வழிபாடு

வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா

Published On 2022-06-11 03:58 GMT   |   Update On 2022-06-11 03:58 GMT
  • சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது.
  • விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமிக்கு திருமண மொய் எழுதினர்.

மணப்பாறை அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில் வீரமலையின் அடிவாரத்தில் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் செல்வவிநாயகர், வீரியாயி, கருப்பசாமி, கன்னிமார், ஆஞ்சநேயர், பட்டவன் ஆகிய சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இக்கோவிலில் புதிதாக உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை விழா மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யான உற்சவ விழா நேற்று நடைபெற்றது.

காலையில் உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து வீரமலைப்பாளைத்தில் உள்ள வீரியாயி கோவிலில் இருந்து அரிசி, பழம், லட்டு, ஜிலேபி, முறுக்கு, அதிரசம், தேங்காய், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் அடங்கிய 120 சீர்வரிசை தட்டுகளை பொதுமக்கள் சுமந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சுவாமிகளுக்கு திருமண சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமிக்கு திருமண மொய் எழுதினர். பக்தர்களுக்கு ஆன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தொப்பம்பட்டி, வீரப்பூர், வீரமலைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News