வழிபாடு

மதுரவாசல் ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2023-03-27 06:37 GMT
  • இந்த கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
  • நாளை முதல் 48 நாட்கள் மண்டலபிஷேக விழா நடக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், மதுரவாசல் கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ருக்மணி நாயிகா சமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று காலை நடைபெற்றது.

இதை முன்னிட்டு சனிக்கிழமை மாலை அனுக்ஞை,வேத பிரபந்தம் தொடக்கம்,அங்குரார்பணம், கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்று காலை கும்ப திருவாராதனம்,மகா சாந்தி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்,நவக்கலச ஸ்தாபனம்,மகா சாந்தி, திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெற்றது.

இன்று காலை விஸ்வரூபம்,மகாபூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், ஆரணி தாசரதி பட்டாச்சாரி தலைமையில் புனித நீர் அடங்கிய கலசங்களை பட்டாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.காலை 9 மணிக்கு விமான கோபுரம்,மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

இதன் பின்னர்,மூலவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர்,பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம், அன்னதானம் உள்ளிட்டவைகள் கோவில் வளாகத்தில் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உற்சவர் மாட வீதி வழியாக திருவிதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்,ஊராட்சி மன்ற தலைவர் கீதா கணபதி மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.எஸ்.வரதராஜன் தலைமையில் திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.நாளை முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேக விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Tags:    

Similar News