லைஃப்ஸ்டைல்

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்

Published On 2016-05-17 05:15 GMT   |   Update On 2016-05-17 05:15 GMT
இப்போதெல்லாம் குழந்தைகளை குழந்தையாக வளர்க்கும் பெற்றவர்களை விட ரோபோக்கள் போல வளர்க்கும் பெற்றோர்கள் தான் அதிகம்.
உங்களுக்கு கிடைக்காததை உங்கள் குழந்தைக்கு கொடுக்க விரும்புகிறீர்கள். ஆனால், அது உங்கள் குழந்தைக்கு பிடிக்குமா என்று தெரிந்து தான் தருகிறீர்களா என்பது தான் முக்கியமான கேள்வி.

பெற்றோர்கள் செய்யும் சில தவறுகள் குழந்தைகள் மத்தியில் தன்னம்பிக்கை குறைய பெரும் காரணமாக மாறிவிடுகிறது…

குழந்தைகள் என்றால் தவறு செய்வார்கள் தான். அதற்காக அவர்களிடம் திட்டவோ, கத்தவோ கூடாது. பலமுறை தவறுகள் செய்தாலும் புரியும்படி சொல்லிக் கொடுங்கள். திட்டிக்கொண்டே இருப்பது ஓர் தருணத்தில் திட்டத்தானே போகிறீர்கள் என்ற மனப்பான்மை வந்துவிடும், மேலும் தன்னம்பிக்கை குறைந்துவிடும்.

திட்டுவது ஒருபுறமும், அதீத அக்கறை ஒருபுறமும் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை குறைய காரணியாக இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் தன்னால் முடியும் என்ற எண்ணத்தை குறைத்து விடுகிறது. எனவே, உதவியை நாட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

தவறுகள் செய்தால் தட்டிக் கொடுத்து புரிய வையுங்கள். பொதுவிடங்களில் மற்றவர்கள் முன்னே அவமானம் செய்ய வேண்டாம். குழந்தையாக இருந்தாலும், அவர்கள் வயதுடைய நபர்கள் முன்பு அவர்களுக்கும் கெளரவம் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் கூட தாங்கள் செய்த காரியங்களுக்குக் பாராட்டு எதிர்பார்பார்கள். எனவே, அவர்கள் சின்ன சின்ன செயல்களுக்கும் பாராட்டுங்கள். அப்போது தான் அவர்களுக்குள் தன்னம்பிக்கை வளரும்.

மற்ற குழந்தைகள் நன்கு படிக்கின்றன என்றால், உடனே தங்கள் குழந்தையுடன் அமர்ந்துக் கொண்டு படி, படி நச்சரிப்பது கூடாது. உங்கள் போட்டி மனப்பான்மைக்கு குழந்தைகளை பலியாக்கிவிட வேண்டாம்.

ஒழுக்கம் மிகவும் அவசியம் தான். ஆனால், அதற்காக தொட்டதற்கெல்லாம் ஒழுக்கமாய் இரு, ஒழுக்கமாய் இரு என கூறி குழந்தைகளை கூண்டுக்குள் அடைத்துவிட வேண்டாம். இது அவர்களுக்குள் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படுத்தலாம்.

Similar News