வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை நடந்த காட்சி


திருமலையில் பவுர்ணமி கருட சேவை: சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரமாகிறது

Published On 2022-09-11 01:31 GMT   |   Update On 2022-09-11 05:54 GMT
  • தங்கம், வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார் உற்சவர் மலையப்பசாமி.
  • மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கருடவாகன சேவை நடக்கிறது.

பவுர்ணமி தினமான நேற்றிரவு ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் கருட வாகன சேவை வெகுவிமரிசையாக நடந்தது . இதை முன்னிட்டு, உற்சவர் ஏழுமலையான் சர்வ நிலையில், அலங்கார திருக்கோலம் பூண்டு கோவிலிலிருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார்.

அங்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சாமிக்கு தீப, நைவேத்திய சமர்ப்பணம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கருடவாகன சேவை நடந்தது .

பவுர்ணமி கருட சேவையொட்டி திருப்பதியில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சாமி தரிசனத்திற்காக இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.

அதனை தாண்டி 5 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். இன்று காலையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனது. ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டில் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 27-ந் தேதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இந்த விழாவில் கருட சேவை இரவு 7 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News