வழிபாடு

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் தொடக்கம்

Published On 2022-10-27 07:40 GMT   |   Update On 2022-10-27 07:40 GMT
  • நாளை முதல் 30-ந்தேதி வரை சுப்பிரமணியசாமி ஹோமம் நடக்கிறது.
  • அனைத்துப் பக்தர்களும் ஹோமத்தில் பங்கேற்று வழிபடலாம்.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஒரு மாதம் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கணபதி ஹோமத்துடன் ஹோம மஹோற்சவம் தொடங்கியது.

அதையொட்டி நேற்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், சந்தனம், விபூதி ஆகியவற்றால் திருமஞ்சனம் நடந்தது. மாலை கணபதி பூஜை, புண்யாஹவச்சனம், வாஸ்துபூஜை, பர்யாக்னிகரணம், மிருதசங்கிரஹணம், அங்குரார்ப்பணம், கலச ஸ்தாபனம், அக்னிபிரதிஷ்டை, கணபதி ஹோமம், லகு பூர்ணாஹூதி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) கணபதி ஹோமம் நடக்கிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 30-ந்தேதி வரை சுப்பிரமணியசாமி ஹோமம் நடக்கிறது. 30-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 31-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், நவம்பர் மாதம் 1-ந்தேதி கால பைரவர் ஹோமம், 2-ந்தேதி நவக்கிரஹ ஹோமம், 3-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை காமாட்சி ஹோமம் (சண்டியாகம்), 12-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் (ருத்ர யாகம்) நடக்கிறது. 22-ந்தேதி சிவன்-பார்வதி திருக்கல்யாணம் நடக்கிறது. 23-ந்தேதி சண்டிகேஸ்வரர் ஹோமம், திரிசூல ஸ்நானம், பஞ்சமூர்த்திகள் வழிபாடு நடக்கிறது.

அனைத்துப் பக்தர்களும் ஹோமத்தில் பங்கேற்று வழிபடலாம். பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த ஹோம மஹோற்சவத்தின் ஒரு பகுதியாக புனித கபில தீர்த்தத்தில் நீராடி கபிலேஸ்வரர் சன்னதியில் நடக்கும் ஹோமத்தில் பங்கேற்று வழிபட்டால் பாவம் விலகி புண்ணிய பலன் கிடைக்கும் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News