்த விஷயங்களை கொண்டு தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்வார்கள்.
Tags:    

Similar News