கால்பந்து

விளையாடி கொண்டிருந்த இந்தோனேசிய கால்பந்து வீரர் மின்னல் தாக்கி பலி- வைரலாகும் வீடியோ

Published On 2024-02-13 07:02 GMT   |   Update On 2024-02-13 07:02 GMT
  • இந்தோனேசியாவில் கால்பந்து விளையாட்டின்போது வீரரை மின்னல் தாக்குவது என்பது முதன்முறையல்ல.
  • கடந்த 2023-ம் ஆண்டு 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கோப்பைக்காக கிழக்கு ஜாவாவில் நடந்த போட்டியின்போது, இளம் வீரர் ஒருவரை மின்னல் தாக்கியது.

மேற்கு ஜாவா:

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் பாந்துங் பகுதியில் சிலிவாங்கி ஸ்டேடியத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ஒன்று நடந்தது.

அப்போது, விளையாட்டின் நடுவே சுபாங் நகரை சேர்ந்த செப்டேன் ரஹார்ஜா (வயது 35) என்ற வீரர் மீது மின்னல் ஒன்று கடுமையாக தாக்கியது. எனினும், அப்போது அவர் மூச்சு விட்டபடியே காணப்பட்டார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார்.

இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது. அதில், செப்டேனை சரியாக மின்னல் தாக்கும் காட்சிகளும், உடனே அவர் விளையாட்டு களத்தில் சுருண்டு விழும் காட்சிகளும் உள்ளன.

அந்த மின்னல் ஸ்டேடியத்திற்கு 300 மீட்டர் உயரத்தில் இருந்தே தாக்கியுள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் பகுப்பாய்வு தெரிவித்து உள்ளது.

இந்தோனேசியாவில் கால்பந்து விளையாட்டின்போது வீரரை மின்னல் தாக்குவது என்பது முதன்முறையல்ல. கடந்த 2023-ம் ஆண்டு 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கோப்பைக்காக கிழக்கு ஜாவாவில் நடந்த போட்டியின்போது, இளம் வீரர் ஒருவரை மின்னல் தாக்கியது.

இதனால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை நடந்த 20 நிமிடங்களுக்கு பின்னர் சுயநினைவுக்கு திரும்பினார்.

Tags:    

Similar News