வழிபாடு

பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தியபோது எடுத்தபடம்.

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Update: 2023-03-27 06:56 GMT
  • ஏப்ரல் 2-ந்தேதி புஷ்ப பல்லாக்கு விழா நடக்கிறது.
  • 9-ந்தேதி கடை ஞாயிறு திருவிழா நடக்கிறது.

வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிராம வழிபாட்டுதலமாகவும், சக்தி தலமாகவும் போற்றப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 10-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 12-ந்தேதி முதல் காப்பு கட்டுதல், 19-ந்தேதி 2-ம் காப்பு கட்டுதல் நடந்தது. விழா நாட்களில் தொடர்ந்து அம்மன் வீதிஉலா காட்சி நடைபெற்று வந்தது.

இந்த கோவிலில் பக்தர்கள் பாடைகாவடி எடுக்கும் நிகழ்வு முக்கிய நிகழ்ச்சியாகும். அதாவது நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து குணமடைய, மகா மாரியம்மனை வேண்டிக்கொள்வர். நோயில் இருந்து குணமடைந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனாக பாடை காவடி எடுப்பர்.

அதன்படி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பாடைகாவடி நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக பக்தர்கள் கோவில் அருகே உள்ள குடமுருட்டி ஆற்றிங்கரையில் இருந்து பச்சை ஓலை படுக்கையுடன், பச்சை மூங்கிலால் பாடைகட்டி இறந்தவரை போல படுக்க வைத்து இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்வர்.

பின்னர் அந்த பாடை காவடியை அருகிலுள்ள குடமுருட்டி ஆற்று பகுதியிலிருந்து உறவினர்கள் 4 பேர் தூக்கி வந்து, மகா மாரியம்மன் கோவிலை 3 முறை வலம்வந்து தங்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்துவார்கள். நேற்று நடந்த இந்த திருவிழாவில் பாடை காவடி, பால்குடம், பால்காவடி, பறவைக்காவடி, செடில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை உள்ளூர் மட்டுமின்று, வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாலையிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரித்த நிலையில், நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர்.

முன்னதாக கோவில் கருவறை அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் பல்வேறு விதமான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. இதில் விசலூர் கிராமத்தில் இருந்து செம்மறி ஆடு கரகம் அழைத்து வரப்பட்டு, கோவில் எதிரே அமைக்கப்பட்டுள்ள செடில் மரத்தில் செம்மரியாடு ஏற்றப்பட்டு 3 முறை வலம் வந்ததன் மூலம் திருவிழா நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சி தலைவர் சர்மிளா சிவனேசன் மற்றும் செயல் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தனர். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருவையாறு, மன்னார்குடி, மயிலாடுதுறை, பாபநாசம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

வருவாய்த்துறை, இந்துசமய அறநிலையத்துறை, தீயணைப்புத்துறை, போலீஸ் துறை, சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் பக்தர்கள் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டனர்.

கோவில் மற்றும் சுற்றுப்புற வளாகம் நகரின் முக்கிய பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மணவழகன் தலைமையில், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி, மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து அடுத்த மாதம்(ஏப்ரல்) 2-ந்தேதி புஷ்ப பல்லாக்கு விழாவும், 9-ந்தேதி கடை ஞாயிறு திருவிழாவும் நடக்கிறது.

Tags:    

Similar News