போட்டியின் பாதியில் வெளியேறி மீண்டும் களம் திரும்பி வாகை சூடிய செனகல்- புகார் அளித்த மொராக்கோ
- நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் செனகல்- மொராக்கோ அணிகள் மல்லுக்கட்டின.
- கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கினார்
ரபாத்:
நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் மொராக்கோவின் ரபாத் நகரில் நடந்தது. இதில் செனகல்- மொராக்கோ அணிகள் மல்லுக்கட்டின. தொடக்கம் முதலே பரபரப்பாக நகர்ந்த ஆட்டத்தில் வழக்கமான நேரத்தில் எந்த அணியினரும் கோல் போடவில்லை.
கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கினார். இது ஒருதலைபட்சமான முடிவு என்று எதிர்ப்பு தெரிவித்த செனகல் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
அத்துடன் மைதானத்திற்குள் ரசிகர்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சர்ச்சையால் 14 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. பிறகு ஒரு வழியாக சமாதானம் அடைந்த செனகல் வீரர்கள் மீண்டும் களம் திரும்பினர்.
பெனால்டி வாய்ப்பில் மொராக்கோ வீரர் பிராஹிம் டியாஸ் அடித்த ஷாட்டை செனகல் கோல் கீப்பர் எடுவர்டோ மென்டி எளிதில் தடுத்தார். தொடர்ந்து கூடுதல் நேரத்தில் செனகல் வீரர் பாப் கியே கோல் போட்டு அசத்தினார்.
முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் செனகல் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது. ஆனால் ஆட்டத்தில் பாதியில் நடையை கட்டிய வீரர்களின் செயலை வன்மையாக கண்டித்துள்ள சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் இன்பான்டினோ இது போன்ற சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். செனகல் அணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.